ஆஸ்திரேலிய நாட்டில் 12 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவதை அறிந்த அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
மறுசுழற்சி திட்டங்களுக்காக 20 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (13.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ) ஒதுக்கப்படும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று அறிவித்துள்ளார். மேலும் நாட்டில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்ற தகவல் அறிந்ததும் கடும் அதிருப்தி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அவை மீண்டும் மறுசுழற்சி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். ஆனால் அந்த நம்பிக்கை உடைக்கப்பட்டு, சீர்குலைந்துள்ளது. வெறும் 12 சதவீத பிளாஸ்டிக் பொருட்களே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ஒன்றரை மில்லியன் டன்கள் திடக்கழிவுகள் நம் நாட்டில் இருந்து மறுசுழற்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கு நாம் தான் பொறுப்பு. திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை நாமே செயல்படுத்த வேண்டும்” என்றார்.
தொழில் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் காரன் ஆண்ட்ரூஸ் கூறுகையில், திட மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுவது மிக முக்கியமானதாகும். அதுவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முதல் வழியாகும்.
இன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. முதலில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். ஒரு கிலோ மீட்டர் நீள சாலை அமைப்பதற்கு 5 லட்சம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த முடியும். இதுபோன்ற சில புதுமையான யுக்திகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு வித்திட வேண்டும்” என்றார்.