வயதானவர்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு சிரிப்பு பயிற்சி மருந்தாக இருக்கும் என அமெரிக்காவின் ஜியோர்கியா மாகாண பல்கலை மருத்துவர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக மனிதர்கள் 50 வயதினை தாண்டும் போது அவர்களது ஆரோக்கியம் பல வகையான நோய்களால் பாதிக்கப்பட ஆரம்பிக்கிறது. நீரிழிவு, ஆஸ்துமா, நரம்புதளர்ச்சி, மூட்டுவலி போன்ற நோய்கள் வயதான காலத்தில் வருகின்றன.
இந்த நோய்களின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வயதானவர்கள் உட்பட எந்த வயதினராக இருந்தாலும் மருத்துகளை மட்டும் நம்பாமல் சில இயற்கையான வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மிதமான உடற்பயிற்சி, அதிகாலையில் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்ற இயற்கையான வழிமுறைகள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவியாக இருக்கின்றன.
சமீபத்திய ஆய்வில் சிரிப்பு பயிற்சி அல்லது சிரிப்பு வைத்தியம் வயதானவர்களுக்கு மிதமான உடற்பயிற்சிகள் மூலமாக கிடைக்க கூடிய ஆரோக்கியத்தை அதிகரிப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்காக ஜியோர்கியா மாகாண பல்கலை மருத்துவர்கள் 27 மூத்த குடிமக்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். இவர்களை, ஆறு வார காலத்திற்கு சிரிப்பு பயிற்சிக்கு உட்படுத்தினர். ஆறு வரங்களுக்கு பிறகு அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மிதமான உடற் பயிற்சிக்கு மனமும் உடலும் ஒத்துழைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.