சுமித் மீது பவுன்சர் பந்து: அக்தரை கிண்டலடித்த யுவராஜ்சிங்!

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் சுமித் மீது பவுன்சர் பந்து வீசப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த சோயிப் அக்தரை யுவராஜ் சிங் கிண்டல் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஷ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் சுமித் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பவுன்சர் பந்தில் நிலை குலைந்தார். அவரது தலையை வந்து பதம் பார்த்தது.

கீழே விழுந்த சுமித் மைதானத்தை விட்டு வெளியேறி பின்னர் பந்து ஆடி 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஆனாலும் வலி தொடர்ந்து இருந்ததால் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் 2-வது இன்னிங்சில் விளையாடவில்லை. இதனால் வரலாற்றில் முதல் முறையாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய இருந்ததாவது:-

கிரிக்கெட்டில் பவுன்சர் பந்துகள் வீசுவது சகஜம் தான். ஆனாலும் பவுன்சர் பந்து பேட்ஸ்மேனை தாக்கினால் சம்பிரதாயத்திற்காக பந்துவீச்சாளர் அவரை நலம் விசாரிக்க வேண்டும். ஸ்டீவ் சுமித் விவகாரத்தில் பந்து வீச்சாளர் ஆர்ச்சர் செய்தது தவறு. சுமித் வலியால் துடித்துக்கொண்டு இருக்கும்போது அவரை ஆர்ச்சர் சென்று பார்த்து இருக்க வேண்டும்.

நான் வீசிய பந்தில் யாராவது தாக்கப்பட்டால் முதலில் சென்று நலம் விசாரிப்பேன். இதை நான் எப்போதும் கடை பிடித்து வந்து இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சோயிப் அக்தர் டுவிட்டருக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் கிண்டலடித்து பதில் டுவிட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நீங்கள் முதலில் ஓடிவந்து நலம் விசாரிப்பீர்கள் என்பது சரி தான். நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்பீர்கள். ஏனென்றால் இன்னும் நிறைய பவுன்சர்கள் வீச திட்டமிட்டு இருப்பீர்கள். இவ்வாறு யுவராஜ்சிங் கலாய்த்து உள்ளார்.