பவளங்கள் போல மின்னும் பனிச்சிகரங்கள், துலிப் மலர்கள் நிறைந்த ஆசியாவின் மிகப்பெரிய பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள், உலக புகழ்பெற்ற காஷ்மீர் ரோஜாக்கள்,அப்பிள்கள், வற்றாத நீல நிற ஏரிகள், பசுமை படர்ந்த உயர்ந்த மலைகள், அதன் இடுக்கில் பல ஆறுகளும் அருவிகளும் பாயும் அழகும் வளமும் நிறைந்த பள்ளத்தாக்குகள் என மொத்த இயற்கை அழகையும் தன்னகத்தே கொண்டுள்ள அழகிய பிரதேசமே இந்தியாவின் வடகோடியில் அமைந்துள்ள காஷ்மீர் ஆகும்.
17ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஜகாங்கீர் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வந்த போது ‘பூமியில் சொர்க்கம் என்ற ஒன்று எங்காவது இருக்குமானால் அது இதுதான்’ என்று தால் ஏரியில் இருக்கும் போது சொன்னாராம். ஆனால் காலம் இந்தச் சொர்க்க பூமியின் நிலையை மாற்றிவிட்டது. பேராசைகளும் அதிகார மோகங்களும் காஷ்மீர் ரோஜாக்களை உதிரத்தில் மூழ்கடித்து உதிரச் செய்து விட்டன. போராட்டம், குண்டு வெடிப்புகள், துப்பாக்கிச்சூடுகள், படுகொலை கள் என வன்முறை தேசமாக காஷ்மீர் மாறிவிட்ட நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இந்திய அரசால் தற்போது நீக்கப்பட்டுள்ளமை பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதோடு உலக அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பில் நாம் நோக்க வேண்டுமாயின் இந்திய சுதந்திரம் மற்றும் அது இரண்டாகப் பிரிந்த காலத்துக்குச் செல்ல வேண்டும்.
ஆம் காலனித்துவ ஆட்சியின் கீழ் பாரதம் கட்டுண்டு கிடந்த நிலையில் சுதந்திரப் போராட்டங்களின் எதிரொலியாய் 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்து, இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதி இந்தியா என்றும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதி பாகிஸ்தான் என்றும் பிரிவினை ஏற்பட்டது.
இதன்போது மன்னராட்சி மாநிலங்களுக்கு மூன்று தெரிவு வாய்ப்புகள் தரப்பட்டன. – சுதந்திர நாடாக இருப்பது, இந்தியாவுடன் இணைவது அல்லது பாகிஸ்தானுடன் இணைவது என்பவையாக அவை இருந்தன.
“ஆகஸ்ட் 1947இல் பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்தியாவின் நிலப்பரப்பில் ஐந்தில் இரண்டு பங்கு அளவுக்கு வைத்திருந்த, 99 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருந்த 565 மன்னராட்சி மாகாணங்களின் ஆட்சியாளர்கள் இந்தியா அல்லது பாகிஸ்தான் என்ற புதிய நாடுகளில் எந்த நாட்டுடன் சேருவது என்பதை முடிவு செய்ய வேண்டியிருந்தது” என்று ‘சர்ச்சையில் காஷ்மீர்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் விக்டோரியா ஸ்ச்சோபீல்ட் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத் ஜுன்னாஹத் மற்றும் ஜம்மு காஷ்மீரைத் தவிர மற்ற மன்னராட்சி மாகாணங்கள் அனைத்தும் இது குறித்து முடிவு எடுத்துவிட்டன.
இந்தியாவும் பாகிஸ்தானும் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே காஷ்மீருக்காக கடுமையாக போட்டியிட்டுக் கொண்டன.
இந்நிலையில், எந்த நாட்டுடன் சேருவது என்பதை ஜம்மு காஷ்மீர் ஆட்சியாளர் மகாராஜா ஹரிசிங்கால் முடிவு செய்ய முடியவில்லை. ஜம்மு காஷ்மீர் சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஓர் இந்து. ஆனால் காஷ்மீரில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாக இருந்தனர். இதனால் இந்தியாவுடன் சேர்வதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்ற கேள்வி தொடர்ந்தது.
ஜம்மு மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். அதேவேளையில் காஷ்மீரின் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினர்.
உறுதியான முடிவு எடுக்கப்படாத அந்தச் சூழ்நிலையில் “வர்த்தகம், பயணம், தகவல் தொடர்பு சேவைகளை தடையின்றி தொடர்வதற்கு பாகிஸ்தானுடன் அவர் `நிகழ்நிலை’ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் 1947-ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாகிஸ்தான் பழங்குடி மக்களைக் கொண்ட படை காஷ்மீருக்குள் நுழைந்தது. தற்போதைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சுற்றிவளைத்தது. பாகிஸ்தான் இராணுவம் பின்புலத்திலிருந்து செயல்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அது மகாராஜாவுக்கு சவாலான காலகட்டம். ஒருபுறம் சட்டம், ஒழுங்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் மலைவாழ் பழங்குடி மக்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அவர் ஒரு வாய்ப்பைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் குறைந்து கொண்டே போனது.
