ஜனாதிபதி தேர்தலுக்கான கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் திருவிழா கோலகலமாக இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது.
பொதுஜன பெரமுன உத்தியோகபூர்வமாக தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது. அமைச்சர் சஜீத்தை அறிமுகப்படுத்துவதுபோல் ஐக்கிய தேசியக்கட்சி பதுளையில் நடத்திய வரவேற்பு வைபவமும் இரு பிரதான கட்சிகளின் முடிவை அறிவித்த நிலையில் தமிழ்மக்கள் இந்த வேட்பாளர்கள் தொடர்பில் என்ன முடிவு எடுக்கப்போ கிறார்கள். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இவர்களில் எந்த வேட்பாளரைக் கைநீட்டிக்காட்டப்போகிறது என்பதை அறிவதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதுபோலவே போட்டியிடும் வேட்பாளர்களும் கட்சிகளும் கூட்டமைப்பின் முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் சரியான கணிப்பாக இருக்கும்.
2005 ஆம் ஆண்டு தேர்தல் தொடக்கம் நடைபெறவுள்ள இந்த தேர்தல்வரை இது ஒரு ஆர்வமான எதிர்பார்ப்பு என்பதைவிட அவசியமான ஒன்றாகவும் இருந்து வந்தமையே அதற்கு காரணம். தமிழ்மக்களுடைய முடிவை எதிர்பார்த்து போட்டியிடவுள்ள வேட்பாளர்களும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போகிறவர் தமிழ்மக்களுக்கு என்ன தரப் போகிறார்கள், என்ன செய்வார்கள் என ஏங்கிய தமிழ்மக்களுடைய எதிர்பார்ப்பும் கடந்த கால அனுபவங்களை அடிப்படையாக கொண்டது. எதிர்பார்த்தது, ஏமாந்தது போன விடயங்கள் மறந்துவிட முடியாதவை.
ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் வெற்றி பெற சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற வேண்டும் என்பது தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் தர்க்கம். குறிப்பாக தமிழ்மக்களுடைய ஆதரவின்றி எந்தவொரு வேட்பாளரும் ஜனாதிபதி கதிரையைக் கைப்பற்ற முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தமிழ் தரப்பினருக்கு உள்ளது. அதேவேளை முஸ்லிம் மக்களின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே ஜனாதிபதியாக முடியுமென்பது முஸ்லிம் கட்சிகளின் நம்பிக்கை. மறுபுறம் மலையக மக்கள் நினைக்கும் ஒருவரே அக்கதிரைக்கு உரித்துடையவர் ஆக முடியுமென்பது மலையகத் தலைவர்களுடைய வாதம்.
ஆனால் எந்தவொரு சிறுபான்மை சமூகத்தினுடைய ஆதரவுமின்றி சிங்கள இனத்தின் ஆதரவுடன் சிங்கள இராஜ்ஜியமொன்றை எம்மால் அமைக்க முடியும் என்ற அகங்காரத்துடன் அண்மையில் பேசப்பட்ட விடயங்களையும் நாம் மறந்துவிடலாகாது.
இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல், பல கோணங்களில் நின்று அவதானிக்கப்பட்டுவரும் ஒன்றாக மாறியிருக்கிறது. ஒன்று பொதுஜன பெரமுனவென்ற புதிய கட்சி மூத்த கட்சிகளுக்கு சவாலாக மாறியிருப்பது; இரண்டாவது, புதிய தலைமுறைகள் தலைநீட்டத் தொடங்கியுள்ள தேர்தலாக இது மாறியிருப்பது. மூன்றாவது, குறித்த ஜனாதிபதி வேட்பாளர்களில் தமிழ்மக்கள் யாரை ஆதரிக்கப்போகிறார்கள் என்பது. ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்தையும் வசீகரிக்கப் போகிற வேட்பாளர் யார் என்பது இன்னொரு விடயம்.
இலங்கை வரலாற்றில் அரசியல் கட்சிகளின் தோற்றம் என்பது சுதந்திர எழுச்சிக்கானதாக, அல்லது சமூக மாற்றத்துக்கானதாக உருவாகியதல்ல. பிரிட்டிஷார் அமைத்த பாராளுமன்றத்தை சுதேசிகள் ஆளவேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்டது. அந்த வகையில் படித்த புத்திஜீவி வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட இடதுசாரி கட்சிகள் மேலாதிக்க சிந்தனை கொண்டவர்களால் தோற்றுவிக்கப்பட்ட வலதுசாரிக் கட்சிகள் தேசிய வாதத்துக்கு அப்பால் இன, மொழி உரிமைசார் விடயங்களுக்காக தோற்றம் பெற்ற கட்சிகளென அவற்றின் தோற்றங்கள் பலதரப்பட்டதாக இருக்கின்றன. பொதுஜன பெரமுனவென்பது மூத்த கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்க வேண்டுமென்பதற்காக ஒரு குழுவினரால் உருவாக்கப்பட்ட கட்சி. இதன் அனுபவம், வயது பாலகத்தன்மை கொண்டது. அவ்வாறு இருக்கும்போது மூத்த கட்சிகளை மிதமிஞ்சி நிற்கும் அளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன.
