இந்தோனேசிய அரசுக்கு எதிராக அரசு அலுவலகங்களை சூறையாடிய போராட்டக்காரர்கள் பப்புவா நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீவைத்தனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியம் பப்புவா. டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்த பிராந்தியம் 1963-ம் ஆண்டு விடுதலை பெற்று தன்னை தானே தனிநாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால் இயற்கை வளங்கள் மிகுந்த பப்புவா பிராந்தியத்தை இந்தோனேசியா வலுக்கட்டாயமாக தன்னோடு இணைத்துக்கொண்டு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது. இதனால் பப்புவா பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாத அமைப்பு பல ஆண்டுகளாக இந்தோனேசிய அரசுக்கு எதிராக போராடி வருகிறது.இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி இந்தோனேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மேற்கு பப்புவா மாகாணத்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி சென்றனர். இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தலைநகர் மனோக்குவாரியில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்றனர். அதே சமயம் போலீசார் மீது, கற்கள், பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்டவற்றை போராட்டக்காரர்கள் வீசி தாக்கினர்.
அதுமட்டும் இன்றி அங்குள்ள அரசு அலுவலகங்களை சூறையாடிய போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீவைத்தனர். மேலும் சாலையோர கடைகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த நகரமே கலவர பூமியாக காட்சியளித்தது.