அப்போது வேறு வழியில்லாத சூழலில் மன்னர் ஹரி சிங், இந்தியாவின் உதவியைக் கோரினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அவர் சம்மதித்தார். அப்போது பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் மன்னர் ஹரி சிங் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிவிவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆயினும் காஷ்மீருக்கு தனிக் கொடி, அரசியலமைப்பு என்பன இருந்தன.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டது. அதன் பாதுகாப்புக்கு இந்தியா முழுப் பொறுப்பேற்றது. இருப்பினும் மகாராஜா கட்டாயத்தின் பேரில் செயல்பட்டிருக்கிறார் என்று பாகிஸ்தான் கூறியது. பாகிஸ்தானுடன் நிகழ்நிலை ஒப்பந்தம் அமுலிலுள்ள சூழ்நிலையில் இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் உரிமை அவருக்குக் கிடையாது என்று பாகிஸ்தான் கூறியதோடு காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது. இதனால் அக்போதைய பாரத பிரதமர் நேரு, ஐ.நா.விடம் முறையிட்டார். இதனைத் தொடர்ந்து ஐ.நா.சபையின் தீர்மானத்தின்படி பாகிஸ்தான் படைகளும் தங்கள் பகுதிக்குள் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் கட்டுப்பாட்டுக்கோடு உருவாக்கப்பட்டது. இன்றளவும் அதுவே காஷ்மீரின் பாகிஸ்தானுடனான தார்மீக எல்லையாக இருந்து வருகிறது.
ஆயினும் அதன் பின்னரும் காஷ்மீருக்காக 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரண்டு நாடுகளும் சண்டையிட்டன. இந்தச் சமயத்தில் இரு நாடுகளும் அணு ஆயுதம் கொண்ட நாடுகளாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தன. இன்று வரை இந்த இரு நாடுகளும் காஷ்மீருக்காகப் போராடுகின்றன.
இந்நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இந்தியாவால் நீக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்தச் சிறப்பு அந்தஸ்து என்ன என்பதைப் பார்ப்போம்.
1950இல் இந்திய அரசியல் சாசனம் அமுலுக்கு வந்ததோடு காஷ்மீருக்கு அரசமைப்பின் 370 சட்டப் பிரிவின் மூலம் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது.
இந்திய அரசமைப்பின் 370 சட்டப் பிரிவானது, மத்திய அரசுக்கும், ஜம்மு -– காஷ்மீருக்குமான உறவின் ஓர் எல்லைக் கோடாக பார்க்கப்படுகிறது.
சட்டப்பிரிவு 370இன் படி, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்களைத் தவிர, வேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றால், மத்திய அரசு அம்மாநிலத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
அம்மாநிலத்தின் ‘நிரந்தர குடியாளர்கள்’ யார் என்பதை வரையறுப்பது அரசமைப்பின் பிரிவு 35A. இது சட்டப்பிரிவு 370இ-ன் ஒரு பகுதியாகும். இதன்படி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள், ஜம்மு காஷ்மீரில் நிலமோ அல்லது சொத்தோ வாங்க முடியாது.
இந்த சிறப்பு அந்தஸ்தால், அரசமைப்பின் சட்டப்பிரிவு 356, ஜம்மு -– காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது. இதனால் அம்மாநில அரசை கலைக்கும் அதிகாரம், இந்திய குடியரசுத் தலைவருக்குக் கிடையாது.
காஷ்மீர் பெண்கள், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்தால், காஷ்மீரில் நிலம் வாங்கும் உரிமையை இழக்கிறார்கள். அதே வேளை, ஆண்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை மணம் புரிந்தால், அங்கே நிலம் வாங்க உரிமை உண்டு.இந்திய தேசியக் கொடி அல்லாது, அம்மாநிலத்துக்கு என்று தனிக் கொடி உள்ளது.
நாட்டில் பொருளாதார அவசர நிலையை அமுல்படுத்த வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 360-ம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குப் பொருந்தாது.
அதாவது அம்மாநிலத்தில் பொருளாதார அவசர நிலையை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் கிடையாது. மற்ற நாடுகளுடன் போர் ஏற்பட்டால் மட்டுமே அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.
அம்மாநிலத்தில் அமைதியற்ற சூழல் மற்றும் வன்முறை நிலவினால்கூட, குடியரசுத் தலைவரால் அவசர நிலை அறிவிக்க முடியாது என்று இதன்மூலம் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் அரசு பரிந்துரை செய்தால் மட்டுமே அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.
இம்மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது.
இதேவேளை காஷ்மீர் மக்கள் இந்தியக் குடியரசுடன் தொடர்ந்து நீடிப்பதா அல்லது இதில் இருந்து வெளியேறுவதா என்ற நிலைப்பாட்டை முடிவு செய்வதற்கு அந்த மக்களுக்கு வாய்ப்பளிப்பது. அதாவது பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக்கெடுப்பு இன்று வரை நடத்தப்படவில்லை.
இந்திய அரசின் மூலம் உருவாக்கப்படும் புதிய சட்டங்கள் எதையும் விரும்பாத பட்சத்தில், அதை நிராகரிக்கும் உரிமையை ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்பு சட்டப்பிரிவு 370 வழங்கியது. ஆனால், இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்த பிறகு, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பல்வேறு புதிய சட்டங்கள், குடியரசுத் தலைவரின் ஆணையின் மூலம், அரசமைப்பு சட்டப்பிரிவு 370இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஜம்மு -– காஷ்மீரிலும் அமுல்படுத்தப்பட்டுவிட்டது. ஜம்மு -– காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்பு அதிகாரத்தின்படி இரட்டைக் குடியுரிமை அளிக்கப்படவில்லை.
ஜம்மு -– காஷ்மீருக்கு தனியே அரசமைப்பு இருந்தது என்பது உண்மையே. இந்தச் சிறப்பு அரசமைப்பு 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. ஜம்மு -– காஷ்மீரின் அரசமைப்பு என்பது, இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 370இன் கீழ் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது. இவ்வாறு பல சந்தர்பங்களில் காஷ்மீருக்கான 370 ஆவது சட்டப்பிரிவு நீர்த்துப்போன சந்தர்ப்பங்களும் உள்ளன. இந்நிலையில் காஷ்மீருக்கான போட்டி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் தொடர்ந்தது. கூடவே இந்தியா இராணுவத்தினருக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்கள் காஷ்மீரிலும் எல்லை தாண்டியும் தொடர்ந்தன. பொதுமக்களும் தங்களது சுதந்திரம் வேண்டும். பாகிஸ்தான் மற்றும் இந்தியா தங்களுக்கு தேவையில்லை. எங்களது நிலம் எமக்குரியது என்று பல்வேறுபோராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவையாக மாறின.
கடந்த 10 ஆண்டுகளில் அதிக வன்முறை மற்றும் உயிரிழப்புகளைச் சந்தித்த ஆண்டு 2018 என பாதுகாப்பு அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் ஆயுதப் போராட்டக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், இவ்வருடம் பெப்ரவரி – புல்வாமாவில் துணை இராணுவப்படையினர் மீது ஜெய்ஷ்- இ -முகமது நடத்திய தாக்குதலில் 40க்கும் மேலான படையினர் கொல்லப்பட்டனர். இந்தியா-,பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றம் தொடங்கியது. பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியாவும், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானும் நுழைந்து மாறி மாறித் தாக்குதல்களை நடத்தின.
இந்நிலையில் ஜம்மு -– -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பின் 35-ஏ பிரிவு மற்றும் 370ஆவது பிரிவை இரத்து செய்ய மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு முயல்வதாக தகவல்கள் பரவின. ஏனெனில் ஜம்மு, காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்குவோம் என்று 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது பா.ஜ.க. வாக்குறுதி அளித்திருந்தது.
இதற்கிணங்க, இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 370, உட்பிரிவு 1இன் படி, ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையிலான உத்தரவை இம்மாதம் ஐந்தாம் திகதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு தொலைதொடர்புகள் அனைத்தும் முடக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுடன் காஷ்மீரிகளின் காஷ்மீர் விரும்பியோ விரும்பாமலோ ஜம்மு – காஷ்மீர், லடாக் என பிரிக்கபட்டு இந்தியாவாக மாற்றப்பட்டுவிட்டது. இது இந்திய பாதுகாப்பு க்கான அத்தியாவசியமான அதிரடி நடவடிக்கை என்று பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை பாராட்டினாலும் எதிர்க்கட்சிகளும் விஜய் சேதுபதி உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் கடுமையான எதிர்பை பதிவு செய்துள்ளனர்.
அதிகாரத்தினால் எதனையும் சாதிக்கலாம். தங்களது நிலம் தங்களது உரிமை என்று தனி சுதந்திரத்தை விரும்பி போராடும் காஷ்மீரிகளின் மனநிலை என்ன என்பதை யாரும் உணர்வதாக இல்லை. காலம் அனைத்தையும் மாற்றலாம். ஆனால், பூமியின் சொர்க்கமாகத் திகழ்ந்த காஷ்மீரின் காற்றில் கலந்த அந்த மண்ணுக்குரிய அப்பாவி மக்களின் இரத்த வாடை காலங்கள் கடந்தாலும் மாறாது.
குமார் சுகுணா