முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்ட திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஜுலை 11ஆம் திகதி நாடாளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் முஸ்லிம் உறுப்பினர்கள் 11 பேர் ஒன்றுக்கூடி, முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்திருந்தனர்.
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த நிலையில், இது தொடர்பான யோசனைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
தபால் சேவை மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர், நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் ஆகியோர் இணைந்து இந்த கூட்டு பத்திரத்தை தாக்கல் செய்திருந்தனர்.