ஐக்கியதேசியக்கட்சியிலிருந்து உடைந்து சுதந்திரக்கட்சியை பண்டாரநாயக்கா உருவாக்கினார். அது உடைந்து காலப்போக்கில் ஐக்கிய சுதந்திர முன்னணி, சுதந்திரக்கூட்டமைப்பு என ஏதேதோ வடிவங்களில் உரு மாற்றம் பெற்றது. அதே கட்சிக்கு தலைமை தாங்கி ஜனாதிபதி பதவியை சுவீகரித்துக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ இன்று பொதுஜனபெரமுனவின் தலைவராகி தனது தம்பி கோத்தபாய ராஜபக்ஷவை கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறக்கியிருக்கிறார்.
இலங்கையின் மூத்த கட்சியென்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக்கட்சி தனது வேட்பாளரைத் தெரிவு செய்வதில் பல்வேறு சவால்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் தனது வேட் பாளர் யார் என்பதை அறிவிக்க திறானியற்று தடுமாறுவது ஒருபுறமாகவும் எதிரே நிற்கும் பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு ஏற்ற ஒருவரை சவாலாக நிற்கவைக்க முடியு மென்று சொல்ல முடியாமல் தடுமாறுகிற அளவுக்கு நிலைமைகள் குழம்பியகுட்டையாகிக் கிடக்கிறது.
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் எல்லாத்தரப்பினரும் உறுதியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அண்மையில் நடந்த பல சம்பவங்கள் உதாரணங்களாகின்றன.
ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணிலுக்கும் பிரதித்தலைவர் சஜித்துக்கும் இடையில் இன்னும் உடன்பாடு காண முடிய வில்லை. பனிப்போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கட்சியின் தலைவருக்குப் பிரதி தலைவரை முதன்மைப்படுத்த உடன் பாடில்லை. ஆனால் கட்சியின் அநேக தரப்பினர் கையெழுத்திட்டு செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவைக்கூட்டி வேட்பாளரை தெரிவு செய்யுங்கள் என அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். தலைவர் ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை கோரிக்கையை உதாசீனம் செய்ய முடியாமலும் உடன்பட முடியாமலும் தளம்பிக்கொண்டிருக்கிறார் என்பது தகவலறிந்த உண்மை. தனியறையில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். தூதுக்குழவினர் தூது சென்றுள்ளனர். சஜித்தின் ஆதரவாளர்கள் தங்கள் தலைவருக்கு இருக்கும் ஆதரவை பறை சாற்றிக்காட்டும் வகையில் பதுளையில் ஒரு வரவேற்பு வைபவத்தையும் நடத்திக்காட்டியிருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் மக்கள் கருத்து, ஆதரவாளர்கள் விருப்பம், கட்சிப் பெரும்பான்மையின் முடிவு என்று வரும்போது தலைவர் ரணில் தனது முடிவை மீள் பரிசீலனை செய்யவேண்டிவரும் அல்லது மேற் கண்ட தரப்பினரின் கருத்துக்கு உடன்பட்டுத் தான் ஆகவேண்டுமென்ற நிலையே உருவாகிக்கொண்டிருக்கிறது.
இதே நிலையொன்றே பொதுஜன பெரமுன கட்சிக்கும் இருந்து வந்துள்ளது. ஐந்து வேட்பாளர்கள் முன்மொழியப்பட்டிருக்கிறார்கள் நாட்டுக்குப் பொருத்தமான ஒருவரை அறிவிப்பேன் என்று மஹிந்த தெரிவித்த வாக்குறுதி மாறி, ”நான் வேட்பாளரைத் தெரிவு செய்யவில்லை மக்களாகிய நீங்களே தெரிவு செய்துள்ளீர்கள்” என்று முடிவை மக்கள் தலையில் போட்டு மஹிந்த தனது சாணக்கியத்தை வெளிப்படுத்தியிருப்பதும் ஒருவகை ராஜதந்திரந்தான்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ் மக்கள் இந்த தேர்தலில் எடுக்கவிருக்கும் முடிவு அல்லது தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாக கருதப்படுகிற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எடுக்கப் போகும் முடிவு, எத்திசை நோக்கி நகரப்போகிறது என்பதே தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை.
