பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவின் புறநகர் பகுதியில் குச்லாக் என்ற பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை பிராத்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த மசூதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறை சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
குண்டு வெடிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறை இந்த குண்டு வெடிப்புக்கு 8 முதல் 10 கிலோ எடை அளவிலான வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த இப்பகுதியில் கடந்த ஒருமாதத்திற்குள் நான்கு குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal