ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் களமிறக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவை ஒன்றுக்கூட்டுமாறு கோரி கடிதமொன்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க உள்ளதாக அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து வேறுப்பாடுகள் தொடர்பில் வினவியப்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதபதி வேட்பாளராக களமிறக்குவதே கட்சியில் அனேகமானவர்களின் நிலைப்பாடாகவுள்ளது. அதேபோன்று கூட்டணியை அறிவிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தால் மாத்திரமே உறுதியான கூட்டணியொன்றை கட்டியெழுப்ப முடியும். அதுவே எனது நிலைப்பாடும் ஆகும் என அவர் தெரிவித்தார்.