கார்பன் மாசுவை குறைக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாணவர்கள் ‘சோலார்’ ஆட்டோவில் உலகை வலம் வருகின்றனர்.
கார்பன் மாசுவை குறைக்கும் வகையில் ஆஸ்திரேலியா நாட்டின் ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் சூரிய மின்சக்தி(சோலார்) மூலம் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஆட்டோவை வடிவமைத்து இருக்கின்றனர்.
இந்த ஆட்டோவில் டிரைவர் மற்றும் 4 பயணிகள் அமரலாம். மணிக்கு 50 கி.மீ வேகத்தில் செல்லும், இந்த எலெக்ட்ரிக், ஆட்டோவை ஒரு முறை ‘சார்ஜ்’ செய்தால், 300 கி.மீ வரை பயணிக்கும்.
ஆஸ்திரேலியாவில் 3 ஆயிரம் கி.மீ இந்த ஆட்டோவில் பயணம் செய்து முதற்கட்ட பயணத்தை நிறைவு செய்த குழுவினர், 2-ம் கட்டமாக உலகம் முழுவதும் வலம் வர திட்டமிட்டனர்.
அதன்படி, ஆஸ்திரேலியாவின் பயணத்தை தொடங்கிய இந்த குழுவினர் 20 நாடுகளை சுற்றி வருகின்றனர். சாலைமார்க்கத்தில் (சுமார் 30 ஆயிரம் கி.மீ) முழுக்க முழுக்க ‘சோலார்’ ஆட்டோவில் தான் பயணிக்கின்றனர். தாய்லாந்து, மியான்மர் உள்பட பல நாடுகளை வலம் வந்த அவர்கள் தற்போது இந்தியா வந்து இருக்கின்றனர்.
தமிழகத்துக்கு நேற்று முன்தினம் வந்த இந்த குழுவினர் சென்னை சென்டிரலில் இருந்து நேற்று காலை மும்பைக்கு (சுமார் 1,500 கி.மீ) புறப்பட்டு சென்றனர். இந்த ஆட்டோவில் அந்த குழுவை சேர்ந்த ஜூலியன் ஓ ஷியாவும், தலியா ரோசும் பயணிக்கின்றனர்.
இவர்கள் பயணத்தின் போது பொதுமக்கள், மாணவர்கள், ஊடகங்கள், வர்த்தகர்களை சந்தித்து எதிர்காலத்தில் ‘சோலார்’ எலெக்ட்ரிக் வாகனங்கள் எப்படி இருக்கும்? நிலையான போக்குவரத்துக்கு இந்தியா எந்த மாதிரியான பங்களிப்பை அளித்து வருகிறது? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
இந்தியாவில் பயணத்தை முடித்து கடல்மார்க்கமாக ஈரான் செல்லும் அவர்கள் அங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். பின்னர் துருக்கி, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து ஆஸ்திரேலியா திரும்புகின்றனர்.