மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் தொடர்ந்தும் அதேபோன்று இயங்குவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, அதனை கிழக்குப் பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும் என தெரிவித்தார்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்காக பெருமளவான நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக அது தொடர்ந்தும் இவ்வாறு இயங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் அப்பல்கலைக்கழகம் கிழக்குப் பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட வேண்டும். அங்கு இராணுவத்தினர் பயிற்சி பெறுவதற்குப் பொருத்தமான வசதிகள் காணப்படுகின்றன.
நாட்டைப் பிளவுபடுத்தும் போராட்டங்கள் வடக்கு, கிழக்கிலேயே ஆரம்பமாகின. எனவே அங்கு தற்போது அடிப்படைவாதத்தைப் போதிக்கத்தக்க பல்கலைக்கழகம் தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுவதை ஏற்கமுடியாது. எனவே அது உடனடியாகப் பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட வேண்டும் என்பதுடன், அதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவோம் என்றார்.