நாட்டு மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற தீர்வுகள் காணப்படாத பல்வேறு பிரச்சினைகளையும் புறமொதுக்கி விட்டு, ஜனாதிபதித் தேர்தலே இன்று பேசு பொருளாகி விட்டது அல்லது, பேசு பொருளாக்கி விட்டார்கள்.
நம் நாட்டை ஜனாதிபதித் தேர்தல் காய்ச்சல் பீடித்து உள்ளது. ஆனாலும், எந்தத் தேர்தல்களும் கால ஒழுங்கில் நடத்த வேண்டியவைகளே. ஆகவே, அவை நடக்கட்டும்.
பெரும்பான்மை இன சிங்கள மக்கள், தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனூடாகத் தாங்கள் ஆதரிக்கும் கட்சி, ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுடன், தாங்களும் வளம் பெற வேண்டும் எனக் கருதுகின்றார்கள். அதில் தவறில்லை.
ஆனாலும், ஒப்பீட்டளவில் சிங்கள மக்களைக் காட்டிலும், தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கூடுதலாக அலட்டிக் கொள்ளவில்லை; அலட்டிக் கொள்வதில் அர்த்தமும் இல்லை.
இவை தொடர்பில், கனவுக் கோட்டைகளைக் கட்ட முடியாது. ஏனெனில், தமிழ் மக்களுக்கு ஆறுதல் வழங்குவோம், அதிகாரம் வழங்குவோம் எனப் பெரும் ஆரவாரங்களோடும் ஆர்ப்பரிப்புகளோடும் பதவிக்கு வந்தவர்கள் ஆறுதலும் வழங்கவில்லை; அதிகாரமும் வழங்கவில்லை.
இருந்த போதிலும், 2005ஆம் ஆண்டு தொடக்கம், 2015ஆம் ஆண்டு வரை, நடைபெற்ற மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும், தமிழ் மக்களே, விரும்பியோ விரும்பாமலோ ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளார்கள்.
சில ஆண்டுகள் சற்று பின்னோக்கி நகர்ந்தால், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்கள் வாக்களிக்காமையால், வாக்களிக்க முடியாமையால், அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் ரணில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மயிரிழையில் தோல்வி கண்டார்; மஹிந்த வெற்றி பெற்றார்.
2009ஆம் ஆண்டில் பயங்கரவாதத்தை (சிங்கள மக்களின் பார்வையில்) தோற்கடித்த வெற்றி நாயகனாக, சிங்கள மக்களின் கதாநாயகனாக வெற்றி முதலீட்டுடன் 2010இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த பெரு வெற்றி பெற்றார். பலமான தலைவராகப் பவனி வந்தார்.
அடுத்து, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த மூன்றாவது முறையாகப் போட்டி இட்டார். அவருக்கு எதிராக, அவரது கட்சியிலிருந்தே, மைத்திரி துணிந்து களம் இறக்கப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் மைத்திரிக்குக் கூட்டாட்சி அமைக்கும் நோக்கில் ஆதரவு வழங்கியது. ஆனாலும், தமிழ் மக்களது அதிகப்படியான ஆதரவாலேயே மைத்திரி, ஜனாதிபதி ஆசனத்தைப் பிடித்துக் கொண்டார்.
“இழந்த உயிர்களைத் தவிர, அனைத்தையும் தருவோம். பதின்மூன்றைத் (13வது அரசியல் சீர்திருத்தம்) தாண்டிச் செல்வோம்” (2010) எனச் சொன்னார்கள். ஆனால், செய்யவில்லை; செய்யப் போவதுமில்லை.
வரலாற்றில் என்றுமில்லாதவாறு, கூட்டாட்சி அமைந்திருந்தது. (2015) புதிய அரசமைப்பு ஊடாக, புதிய தீர்வுத் திட்டம் எனச் சொன்னார்கள்; செய்யவில்லை; செய்யப் போவதுமில்லை.
இந்நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வந்துள்ளது. ஆட்சி அமைக்கத் துடிப்பவர்களுக்கு வாக்குகள் தேவையே தவிர, துன்பத்தில் துடிக்கும் தமிழ் மக்களது துயரத்தைக் கண்டு கொள்ளப் போவதில்லை.
பேரினவாதிகள் பார்வையில், தமிழ் மக்கள் தமக்கான வாக்குப் போடும் இயந்திரங்களே தவிர, அவர்களை மனிதர்களாகவே பார்ப்பதில்லை; மதிப்பதில்லை.
இவ்வாறான சூழ்நிலையில், தமிழ் மக்கள் வரும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு சந்திக்கப் போகின்றார்கள். மொட்டிலிருந்து கோட்டாபய என்றாலென்ன, யானையிலிருந்து சஐித் என்றாலென்ன, அல்லது வேறு யாருமென்றாலென்ன, அனைவருமே, பௌத்த சிங்களத் தேசியவாதிகளே. அவர்கள், அதையே நேசிப்பவர்கள்; நேசிப்பார்கள். அதுவே, அவர்களின் அரசியல் முதலீடு.
தாங்களே, புலிகளை அழித்து, பயங்கரவாதத்தை வெற்றி கொண்டதாக மஹிந்த அணியினர் கூறுகின்றார்கள். ஆனால், தாங்கள் 2004இல் புலிகளின் முதுகெலும்பை உடைத்த படியாலேயே 2009இல் புலிகளை ஒழிக்க முடிந்தாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது.
இந்நிலையில், தமிழ் மக்களது நாடி பிடித்து அறிந்து கொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி வேட்பாளர்களும் அவர்களது பிரதிநிதிகளும் வடக்கு, கிழக்கு நோக்கி விரைந்த வண்ணமுள்ளனர்.
தமிழ் மக்கள் மீது, இன்றும் ஓசையின்றி, இனவழிப்பு யுத்தம் நடத்துபவர்கள் வே(பா)சமிட்டு வலம் வருகின்றனர்.
தமிழ் மக்கள் இன்று, ஏதோ கௌரவமான யுகத்தில் உள்ளது போல, கடந்த கால ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தால், காட்டு யுகத்துக்குச் செல்ல நேரிடும் எனப் பிரதமர் ரணில், வவுனியாவில் தெரிவித்து உள்ளார்.
‘காட்டு யுகம் நடத்துவார்கள்’ என, விழித்துக் கூறுபவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வர, கடந்த நான்கு ஆண்டு காலங்களில், ரணில் அரசாங்கம் என்ன நடவடிக்கையைச் செய்தது?
“ராஜபக்ஷ குடும்பத்தினர், என்ன குற்றம் செய்தனர்? எம்மை விமர்சிப்பதை உடன் நிறுத்துங்கள்” எனக் கோட்டாபய தெரிவித்து உள்ளார். அன்று கொட்டிய குருதி கூட, இன்றும் எம் மண்ணை விட்டுக் காயவில்லை; எம் மனங்களை விட்டு மாறவில்லை. இந்நிலையில் இந்த வார்த்தைகளுக்குத் தமிழ் மக்கள் என்ன மறுவார்த்தை கூறலாம்.
இதற்கிடையே, ஐக்கிய தேசியக் கட்சி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஐித் பிரேமதாஸ வீடற்றவர்களுக்கு பல்வேறு வீடமைப்புத் திட்டங்களை உருவாக்கி வருகின்றார்.
இதனது எண்ணிக்கை 240ஐ அடைந்துள்ளது. இதன் போதான வீடமைப்புத் திட்டங்கனை வழங்கும் நிகழ்வுகளில், கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஐித்துக்குப் புகழ் பாடுகின்றனர்; இது அவசியமற்றது.
வரும் ஜனாதிபதித் தேர்தலில், சஐித் பிரேமதாஸ வேட்பாளராக நியமிக்கப்பட்டு, அவர் வெல்கின்றார் என எடுத்துக் கொள்வோம். அவர், ஜனாதிபதியாகி அதனையடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 1977இல் ஜே. ஆர் ஜெயவர்தன போல, ஆறில் ஐந்து பெரும்பான்மையைக் கைப்பற்றினாலும் தமிழ் மக்கள் வாழ்வியலில் மாற்றம் ஏற்படக் கூடியதாக இருக்கப் போவதில்லை.
ஏனெனில், அப்போது எதிர்க்கட்சியாக மொட்டே மலர்ந்திருக்கும். ஜனாதிபதித் தேர்தலில் வாடிய மொட்டுக்கு (ஐக்கிய தேசியக் கட்சி வென்றதாக எடுகோள் எடுத்துள்ளோம்) இனவாதமே இறுதி ஆயுதம். இனவாதத்தால் அது மீண்டும் மலரத் துடிக்கும்; மலரத் தொடங்கும்.
