விடுதலைப் புலிகளின் உறுப்பினரான குமரன் பத்மநாதனை கைது செய்ய வேண்டுமாயின் இலங்கை, சர்வதேச இன்டர்போல் பொலிஸாரிற்கு சிவப்பு அறிக்கை அனுப்ப தீர்மானிக்க வேண்டும் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஆங்கில ஊடகம், இன்டர்போல் அலுவலகத்திடம் தொடர்பு கொண்ட போது,
எந்த நாட்டிலும் உள்ள ஒரு தனி நபரை கைது செய்ய வேண்டுமாயின் முதலில் சிவப்பு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பாக இந்தியாவினால் கே.பி தேடப்பட்டு வருகின்றார்.
இந்தியாவில் உள்ள சட்டத்தின் படி பயங்கரவாத தடைச் சட்டத்தை மீறியதாக கே.பி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு நாட்டின் அங்கீகாரம் இல்லாமல் எந்த ஒரு தனி நபரையும் கைது செய்ய முடியாது என இன்டர்போல் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
மேலும், குமரன் பத்மநாதன் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் திகதி மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க கடந்த அரசாங்கத்துடன் கே.பி செயற்பட்டு வந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் காவலில் இருந்த கே.பி கிளிநொச்சியில் இருந்தபடியே போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றை நடாத்தி வந்ததுடன் கடந்த அரசாங்கத்துக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal