இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது மிகுந்த கவலையளிக்கிறது. சவேந்திர சில்வாவிற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற நிலையில், அவரது இந்நியமனம் இலங்கை மீதான சர்வதேசத்தின் நன்மதிப்பையும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்குகிறது என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
இராணுவத்தின் அலுவலகப் பிரதானியாகக் கடமையாற்றிய லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார்.
இந்நிலையில் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்க மிகுந்த கவலையடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினாலும், ஏனைய அமைப்புக்களாலும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பாராதூரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்தவையும் ஆகும்.
குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படும் இத்தருணத்தில், சவேந்திர சில்வாவின் நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பைப் பாதிக்கும் அதேவேளை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்கும் வகையில் அமைந்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal