ஹாங்காங்கில் கொட்டும் மழையிலும் சீனாவுக்கு ஏதிராக 17 லட்சம் மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தியதால் அந்நகரமே ஸ்தம்பித்தது
ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களின் தொடர் போராட்டத்துக்கு அரசு அடிபணிந்தது. கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம் அறிவித்தார்.
ஆனால் சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்ககூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த போராட்டம் கடந்த சில நாட்களாக வார நாட்களிலும் நடைபெற்றுவருகிறது.
போராட்டக்காரர்களை தடுக்கும் நடவடிக்கையில் உள்ளூர் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறிவருகிறது.
இந்நிலையில், ஹாங்காங் போராட்டத்தின் 11 வது வாரமான நேற்று அந்நகரின் விக்டோரியா பூங்காவில் சுமார் 17 லட்சம் பேர் திரண்டு போராட்டம் நடத்தினர். கனமழை பெய்த போதும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையிலும் குடைகளை பிடித்தபடி ஹாங்காங் மற்றும் சீன அரசுகளுக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பூங்காவை விட்டு வெளியேறிய போராட்டக்காரர்கள் நகரின் வீதிகளில் இறங்கி பேரணியாக சென்றனர். பேரணி சிறிது தூரம் அமைதியாக சென்றாலும் பின்னர் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் நகரமே பெரும் பரபரப்புக்குள்ளானது.
இதற்கிடையில், சீனாவின் ராணுவத்தினர் ஹாங்காங் நகரில் முகாமிட்டுள்ளனர். தற்போதுவரை, போராட்டக்காரர்களை ஒடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ராணுவம் ஈடுபடவில்லை.
ஆனால், போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் போர் ஒத்திகை மற்றும் போராட்டக்காரர்களை ஒடுக்குவது போன்ற ஒத்திகைகளை மேற்கொண்டுவருகின்றனர்.