ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை (தேர்தல் விஞ்ஞாபனம்) தயாரிப்பதற்கு அவசியமான தேர்தல் முன்கள நிலைமை இன்னும் கனியவில்லை. ஆனால் வேட்பாளராகக் களமிறங்கியிருப்பவர்களும், வேட்பாளர்களாவதற்குத் தயாராகி வருபவர்களும் தேர்தல் கால வாக்குறுதிகளை அள்ளி வீசத் தொடங்கிவிட்டார்கள்.
அவர்களுடைய வாக்குறுதிகளில் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்பது குறித்து தெளிவான உறுதியான நிலைப்பாட்டைக் காண முடியவில்லை. அதுகுறித்து அவர்கள் தமது அதிகாரபூர்வமான தேர்தல் உறுதிமொழிகள் தொடர்பான அறிக்கையில் தெளிவாகக் கூறுவதற்காகக் காத்திருக்கின்றார்களோ தெரியவில்லை.
வேட்பாளராக முதலாவது அறிவிக்கப்பட்ட பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த கோத்தபாய ராஜபக் ஷ தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். நாட்டின் இறைமைக்குள் வெளிச் சக்திகள் எதுவும் தலையிட முடியாது என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்துள்ள போதிலும் அரசியல் தீர்வு குறித்து கருத்து வெளியிடவில்லை. அரசியல் விடயங்களை தனது சகோதரர் மஹிந்த ராஜபக் ஷ பார்த்துக் கொள்வார் என்ற நிலைப்பாட்டையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஜே.வி.பி. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்காவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பற்றியோ அல்லது தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள ஏனைய பிரச்சினைகள் குறித்தோ கருத்து கூறாமல் தவிர்த்துள்ளார். இது சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர் கையாண்டுள்ள ஓர் உத்தியாகவே நோக்கப்படுகின்றது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக நியமிக்கப்பட்ட அரசியல் பேரவை ஏற்றுள்ள அதிகாரப் பகிர்வுக் கோட்பாடே தமிழ் மக்கள் அரசியல் தீர்வுக்காகக் கொண்டுள்ள எதிர்பார்ப்பு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு என பிரதமரும் அந்தக் கட்சியின் தலைவருமாகிய ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு
இலங்கை ஜனநாயகக் குடியரசு என்ற அரசியல் கட்டமைப்புக்குள் சமத்துவம், சுயமரியாதை, கௌரவத்துடன் தங்களுடைய விடயங்களைத் தாங்களே முடிவெடுத்துக் கையாளும் வகையில் வாழ வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் அவர் யாழ்ப்பாண விஜயத்தின்போது, நிகழ்வொன்றில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு என்ன என வினவியதற்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் நெருங்கி வருகின்ற ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ்ப்பிரதேசமாகிய வடபகுதிக்கு விஜயம் செய்த பிரதமர் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் குறித்தும், அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு பற்றியும் தாமாகவே தமது கவனத்தைக் குவிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் அவர் காட்டிய அக்கறையும் ஆர்வமும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் அவர்களின் அரசியல் நலன்களிலும் காட்டப்படவில்லை என்றே கூற வேண்டும்.
சுமந்திரனுடைய கேள்விக்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்கள் சமத்துவம், சுயமரியாதை, ஆட்சி உரிமைக்கான அதிகாரப் பகிர்வு என்பவற்றுடன் வாழ வழி செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஐக்கிய தேசிய கட்சி கொண்டிருந்த போதிலும், அதனை நிறைவேற்றுவதற்கு அவசியமான அறுதிப் பெரும்பான்மை பலம் தமது கட்சிக்கு இன்னும் கிடைக்கவில்லை. அத்தகைய அரசியல் பலம் கிடைத்தால் இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் ஆதரவை உளப்பூர்வமாகத் தேடுகின்ற மனப்பாங்குடன் இந்தக் கருத்து அவரிடம் இருந்து வெளிவந்ததாகத் தெரியவில்லை. எப்படியாவது வருகின்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து வரவுள்ள பொதுத் தேர்தலிலும் தாங்கள் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார் என்று உய்த்துணர முடிகின்றது.
சிக்கலான நிலைமைகள்
ஏனெனில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும், ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து வரலாற்றில் முதற் தடவையாக தேர்தலை எதிர்கொண்டு வெற்றியீட்டியிருந்த போதிலும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் உளப்பூர்வமாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தவறிவிட்டது.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை வெட்டிக் குறைப்பதற்கு அரசியலமைப்பில் மிகவும் சாதுரியமாகத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் குறைப்பதற்குத் தனது அரச அதிகார சக்தியைப் பயன்படுத்தவில்லை.
சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளைக் கையாளும்போது எதிர்ப்பு தெரிவிக்கின்ற போக்கைக் கடைப்பிடிக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்திருந்த அபூர்வமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவர் அந்தப் பிரச்சினைகளைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. செய்யத் தவறிவிட்டார்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகக் கிடைத்திருந்த சந்தர்ப்பத்தைக் கைநழுவ விட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குழப்பகரமான ஓர் அரசியல் இராணுவ சூழலில் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் எந்த அளவுக்கு சக்தியுள்ளவராக வெற்றி பெறப் போகின்றார் என்பது தெரியவில்லை. நிச்சயமற்ற அந்த அரசியல் எதிர்பார்ப்பில் பிரச்சினைகளுக்கு அவர் தீர்வு காண்பார் என்பதை எந்த வகையில் வரையறுத்து மக்கள் நம்பிக்கை கொள்ள முடியும் என்று தெரியவில்லை.
ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளே சஜித் பிரேமதாசவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எழுந்துள்ள கட்சி அரசியல் அந்தஸ்து தொடர்பிலான கருத்து முரண்பாடு முக்கிய பிரச்சினையாக மேல் எழுந்துள்ளது. இந்த முரண்பாடு கட்சியின் கட்டுக்கோப்பையே குலைத்துவிடுமோ என்று அஞ்சும் அளவுக்குத் தீவிரமடைந்துள்ளது.
அதேவேளை, தேர்தலில் போட்டியிடுவதற்கு அவசியம் என அடிப்படையில் கருதப்படுகின்ற சிறுபான்மை அரசியல் கட்சிகளை இணைத்து ஜனநாயக தேசிய முன்னணி என்ற அணியை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள், தாமதம் என்பனவும் ஐக்கிய தேசிய கட்சியை தேர்தலின் முன்கள நிலையில் பலவீனமுடையதாக்கி உள்ளது.
இத்தகைய பின்புலத்தில் ஐக்கிய தேசிய கட்சி, நாட்டு மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கத்தக்க வகையில் தன்னை எவ்வாறு பலமுள்ள ஓர் அரசியல் அணியாக உருவாகிக்கிக் கொள்ளப் போகின்றது என்பது தெரியவில்லை. இது சிக்கல்கள் நிறைந்த ஒரு நிலைமையாகவே காணப்படுகின்றது.
2015 உம் 2019 உம்
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய 2015ஆம் ஆண்டு தேர்தல் கால நிலைமையையும் அந்த ஆட்சியின் இறுதித் தருணமாகிய 2019ஆம் ஆண்டின் இப்போதைய நிலைமையையும் ஒப்பிட்டு நோக்க வேண்டிய அவசியம் இயல்பாகவே எழுந்துள்ளது.
கடந்த தேர்தலானது ஓர் அரசியல் மாற்றத்தை நோக்கியதாக, அந்த நோக்கத்தைத் தவிர்க்க முடியாத தேவையை முன்னிறுத்தியதாக அமைந்திருந்தது என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.
சர்வாதிகாரப் போக்கைக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்கு ஒரு முடிவு காண வேண்டும் என்ற அரசியல் தேவையும் நோக்கமும் தமிழ்த் தரப்பைப் போலவே சிங்களத் தரப்பிலும் அப்போது காணப்பட்டது. தற்போது அத்தகைய நிலைமையைக் காண முடியவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும், ஆட்சி மாற்றம் தேவையை உணர்ந்திருந்த நாடளாவிய பொது அமைப்புக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தங்களுடைய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வாய்ப்பானதோர் அரசியல் களநிலைமை காணப்பட்டது.
சர்வாதிகாரப் போக்கையும் இராணுவ மனப்பாங்கில் ஊறிய கடும் போக்கையும் கொண்டிருந்த மஹிந்த ராஜபக் ஷவின் கடும்போக்கிலான நிலையில் அரசுக்கும் அவருக்கும் எதிராகச் செயற்படுபவர்கள் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் காணப்பட்ட போதிலும், ஆட்சி மாற்றத்திற்கான செயற்பாடுகளை அவர்கள் உறுதியாக முன்னெடுத்திருந்தனர்.
