ஜே.வி.பி.யும் ஜனாதிபதி தேர்தலும்!

ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.)  தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்காக ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மாபெரும் பேரணியின்போது கொழும்பு காலிமுகத்திடலில் பெருக்கெடுத்த மக்கள் வெள்ளம் நிச்சயமாக அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் இலங்கையில் வேறு எந்த அரசியல் பேரணியிலும் நாம் கண்டிராததாகும்.

சுமார் 30 அரசியல் கட்சிகள், குழுக்கள், சிவில் சமூக  மற்றும் புத்திஜீவிகள் அமைப்புக்களை உள்ளடக்கிய இந்த இயக்கத்தின் பேரணி இடதுசாரி ஆதரவாளர்களுக்கு  குறிப்பாக, பழைய இடதுசாரிக்கட்சிகள் பெரும் செல்வாக்குடன் செயற்பட்ட காலகட்ட அனுபவங்கைளைக் கொண்டவர்களுக்கு ஒரு ‘ மருட்சியை ‘ ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

காலிமுகத்திடல் எங்கும் மனித தலைகளுக்கு மேலாக செங்கொடிகள் பட்டொளிவீசிப் பறந்த காட்சியினால் பரவசமடைந்த அந்த இடதுசாரி ஆதரவாளர்கள் இந்த பேரணியை  காலிமுகத்திடலில் 55 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இடதுசாரிக்கட்சிகளின் இரு பேரணிகளுடன் ஒப்பீடு செய்வதில் முந்திக்கொண்டனர். ஒன்று, இடதுசாரி ஐக்கிய முன்னணியின் 1963 மேதின ஊர்வலமும் பேரணியும்.அது லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி என்.எம்.பெரேரா, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கலாநிதி எஸ்.ஏ.விக்கிரமசிங்க  மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிலிப் குணவர்தன ஆகியோரின்  தலைமையில்  நடைபெற்றது.மற்றையது,  கூட்டுத்தொழிற்சங்க கமிட்டி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான  அரசாங்கத்திடம் முன்வைத்த 21 அம்சக் கோரிக்கைக்கு ஆதரவாக என்.எம்.பெரேரா தலைமையில் 1964 மார்ச் 25  நடத்தப்பட்ட பேரணியாகும்.

அவை  இலங்கையில் இடதுசாரி கட்சிகளும் தொழிற்சங்க இயக்கமும் ஐக்கியப்பட்ட நிலையில் உச்சசெல்வாக்கில் இருந்த காலகட்டத்தில் நடந்த பேரணிகள்.அதற்கு பிறகு பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த இடதுசாரி கட்சிகள் 21 அம்சக் கோரிக்கைக்கு  துரோகம் செய்து திருமதி பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் இணைந்துகொண்டதையடுத்தே இடதுசாரி இயக்கத்தின் வீழ்ச்சி தொடங்கியது.

தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின்  பேரணியில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் கலந்துகொண்டதாக மதிப்பிடப்படுகிறது. பிரதான அரசியல்கட்சிகளுக்கு  மாத்திரமே காலிமுகத்திடலை மக்களால் நிரப்பக்கூடிய வல்லமை இருக்கிறது என்ற நினைப்பை ஜே.வி.பி.தகர்த்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ( அதை ஐ.தே.க..வுக்கு ஆதரவான மக்கள் கூட்டம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்தவாரம் அலரிமாளிகையில் சில ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கூறியதாகவும் கூட  தெரியவருகிறது.)

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜே.வி.பி.யின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நேசக்கட்சிகளினதும்   அமைப்புக்களினதும் தலைவர்கள் எல்லோரும் பின்புலத்தில் அமர்ந்திருக்க பிரமாண்டமான மேடையில் நின்று   சீனாவினால் நிருமாணிக்கப்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகரை நோக்கியவாறு செய்த முழக்கமும் அலைதழுவமுடியாமல் மணலால்  நிரம்பிப்போயிருக்கும் காலிமுகத்திடல் கடலோரத்தில்  அலைக்குப் பதிலாக  ஆர்ப்பரித்த செஞ்சட்டை மக்கள்  வெள்ளமும் சில இடதுசாரி அரசியல் அவதானிகளுக்கு  இடதுசாரி அரசியல் மீளெழுச்சி  தொடுவானில் தென்படுவது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பதை கடந்தவாரம் அவர்களின் எழுத்துக்கள் வெளிப்படுத்தின. பல தசாப்தங்களுக்கு பிறகு முற்போக்கு — இடதுசாரி — ஜனநாயக சக்திகளை நோக்கி மக்களின் அணிதிரள்வு ஒன்று வெளிக்கிளம்புவதாக ஒரு அவதானி நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த முன்னைய தலைமுறை இடதுசாரி ஆதரவாளர்கள்  இவ்வாறு எதிர்பார்ப்புக்களையும் ஏக்கங்களையும் கொண்டிருக்கின்ற அதேவேளை, ஜே.வி.பி.தலைமையிலான தற்போதைய அணிதிரட்டலை தென்னிலங்கை இளையதலைமுறையினர் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பது முக்கியமானதாகும்.இரு பிரதான அரசியல் முகாம்கள் மீதான அவர்களின் சலிப்பும் வெறுப்பும் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளருக்கான கணிசமான ஆதரவாக மடைமாறக்கூடிய சாத்தியப்பாடு தோன்றுமேயானால், அதை நிச்சயமாக ஒப்பீட்டளவில்  நேர்மறையான அம்சம் என்று கூறமுடியும்.

