அவசரகால சட்டத்தை நீக்கினாலும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும், தற்போது பயங்கரவாத பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியலுக்கும் மற்றும் அவர்களின் சொத்துகளை தடைசெய்வதற்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காவல் துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஊடகமொன்றில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் அவதானம் செலுத்திய பொலிஸ் தலைமையகம், இந்த செய்தி தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவினை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு அறிவித்தலை மேற்கொள்வதாகவும் காவல் துறை அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் அடிப்படைவாதத்தை போதிக்கும் மூன்று அமைப்புகள் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளன. அதன்படி தேசிய தௌஹீத் ஜமாஅத் , ஜமாஅத்தே மில்லாது இப்ராஹிம் மற்றும் விலயா அஸ் செய்லானி எனப்படும் மூன்று அடிப்படைவாத அமைப்புகள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அவசர காலச் சட்டத்தை நீக்குவதனால் இவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் நீக்கப்படும் என்பது தவறானதாகும்.
இந்த அமைப்புகள் கடந்த மே மாதம் 13 ஆம் திகதி தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன. அதற்கமைய 22233 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த தடைதொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்போது 1979 ஆம் ஆண்டு 48ஆம் இலக்க சட்ட கோவைக்கமையவே இந்த அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவசரகால சட்டத்தை நீக்குவதானாலும் இந்த அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஒருபோதும் நீக்கப்படாது.
அதேவேளை பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 200 பேரும் , அவசரகால சட்டத்தை நீக்குவதனால் விடுதலை செய்யப்படுவதாக குறிப்பிட்டிருப்பதும் சாத்தியமற்றது. இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் விசாரணைகள் முடிவுரும் வரை எந்த சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். மற்றும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் மேலும் சந்தேக நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர். இந்த விசாரணை செயற்பாடுகளுக்கு அவசரகால சட்டம் நீக்கம் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.