டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டது.
ஆனால், எந்த நாடும் பாகிஸ்தனை கண்டு கொள்ளவே இல்லை. எனவே, இந்தியாவில் பெரிய அளவில் பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இதற்காக பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. ஏராளமான பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து தாக்குதல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது.
தற்போது இந்தியாவுக்கு எதிராக ஜெய்ஸ்-இ- முகமது, லஸ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அவர்களை தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ. தயார்படுத்தி இருக்கிறது.
அதில், முதல் கட்டமாக ஜெய்ஸ்-இ-முகமது இயக்க பயங்கரவாதிகளை தாக்குதலுக்கு அனுப்பி இருக்கிறது.
இந்த படையில் புதிதாக ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் பஸ்தூன் பழங்குடி பயங்கரவாதிகள் ஆகியோரை சேர்த்துள்ளனர்.
ஏற்கனவே பயங்கரவாத இயக்கங்களில் இருக்கும் பயங்கரவாதிகளை விட ஆப்கானிஸ்தான் மற்றும் பஸ்தூன் பயங்கரவாதிகள் அதிக பயிற்சி பெற்றவர்கள்.
பாதுகாப்பு படையினருடன் நேரடியாக கடுமையாக சண்டையிடும் திறன் பெற்றவர்கள். எனவே, அந்த பயங்கரவாதிகளை இப்போது இந்தியாவுக்குள் ஊடுருவ செய்ய முயற்சித்து வருகிறார்கள்.
அந்த படையை சேர்ந்த 100 பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லையில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை பகுதி, பகுதியாக காஷ்மீருக்குள் ஊடுருவ செய்வதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அவர்களில் 15 பேர் ஒரு அணியாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய காத்து இருக்கிறார்கள்.
அவர்கள் தற்போது லீபா பள்ளத்தாக்கில் பதுங்கி உள்ளனர். மேலும் கெரன், பூஞ்ச் பகுதி வழியாக ஊடுருவ செய்வதற்கும் பயங்கரவாதிகள் தயாராக உள்ளனர்.
பொதுவாக பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக காஷ்மீர் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கம்.
ஒரு பக்கம் தாக்குதல் நடத்தி இந்திய படைகளின் கவனத்தை திசை திருப்பி விட்டு மற்றொரு பகுதி வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வார்கள்.
அது போன்ற முயற்சி தற்போது நடந்து வருகிறது. எல்லையில் இதுவரை தாக்குதல் நடக்காத பகுதிகளில் எல்லாம் புதிதாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்துகிறது. அந்த நேரத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் ராணுவத்தின் தந்திரத்தை தெரிந்து வைத்துள்ள இந்திய ராணுவம் உஷாருடன் கண்காணித்து வருகிறது.
காஷ்மீரில் மட்டும் அல்லாமல் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை பயங்கரவாதிகள் மூலம் தகர்ப்பது பாகிஸ்தானின் திட்டமாகும்.
காஷ்மீருக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள் அங்கிருந்து முக்கிய நகரங்களுக்குள் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அவ்வாறு ஊடுருவியதற்கு பிறகு பெரும் தாக்குதலை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முக்கிய நகரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
பயங்கரவாதிகளை எவ்வாறு ஊடுருவ செய்வது, இந்தியாவில் எங்கெங்கு தாக்குதல் நடத்த வேண்டும் என்பது குறித்து ஜெய்ஸ்-இ- முகமது பயங்கரவாதிகள் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் தம்பி முக்தி ரவூப் அஸ்கார் தான் தற்போது இயக்கத்தை முன்னின்று நடத்தி வருகிறான்.
அவன் கடந்த 19-ந் தேதியும், 20-ந் தேதியும் பகவல் பூரில் பயங்கரவாதிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளான்.
அப்போது தாக்குதல் திட்டங்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. வகுத்து கொடுத்தது. அதன் அடிப்படையில் தாக்குதல்கள் எப்படி நடைபெற வேண்டும் என்று வியூகங்களை வகுத்துள்ளனர்.
இப்போது இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ள தாக்குதல் தவிர மேலும் பல தாக்குதல்களை நடத்த வேண்டும் என்பது பயங்கரவாதிகளின் திட்டமாகும்.
இதற்காக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புதிதாக ஆள் எடுக்கும் பணியையும் பயங்கரவாதிகள் செய்து வருகிறார்கள்.
ஏராளமான இளைஞர்கள் அந்த இயக்கத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் அனுப்ப இருக்கிறார்கள்.
பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை துல்லியமாக கண்காணித்து வரும் இந்திய உளவு படைகள் எதிர் நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளது.
காஷ்மீர் முழுவதும் விழிப்புடன் கண்காணித்து வருகிறார்கள். முக்கிய நகரங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளதால் அங்கும் போலீசார் தீவிர கண்காணிப்புகளை செய்து வருகிறார்கள்.