தமிழ் மக்களின் ஆதரவின்றி பொதுஜன பெரமுன வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது என கூட்டமைப்பினர் அடித்து கூறியிருக்கிறார்கள். ”ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவை நாம் இன்னும் எடுக்கவில்லை.சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம்” எனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரன் மட்டக்களப்பில் கூறியுள்ளார்.
கடந்தகால அனுபவங்களின் அடிப்படையிலும் இன்றைய கட்சி வேட்பாளர்கள் தெரி வின் அடிப்படையிலும் கூட்டமைப்பு எடுக்கக்கூடிய நிலைப்பாடு எதுவாக இருக்க முடியும்? அதன் எதிர்கால சாதக பாதக நிலை எவ்வாறு அமையும்? போன்றவை மிக அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டிய விடயங்கள். கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடைவு மட்டம் தமிழ்மக்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புகளையும் எந்தளவு தூரம் அர்த்த மற்ற நிலைக்கு தள்ளியது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஏட்டிக்குப் போட்டியாக நின்றவர்கள் மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்ரமசிங்கவும். சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக தன்னை அறிமுகம் செய்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, தான் தமிழ்மக்களுக்கு விரோதியல்ல என்ற தோரணையில் அடக்கி வாசித்தது மாத்திரமல்ல விடுதலைப்புலிகளையோ அல்லது தமிழ் மக்களின் போராட்டங்களையோ அதிகமாக விமர்சிக்காமல் மிக சாதுவான ஒரு வேட்பாளராக களம் இறங்கினார். இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ரகசியமான பேச்சுவார்த்தைகளும் உடன்படிக்கைகளும் இடம்பெற்றதாக பல வதந்திகள் உலாவின. தாறுமாறாக செய்திகள் வெளிவந்தன.
இதேவேளை, 2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்குப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் தோற்றுப்போன நிலையில் விடுதலைப்பலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு நல்குங்கள் என தமிழ்மக்களிடம் கேட்கவும் தயாராக இல்லாத நிலையில் மஹிந்த வெற்றி வாய்ப்பைப்பெற்றுக்கொண்டார். இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 50.29 சதவீத வாக்கையும் ரணில் விக்ரமசிங்க 48.43 சதவீத வாக்கையும் பெற்ற நிலையில் மேலதிகமாக 180,786 வாக்குக்களால் மட்டுமே மஹிந்த வெல்ல முடிந்தது. வடக்கு கிழக்கு மக்களை விடுதலைப்புலிகள் சுதந்திரமாக வாக்களிக்க விட்டிருந்தால், ரணில் வென்றிருப்பார். நிலைமைகள் மாறியிருக்கும் என்ற கருத்துக் கூறுவோரும் இன்று இருக்கத்தான் செய்கின்றனர். இதே போன்றதொரு நிலைதான் 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் இடம் பெற்றது. மஹிந்தவுக்கு சமபலம் கொண்ட ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும் என்ற கருத்தும் அபிப்பிராயமும் வலு பெற்ற நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவுடன் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டார். இந்த வேட்பாளருக்கு மறை முகமாக சிறுபான்மை கட்சியினரும் ஆதரவு நல்கினார்கள். குறிப்பிட்டுக்கூறுவதானால் கூட்டமைப்பின் ஆதரவும் மறைமுகமாக சரத் பொன்சேகாவுக்கேயிருந்தது.
யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவருக்கும் யுத்தத்துக்குத் தலைமை தாங்கியவருக்குமிடையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் நடந்தது என்னவோ மாயமாகவே இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் அச்சமயம் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
சிங்கள இராஜ்ஜியத்தை வென்று கொடுத்த தலைவருக்கு மக்கள் தேர்தலில் தமது விசுவாசத்தைக் காட்டினார்கள். அந்த ஆட்சியாளரின் ஐந்து வருடங்களும் தமிழ்மக்களுக்கு சிம்மசொப்பனமாகவே இருந்தது. தமிழ்மக் கள் மாத்திரமல்ல, முஸ்லிம் சமூகத்தவர்களும் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன்பின் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இருதேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து, ”பொது வேட்பாளர் மூலம் தேசத்தை காப்பாற்றியுள்ளோம்”என்று கூறினார்கள். ”தமிழ்மக்களின் நீண்டகாலப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண்போம். அதை அரசியல் யாப்பின் மூலம் நிவர்த்தி செய்வோம்” என முழங்கினார்கள்.
இன்று தமிழ்மக்கள் மத்தியில் எழுந்துள்ள பாரிய சவாலாகியிருப்பது யாரை நம்புவது, யாருக்கு ஆதரவளிப்பது என்பதா, அல்லது தேர்தலைப் புறக்கணித்து ஒதுங்கிப்போய் விடுவதா என்பதே. இந்த மூன்று விவகாரங்களுக்கும் அவசரமான முடிவு காணவேண்டியவர்களாக தமிழ்மக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
சுதந்திரக்கட்சி வேட்பாளராக நிறுதப்பட்டிருப்பவருக்கு ஆதரவு நல்கும் நிலையில் தமிழ் மக்களோ அல்லது தமிழர் தரப்பினரோ உள்ளனரா என்பது கடினமான கேள்விதான். பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நிறுத்தப்படடிருப்பவர் தொடர்பில் தமிழ்மக்கள் எத்தகைய அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்கள் என்பது சொல்லாமலே விளங்கக் கூடிய விடயம். முள்ளிப்போரில் பச்சை பச்சையாக கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள், வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோர், கடத்தப்பட்டோர் வெள்ளைவான் கடத்தல்கள்,கோத்தா முகாமின் ஊடகவியலாளர்கள் படுகொலை கள் என ஏகப்பட்ட குற்றப்பத்திரங்களுக்கு சொந்தக்காரராக இருப்பவர் கோத்தா. அத்தகைய ஒருவரை நாட்டின் தலைவராக்கும் மகாத்மாக்களாக தமிழ்மக்கள் இருக்கப் போவதில்லை என்பது யாவரும் அறிந்தது.
தமிழ்மக்களின் ஆதரவின்றி நாட்டின் தலைவராக முடியுமென்று மமதையுடன் பேசிய தரப்பினர் இப்பொழுது தமிழ்மக்களின் ஆத ரவு தமக்கு இருக்கிறது என்று கூறுமளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன. அண்மையில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் மரியாதையின் நிமித்தம் கோத்தாவின் அழைப்பை ஏற்று சந்தித்து உரையாடிய வேளை, பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ”என்னை தமிழ்மக்கள் ஆதரிப் பார்களேயானால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவேன். பொலிஸ் அதிகாரங்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்குவேன், காணி அதிகாரங்கள் மத்திய அரசின் செல்வாக்குக்கு உட்பட்டவை. அவற்றைத்தவிர்த்து அனைத்தும் செய்வேன் என கூறியதாக சித்தார்த்தன் தெரிவித்திருந்தார்.
இச்சந்திப்பு விவகாரம் பல சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்த சில தமிழ்த்தரப்பினர், கோத்தபாய ராஜபக்ஷ மாத்திரமல்ல தங்களால் நிறுத்தப்படும் எந்த வேட்பாளராயினும் நாங்கள் ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோமென வாக்குறுதி நல்கிவந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு, இந்திய அரசின் ஆலோசனையைப் பெற்றபின்பே முடிவெடுப்பதாக ஒரு ஐதீகமுண்டு. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இந்தவாரம் இந்தியா பயணித்திருப்பது மருத்துவ தேவைக்காக என்று கூறப்பட்டபோதும் சில ஊடகங்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் ஆலோசனையைப்பெறுவதற்கே சென்றுள்ளார் என்ற கருத்துப்பட செய்திகள் வெளியாகியுள்ளன. இது இவ்வாறு இருக்க,கோத்தபாய ராஜபக்ஷ இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான கோரிக்கையொன்றை அண்மையில் விடுத்திருந்தபோதும் சாதகமான பதில் கிடைக்கவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் நிலைமைகளை அனுசரித்தே கூட்டமைப்பு முடிவுகளை எடுத்து வந்துள்ளது என்ற வாய்ப்பாட்டுக்கு அமைய பார்ப்பின், இந்திய அரசாங்கத்தின் கைகாட்டல் இல்லாமல் கூட்டமைப்பு, பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தரும் நிலைக்கு வரும் என்று கூற முடியாது. அதுவுமன்றி கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும்போது சர்வ தேசத்துக்கும் இந்தியாவுக்கும் வாக்குறுதிகளை வழங்கிய மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்றாத காரியங்களை கோத்தபாய ராஜபக்ஷ நிறைவேற்றுவார் என்று கூட்டமைப்பு நம்புவதற்கு தயாராக இருக்காது என்பதும் ஒரு பொதுவான ஊகமே.
இதே தருணத்தில் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்நோக்கும் இன்னும் சில பிரச்சினைகளுக்கு முடிவு காணப்படவில்லையென்ற விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன. அவருடைய அமெரிக்க குடியுரிமை தொடர்பான சர்ச்சை இன்னும் தெளிவாக்கப்படவில்லை என்பதும் மறுமுனையில் ’எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நாங்கள் ஆதரவு வழங்கப்போவத்ல்லை’ என்ற சுதந்திரக்கட்சியினரின் அறிவிப்புக்களும் சாதகமாக இல்லாத நிலையே காணப்படுகிறது. இதற்கு அப்பால் முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் என்ன முடிவை மேற்கொள்வார்கள் என்பதற்கு ஆரூடம் கூற முடியாமல் உள்ளது.
அடுத்த தெரிவாக் முன்நிற்பவர் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேம தாஸ. கட்சியிலிருக்கும் புதிய குழுவினர் இவரை வரவேற்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். தந்தையைப்போல் செயல்திறனும் ஆளுமையும் கொண்டவராக இவர் விளங்குவார் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் கட்சியில் மேலாதிக்க சிந்தனை கொண்ட வேண்டாத மனப்பாங்குடன் காணப்படுகிறவர்கள் இவரின் வளர்ச்சையையோ தலைமையையோ ஏற்கத்தயாரில்லாத நிலையே காணப்படுகிறது. இன்னும் முடி வில்லா முடிவாக காணப்படும் நிலையில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படாவிடின் கட்சியிலிருந்து சஜித்தும் அவரது ஆதர வாளர்களும் விலகிவிடுவார்கள் என்ற தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர்க்க முடியாதபடி பிரதமர் ரணில் இதற்கொரு பொருத்தமான முடிவை எடுக்காவிடில், கட்சி உடையும் நிலைக்கு தள்ளப்படலாமென்றும் அனுமானிக்கப்படு கிறது.
சஜித்தின் வரவை முஸ்லிம் இளைஞர்களும் மூத்த ஆதரவாளர்களும் வரவேற்கிறார்கள் என்ற ஒரு எண்ணப்பாடு நிலவி வருகிற நிலையில் அவரின் தெரிவு பற்றி அதிக ஆட்சேபனை இருக்காது என்று நம்பப்படுவது இயற்கையே.
இதேவேளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அல்லது தமிழ்மக்கள் என்ன முடிவை எடுக்கவிருக்கிறார்கள் என்ற விடயத்தில் ஆழமான கருத்துக்கள் இன்னும் முன் வைக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி யென்பது தமிழர்களைத் தொடர்ந்து ஏமாற்றிவரும் கட்சி. அந்த வழியில் புதிய தலைமைகளும் அதையேதான் செய்வார்கள் என்ற அவநம்பிக்கையிலிருந்து தமிழ்மக்கள் இன்னும் விடுபடவில்லை. அதுவுமன்றி தமிழ்மக்கள் நீண்டகால சிந்தனையுடனும் கொள்கையுடனும் போராடிவரும் அபிலாஷைகளைத் தீர்த்து வைக்கும் ஆளுமை கொண்டவராக அல்லது துணிவுடையவராக சஜித் இருப்பாரா என்பதும் இப்போதைக்கு தீர்மானிக்க முடியாத விடயங்கள். அண் மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் தொல் பொருள் திணைக்களத்தின் அட்ட காசங்களுக்கு அவர் இதுவரை மௌனம் சாதித்து வருவதையே காணமுடிகிறது. இவரின் கீழ் உள்ள பௌத்த சாசன அமைச்சின் கீழேதான் தொல்பொருள் திணைக்களம் இயங்கிவருகிறது. இதுவரை ஒருதமிழர் அல்லது முஸ்லிம் கூட இத்திணைக்களத்துக்கு தெரிவு செய்யப்படவில்லை.
எவ்வாறு இருந்த போதிலும் ஒப்பீட்டு ரீதியில் கோத்தாவா அல்லது சஜித்தா என்று வருகிற போது தமிழ்மக்களாயினும் சரி, முஸ்லிம் மக்களாயினும் சரி தெரிவு செய்யக்கூடிய சாத்திய நிலைப்பாடு குறித்து இதிலிருந்து தெரிந்து கொள்ளமுடியும் . குறிப்பாக மைத்திரியை ஆதரித்து ஏமாந்து போனது போலவோ அல்லது பிரதமர் ரணில்மீது கொண்ட நம்பிக்கைகள் உடைந்து போனது போலவோ இல்லாத ஒரு தெரிவுக்கும் முடிவுக்கும் தமிழ்த் தரப்பினர் வருவார்கள் என்று எதிர்காலத்தில் நம்ப இடமுண்டு.
திருமலை நவம்