ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் சுமார் 60 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப் பொருட்கள் கடத்தும் பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச கடத்தல் கும்பலைக் கைது செய்ய பல்வேறு நாட்டு காவல்துறையினர் ரகசிய திட்டம் தீட்டி செயல்படுத்தி வந்தனர். அவர்களின் நடமாட்டத்தையும் ரகசியமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மகாணத்தில், போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றத்திற்காக பிரிட்டனைச் சேர்ந்த இருவரை ஆஸ்திரேலியா காவல் துறை கைது செய்தனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “அவர்களிடம் இருந்து 766 கிலோ அளவிலான எம்டிஎம்ஏ என்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆஸ்திரேலிய நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களில் இதுவே அதிகம்” என்றனர்.
இதேபோன்று கடந்த வாரம் நியூசிலாந்து நாட்டில் பிரிட்டனைச் சேர்ந்த இருவர், 200 கிலோ அளவிலான போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.