ஆனால் 2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் என்பது முற்றிலும் முன்னைய தேர்தலுக்கு எதிர்மாறான நிலைமையையும் அரசியல் சூழலையும் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. நாடளாவிய பொது அமைப்புக்களும், ஜனநாயகத்தை நேசிப்பவர்களும், அதற்காகத் துணிந்து செயற்படத்தக்க ஜனநாயக சக்திகளையும் இந்தத் தேர்தல் களத்தில் காண முடியவில்லை.
இங்கு தேர்தலின் ஊடான ஆட்சிமாற்றம் என்பது இயல்பான ஒன்றாகவே காணப்படுகின்றது. கடந்த தேர்தலைப் போன்று ஆட்சி மாற்றம் என்பது ஓர் அரசியல் தேவையாக – அரசியல் நிர்ப்பந்தமாகக் காணப்படவில்லை. இது நல்லாட்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான ஒரு நிலைமையாகத் தோற்றவில்லை.
உறுதியற்று தள்ளாடிக் கொண்டிருக்கின்ற அரசாங்கம் அதற்குரிய பருவகாலம் முடிவடைவதற்கு முன்பே குலைந்து கலைந்து போகக் கூடிய தள்ளாட்டமான நிலைமையே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதில் ஆட்சியில் உள்ள ஜனாதிபதியை மீண்டும் பதவியில் இருத்த வேண்டும் என்ற தேவை நாட்டு மக்களுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்.
திருத்தச் சட்டத்தின் நோக்கம்
நல்லாட்சி அரசாங்கம். ஊழல்கள், முறைகேடான நடவடிக்கைகளை முடிவுறுத்தி ஜனநாயகத்திற்கு உயிரூட்டி மக்கள் நலன்களுக்காகச் செயற்படும் என்று எதிர்பார்த்த ஜனாதிபதியும்சரி, பிரதமரும்சரி நாட்டு மக்களின் மனங்களைக் கவர்ந்திழுக்கத்தக்க வகையில் ஆட்சியைக் கொண்டு நடத்தவில்லை.
அரசியல் போட்டியிலும், அதிகாரப் போட்டியிலுமே ஆட்சியாளர்களின் கவனம் கூடுதலாகச் செலுத்தப்பட்டதாகவே மக்கள் உணர்கின்றார்கள். தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக் ஷ மீள் எழுச்சி பெற்று அரசியலில் பலமுள்ள ஒருவராகத் திரும்பி வந்துவிடக் கூடாது என்பதில் இந்த நல்லாட்சி அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தது.
அதன் வெளிப்பாடாகவே 19 அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை வெட்டிக் குறைக்கும் அதேவேளை, மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது தடவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றிவிடக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கி இருந்ததைக் காண முடிகின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக எவரும் இரண்டு தடவைகளுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்க முடியாது என்பது ஜனாதிபதி ஆட்சிமுறையின் உருவாக்கத்தில்
இருந்த நியதியாகும். அதனை 18 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாற்றியமைத்ததுடன் தனது அதிகாரங்களையும் அதிகரித்துக் கொண்ட மஹிந்த ராஜபக் ஷவின் செயற்பாட்டைத் தகர்த்து, முன்னைய நிலைமையை மீண்டும் நிலைநாட்டும் நோக்கத்துடனேயே 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
எனினும் அரசியல் நோக்கத்தைக் கொண்டதாக ஜனாதிபதி தேர்தலில் இரட்டைக் குடியுரிமை கொண்ட எவரும் போட்டியிட முடியாது என்ற நியதியும் அந்த திருத்தச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமையுடன் அரசியலிலும், அதிகாரத்திலும் கோலோச்சிய ராஜபக் ஷக்களை இலக்காகக் கொண்டே இந்த அம்சம் உள்ளடக்கப்பட்டிருப்பதைத் தெளிவாக உணர முடிகின்றது என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
ராஜபக் ஷக்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது என்ற மறைமுக நிகழ்ச்சி நிரலாகக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி தனது நகர்வுகளை மேற்கொண்டுள்ள போதிலும், அவர்களுடைய மீள்வருகை தவிர்க்க முடியாததாகவே அமைந்துள்ளது.