 ஏனென்றால், இலங்கையின்  அரசியல் கலாசாரத்தில்  ஏதாவது பயனுறுதியுடைய மாறுதல் ஏற்படவேண்டுமானால், இரு பிரதான அரசியல் முகாம்களினதும் ஆதிக்கம் பெருமளவுக்கு தளர்வுறச்செய்யப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். சகல சமூகங்கள் மத்தியிலும்  பரந்தளவுக்கு ஆதரவைக்கொண்ட வலுவான மூன்றாவது அரசியல் அணியொன்றினால்   மாத்திரமே அதைச் சாதிக்கக்கூடியதாக இருக்கும். தேசிய மக்கள் சக்தி இயக்கத்தினால்  அதைச்செய்யமுடியுமா?

ஜே.வி.பி.யும் அதன் நேசசக்திகளும் ஊர்வலங்களையும் பேரணிகளையும் கண்ணைக்கவரும் வகையில்  கட்டுக்கோப்புடன் ஒழுங்கு செய்வதில் அபாரத்திறமை கொண்டவை  என்று பெயரெடுத்தவை. அவர்களின்  பேரணிகளில் மக்களும் பெரும் திரளாக கலந்துகொள்வார்கள். ஆனால், அந்த பாராட்டும் ஆதரவும் தேர்தல்கள் என்று வரும்போது ஜே.வி.பி.யின் வேட்பாளர்களுக்கான வாக்குகளாக மாறுவதில்லை என்பதே வரலாறு.கடந்த வாரம் அநுரா திசாநாயக்கவை நேர்காணலுக்காக சந்தித்த செய்தியாளர் ஒருவர் இதைச் சுட்டிக்காட்டியபோது ” நீங்கள் கூறுவது முற்றுமுழுதாக உண்மை ” என்று அவர் ஒத்துக்கொண்டாராம்.

இலங்கையில் இதுவரையில் 7 ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் இரு தேர்தல்களில் மாத்திரமே ஜே.வி.பி.போட்டியிட்டிருக்கிறது. 1982 அக்டோபர் 20 நடைபெற்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி.யின் தாபகத்தலைவர் ரோஹண விஜேவீர போட்டியிட்டார்.அவர் அதில் 273,428 ( 4.19 % ) வாக்குகள் பெற்றார்.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தனது இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்கு நடத்திய அந்த தேர்தலில் போட்டியிட்ட ஏனைய இடதுசாரி தலைவர்களான கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா ( 58,538 வாக்குகள் )வையும் வாசுதேவ நாணயக்கார ( 17,005 வாக்குகள் ) வையும் விட  கூடுதல் வாக்குகளை வீஜேவீரவினால் பெறக்கூடியதாக இருந்தது.

இரண்டாவது தடவையாக ஜே.வி.பி. 1999 டிசம்பர் 21 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டது. ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது இரண்டாவது  பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்காக நடத்திய அந்த தேர்தலில் ஜே.வி.பி.யின் வேட்பாளரான நந்தன குணதிலக 344,173 வாக்குகளைப் ( 4.08 % ) பெற்றார். விஜேவீரவும் குணதிலகவும் ஒரு தொலைதூர மூன்றாவது இடத்தையே பெறக்கூடியதாக இருந்தது.

அதற்கு பிறகு  ஜே.வி.பி. ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவதைத் தவிர்த்துக்கொண்டது. சரியாக 20 வருடங்களுக்கு பிறகு பல சிறிய அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களை அணிசேர்த்துக்கொண்டு அது ஜனாதிபதி தேர்தலில் தலைவரைக் களமிறக்கியிருக்கிறது.

விஜேவீரவையும்  குணதிலகவையும் போன்று அநுரா திசாநாயக்கவும் இரு பிரதான முகாம்களின் வேட்பாளர்களில் இருந்து ஒரு தொலைதூர மூன்றாம் இடத்துக்குத்தான் வரக்கூடியதாக இருக்குமா அல்லது கணிசமான வாக்குகளைப் பெற்று அண்மித்த மூன்றாம் இடத்துக்கு வருவாரா? அல்லது பிரதான இரு வேட்பாளர்களும் முதல் எண்ணிக்கையில் 50 % + 1 வாக்குகளைப் பெறமுடியாத நிலையை அவரால் உருவாக்கக்கூடியதாக இருக்குமா ?

அவர் போட்டியிடுவதால் பிரதான முகாம்களில் எந்த முகாமின் வேட்பாளரின் வாக்கு வங்கிக்கு பாதிப்பு ஏற்படும் ? ஜே.வி.பி. பெறுகின்ற வாக்குகள் பாரம்பரியமாக ஐ.தே.க.வுக்கு எதிரானவையாகவே இருந்து வந்திருக்கின்றன. ஜே.வி.பி.யின் அண்மைக்கால அரசியல் அணுகுமுறைகள் காரணமாக அந்த பாரம்பரிய ஐ.தே.க. விரோத வாக்குகள் ஜே.வி.பி.க்கு ஆதரவானவையாகவே  தொடருகின்றனவா ? இவையெல்லாம் விடைவேண்டி நிற்கும் கேள்விகள்.

வீ.தனபாலசிங்கம்