அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்த அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள அகதிகளுக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அவுஸ்திரேலிய வைத்தியசாலைக்கு அனுப்ப, மருத்துவ வெளியேற்ற சட்டம் அனுமதிக்கின்றது.
தற்போது, அதனை நீக்கும் விதமாக பாராளுமன்றத்தில் ‘புலம்பெயர்வு சட்ட திருத்த மசோதாவை’ ஆளும் லிபரல் கூட்டணி அரசு சமர்பித்துள்ளது.
மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள மருத்துவ வசதி அகதிகளுக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்கும் விதத்தில் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது எனக் மனித உரிமை கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலிய இயக்குனர் எலைனி பியர்சன் கூறியிருக்கிறார்.
அந்த வகையில், லிபரல் அரசின் இம்மசோதாவுக்கு அகதிகள் நல செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மருத்துவ வெளியேற்ற சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
1. ஓர் அகதி அல்லது தஞ்சக்கோரிக்கையாளரை அவுஸ்திரேலியாவுக்கு இடம் மாற்ற இரண்டு அல்லது அதற்கு அதிகமான மருத்துவர்களிடம் மருத்துவ அறிவுரை பெற வேண்டும்.
2. அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கு இந்த இடமாற்றத்தை நிராகரிக்கும் அதிகாரம் உண்டு. எவரை நிராகரிக்கலாம்? சம்பந்தப்பட்ட அகதி மருத்துவபரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தால் நிராகரிக்கலாம். சம்பந்தப்பட்ட அகதியை இடமாற்றுவது பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என சந்தேகித்தால் நிராகரிக்கலாம். சம்பந்தப்பட்ட அகதியின் மீது குறிப்பிடத்தக்க குற்றப்பதிவுகள் இருந்தால் நிராகரிக்கலாம். இது குறித்த முடிவை 72 மணிநேரத்திற்குள் எடுக்க வேண்டும்.
3. சம்பந்தப்பட்ட அகதியின் இடமாற்ற கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் இவ்விவகாரம் சுதந்திர சுகாதார ஆலோசனைக் குழுவின் பார்வைக்கு செல்லும். இரண்டாவது முறையாக பரிசீலித்து 72 மணிநேரத்திற்குள் தங்கள் முடிவினை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
4. எவருக்கு பொருந்தும்? இந்த மருத்துவ வெளியேற்ற சட்டம் தற்போது நவுரு மற்றும் மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். புதிதாக படகுகளில் வருபவர்களுக்கு பொருந்தாது.
5. சம்பந்தப்பட்ட அகதி அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அவர் தடுப்புக்காவலிலேயே வைத்திருக்கப்படுவார்.
இந்த மருத்துவ வெளியேற்ற மசோதா எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பொழுதே அதனை ஏற்க மறுத்தது ஆளும் லிபரல் கூட்டணி அரசு.
அந்த வகையிலேயே, தற்போது அச்சட்டத்தின் அம்சங்களை நீக்கும் வகையில் திருத்த மசோதாவை ஆளும் அரசு நாடாளுமன்றத்தில் சமர்பித்து இருக்கின்றது.