விஞ்ஞானியாக விரும்பும் யுவலட்சுமி

அப்பா, அம்மா கணக்கு படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் யுவலட்சுமி. அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தும் தற்போது படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

தற்போது பிளஸ் 1 படித்து வரும் யுவலட்சுமிக்கு ஒரு விஞ்ஞானியாகி மக்களுக்கு பயன்படும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டும் என்பதுதான் லட்சியமாம்.

காரைக்கால் தான் யுவலட்சுமியின் சொந்த ஊர். அப்பா பாண்டிச்சேரி அரசு பணியில் இருக்கிறார். 6 வயதிலிருந்து பரதநாட்டியம் கற்று வருகிறார். அதில் திறமையை காட்டி பல பரத நாட்டிய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றிருக்கிறார்.

கடந்த ஆண்டு சிறந்த நடனத்துக்கான தேசிய விருது பெற்றார். யுவலட்சுமி 4ம் வகுப்பு படிக்கும்போது பார்வை என்ற குறும்படத்தில் பார்வையற்ற சிறுமியாக நடித்திருக்கிறார்.

இந்த குறும்படத்தை பார்த்த சமுத்திரகனி தனது அப்பா படத்துக்கு அவரை தேர்வு செய்தார். அவர்தான் அம்மா கணக்கு படத்துக்கும் சிபாரிசு செய்துள்ளார். இரண்டு படங்களுக்கு பிறகு நல்ல புகழ் கிடைத்தாலும் படிப்புதான் முக்கியம் என்று படிக்க போய்விட்டார்.

“எப்போதும் படிப்புக்குத்தான் முக்கியத்துவம் தருவேன். அடுத்து பரத நாட்டியம். சினிமா நான் எதிர்பாராத துறை, இப்போது பிளஸ் 2 முக்கியமான வகுப்பு என்பதால் நடிப்பில் தீவிர கவனம் செலுத்துகிறேன். 10ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தேன் பிளஸ் 2வில் இன்னும் அதிகமாக ஸ்கோர் பண்ண வேண்டும் என்பதற்காக தீவிரமாக படிக்கிறேன்.

நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறைவாக இருக்கிறது. நான் மக்களுக்கு பயன்படுகிற மாதிரி ஏதாவது ஒன்றை கண்டுபிடிப்பேன். நல்ல வாய்ப்புகள் வந்தால் என் படிப்பு பாதிக்காத அளவில் சினிமாவில் நடிப்பேன்” என்கிறார் யுவலட்சுமி.