புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று(19) நடைபெறும் பிரேத பரிசோதனையை காணொளி எடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
சுவாதி கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று(18) சிறையில் உள்ள மின்சார வயரை கடித்ததால் மின்சாரம் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால் அவரை பரிசோதித்த வைத்தியர்கள், ராம்குமார் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவருடைய உடல், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் நேற்று மாலை 5.45 மணிக்கு வைக்கப்பட்டது.
முக்கியமான வழக்கு தொடர்பான பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததால், பிரேத பரிசோதனை இன்று(திங்கட்கிழமை) செய்யப்பட உள்ளதாகவும், இந்த பிரேத பரிசோதனை காணொளி பிடிக்கப்படும் என்றும் இதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் வைத்தியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராம்குமார் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, ராம்குமாரின் உறவினர்கள் மற்றும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராம்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள பிண அறைக்குள் ஊழியர்கள் உள்பட எவரும் அனுமதிக்கப்படவில்லை. ராம்குமாரின் உடல் பிணஅறையில் உள்ள தனிஅறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிணத்தை பார்க்க வேண்டும் என்று கோரி, ராம்குமார் தரப்பு வக்கீல் ராமராஜ் உள்ளிட்டோர் ராயப்பேட்டை ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பலத்தகாவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Eelamurasu Australia Online News Portal