இராணுவ வெற்றிவாதத்தையும், இனவாதத்தையும், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த இராணுவத்தின் மீது ராஜபக் ஷக்கள் காட்டி வருகின்ற அதீத அக்கறையும் அரசியலில் அவர்களது மீள் வருகைக்குக் களம் அமைத்துக் கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.
தமிழ்த்தரப்பின் நிலைப்பாடு
சிங்களப் பேரினவாதத்தையும், சிங்கள மக்களின் ஆதரவையும் இலக்காகக் கொண்டு பேரின கட்சிகள் தங்களது தேர்தல்கால அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துள்ள இந்தத் தருணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் சார்பில் உறுதியானதோர் அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியைச் சார்ந்த ஒரு நிலைப்பாட்டை நோக்கியதாகவே கூட்டமைப்புத் தலைவர்களின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. எனினும் எத்தகைய அடிப்படையில் அந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க முடியும் என்ற குழப்பகரமான நிலைமை அந்தக் கருத்துக்களில் தொக்கி நிற்பதைத் தெளிவாகக் காண முடிகின்றது.
ஏனெனில் அதீத அரசியல் நம்பிக்கையைக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்ததோர் ஆட்சியை உருவாக்குவதன் ஊடாக அப்போதைய கடுமையான அரசியல் சூழலுக்கு முடிவு காண்கின்ற அதேவேளை இரு கட்சிகள் இணைந்த தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு ஒர் அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்ற நோக்கத்தைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கொண்டிருந்தது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துவது போன்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இந்த அரசியல் தந்திரோபாயச் செயற்பாடு மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் தோல்வியையே தந்துள்ளது. அரசியல் ரீதியான தோல்வியை மட்டுமல்லாமல் பெரும் ஏமாற்றத்தையும், மோசமான அதிருப்தியையுமே ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் தமிழ் மக்களும் இந்த அரசியல் உணர்வுகளுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். இந்த நிலையில் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது எந்த அடிப்படையில் ஆதரிப்பது, எத்தகைய நம்பிக்கையில் ஆதரிப்பது என்ற குழப்ப நிலைமையில் தமிழ்த்தரப்பு காணப்படுகின்றது.
நம்பிக்கையின் அடிப்படையில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி ஆட்சிக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் உறுதியாகக் கைகொடுத்துத் தூக்கிவிட்ட போதிலும் நல்லாட்சி அரசாங்கம் தமிழ்த்தரப்பின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றத்தக்க வகையில் நடந்து கொள்ளவில்லை.
தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் அரச தரப்பினர் உரிய அக்கறை செலுத்தவில்லை. பொறுப்பு கூறுதல், நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுதல் உள்ளிட்ட ஐ.நா. மற்றும் சர்வதேச நிர்ப்பந்தத்தைக் கொண்ட விடயங்களிலும் கூட அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் நலன்சார்ந்து நடவடிக்கைகளை இதயசுத்தியுடன் மேற்கொள்ளத் தவறிவிட்டது.
இத்தகைய நிலையில் என்ன செய்வது என்ற கேள்விக்குறியே தமிழ்த்தரப்பின் முன்னால் விஸ்வரூபம் எடுத்து எழுந்து நிற்கின்றது. அரசியலில் மீள் எழுச்சி கொண்டுள்ள ராஜபக் ஷக்களின் சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக் ஷவை ஆதரிப்பதற்கு முன்னைய ஆட்சிக் காலத்து கசப்பான துன்பகரமான அனுபவங்கள் இடம் கொடுக்கவில்லை.
அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியை எந்த அடிப்படையில் ஆதரிப்பது என்ற கேள்வியும் எழுந்து நிற்கின்றது. மறுபுத்தில் ஜே.வி.பி. ஆரம்ப காலம் தொட்டே தமிழ் மக்களுடைய அரசியல் விவகாரத்தில் நம்பிக்கைக்குரிய சமிக்ஞைகளைக் காட்டத் தவறியுள்ளதனால், அந்தக் கட்சியை நம்ப முடியுமா? எவ்வாறு அவர்களை நம்புவது என்ற கேள்விகள் எழுந்து நிற்கின்றன.
மொத்தத்தில் தமிழ்த்தரப்பினர், இந்தத் தேர்தல் காலச் சூழலில் எதிர்கால அரசியல் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விடை காண வேண்டியவர்களாகவும், அந்த விடைகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டியவர்களாகவுமே காணப்படுகின்றனர்.
பி.மாணிக்கவாசகம்