அப்போது, தமிழ் மக்களுக்கு ‘ஈழம்’ வழங்கப் போகின்றார்கள் எனப் பிரசாரம் செய்வார்கள். இதனை அப்பாவிச் சிங்கள மக்கள் நம்புவார்கள்.
உடனடியாக, ஐக்கிய தேசியக் கட்சி, தனது முயற்சியிலிருந்து பின் வாங்கும். சில வேளைகளில், அது தயாரித்த தீர்வு நகல்களை எரிக்கும், கிழிக்கும். அதனால் சிங்கள மக்களிடம் நற்பெயர் வாங்கும்.
இதனை விட, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மாற்று வழி இல்லை. நடப்பு ஆட்சியிலும் புதிய அரசமைப்பு விடயத்தில், பாலர் வகுப்பிலேயே பல முறை தோற்றவர்களாகவே, ரணில் ஆட்சி அமைந்துள்ளது.
வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் மூலம், ஆட்கள் மாறப் போகின்றார்கள்; அரசாங்கமும் மாறலாம். ஆனாலும், இலங்கை அரசியல் மாறப்போவதில்லை; இனவாதம் இல்லாமல் போவதில்லை; மதவாதம் மறையப் போவதில்லை. இந்நிலையில், எவர் வந்தாலென்ன, தமிழர்களுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை.
ஆட்சியில் மாறுதல்கள் வரலாமே தவிர, தமிழ் மக்கள் வாழ்வில் ஆறுதல்கள் வரப்போவதில்லை. இதனை எந்த விதத் தயக்கங்களும் மயக்கங்களும் இன்றித் தெளிவாகக் கூறலாம்.
தமிழ் மக்கள் யாருக்கு ஆதரவளித்தாலும் நடக்கப் போவது ஒன்றுமில்லை. இதுவே நிதர்சனம்; அத்துடன், இதுவே கடந்த காலப் படிப்பினையுமாகும்.
ஆனாலும், இவ்வாறான வாய்ப்புகளைத் தமிழ் மக்கள் வரங்களாக மாற்றலாமா எனச் சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு காலத்தின் தேவையாக உள்ளது. இன்று ஏமாற்றுபவர்களை விட, ஏமாற்றம் அடைகின்றவர்களே அதிகம்.
எந்தக் காரியத்திலும் தோல்வியடைந்து மறுபடியும் முயற்சிக்கும் போது, நாம் எந்த இடத்தில் தவறு செய்திருக்கின்றோம் என, ஆழ்ந்து ஆராய்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
நீண்ட கால இக்கட்டில் சிக்கித் தவிக்கும் தமிழினம், மரபாக நம் வழிவழி வந்த நிலையில் சிந்திக்காது, அறிவும் உணர்வும் கலந்த நிலையில் சிந்திக்க முயல வேண்டும்.
நமது இப்போதைய வாழ்க்கை, நமது கடந்த காலத்தின் விளைவு. இதனை நாம் ஒப்புக் கொள்வோம். அதேபோல, எமது எதிர்கால வாழ்க்கை, எமது நிகழ்கால வாழ்க்கையிலேயே தங்கி உள்ளது.
தமிழ்த் தரப்பு, தங்களது மக்களது அடிப்படைப் பிரச்சினை (இனப்பிணக்கு), அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாகக் கால எல்லையுடனான எழுத்து மூலமான வாக்குமூலத்தை இரு பெரும் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால், வெற்றி பெறும் எவருமே அதனை நிறைவேற்ற மாட்டார்கள். வெற்றி பெறுபவர்கள் அதனை நிறைவேற்ற இனவாதமும் மதவாதமும் இடமளிக்காது. அதனை உலகெங்கும் பறையடிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் இவ்வாறாகவே, 70 ஆண்டுகள் ‘ஏய்க்காட்டப்பட்டு’ வந்ததை உலகம் உணர வேண்டும். உணரும் காலம் வரும். ஏனெனில், தமிழ் மக்களது போராட்டம் நியாயமானது; நீதியானது; அறம் நிறைந்தது.
காரை துர்க்கா /