கருவறையில் வளரும் தங்கள் சிசுவின், ‘ஸ்கேன்’ படத்தை முதல் முறையாகப் பார்ப்பது, பெற்றோருக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவம். ஆனால், பெற்றோரில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமே பார்வை இல்லாவிட்டால், அந்த அற்புத அனுபவம் அவர்களுக்கு கிடைக்காமலே போய்விடும். ஆனால், அவர்களுக்கும் தங்கள் சிசுவை பார்க்க வழி செய்திருக்கிறது, போலந்திலுள்ள, ‘இன் யுடெரோ 3டி’ என்ற ஒரு நிறுவனம்.
மருத்துவர் எடுக்கும் அல்ட்ரா ஸ்கேன் கோப்பினை, 3டி பிரின்டர் எனப்படும் முப்பரிமாண அச்சியந்திரம் புரிந்துகொள்ளும் கோப்பாக, இன் யுடெரோ நிறுவனம் மாற்றுகிறது. இதற்கென சொந்தமாக ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்கிறது
இன் யுடெரோ. தாயின் கருப்பையில் சிசு எந்த வாக்கில், என்ன தோரணையில் படுத்திருக்கிறதோ, அதே போல, அதே அளவுக்கு புடைப்போவிய வடிவில் முப்பரிமாண அச்சியந்திரம் அச்சிட்டுத் தந்து விடுகிறது. பார்வையற்ற பெற்றோர், தங்கள் சிசுவின் பிஞ்சுக் கைகள், பாதங்கள், மூக்கு, நெற்றி என்று விரல்களால் தடவிப் பார்த்து பேரானந்தம் அடைகின்றனர்.சிசுவின் உருவம், நச்சு இல்லாத பிளாஸ்டிக்கால் தயாராகிறது. அதை தயாரிக்க மூன்று மணி நேரம் முதல் ஏழு மணி நேரம் வரை ஆகும். சில பெற்றோர், அதுவரை காத்திருந்து வாங்கிப் போவதாகச் சொல்கிறது இன் யுடெரோ.
கடந்த சில வருடங்களாகவே, பாப்பாவின் முழு 3டி உருவச் சிலையை முப்பரிமாண அச்சில் வார்த்தெடுப்பது பேஷனாகி விட்டது. ஆனால், அதே தொழில்
நுட்பத்தின் மூலம் பார்வையற்றவர்களுக்கென்று செய்து தருவதுதான் தனி சிறப்பு. இப்போது ஐரோப்பிய நாடுகளில் நம்மூர் ஜெராக்ஸ் கடை போல,
முப்பரிமாண அச்சியந்திரங்களை பயன்படுத்திக்கொள்ளும் அங்காடிகள் வர ஆரம்பித்து விட்டன. எனவே, போலந்துக்கு வெளியே உள்ள பெற்றோருக்கு, முப்பரிமாண அச்சிடலுக்கு தேவையான டிஜிட்டல் கோப்பினை, இணையத்தின் மூலம் அனுப்பி வைக்கிறது இன் விடெரோ. அந்த கோப்பினை வைத்து, பெற்றோர், தங்கள் நாட்டிலேயே தன் செல்லத்தின் உருவத்தை அச்சிட்டு எடுத்து வைத்து கொஞ்சலாம்.