அண்ணல் குமார் பொன்னம்பலம் என்னும் உரிமைக்குரல் எம்மிடமிருந்து பறிக்கப்படாமல் வாழ்ந்திருந்தால் இன்று ஆகஸ்ட் 12 இல் அவருக்கு 81 வயதாகும்.
அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார். எவ்விடத்திலும், தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டு வந்தார். இதனால், இதன் உச்சக் கட்டமாக இனவாதிகளால் குமார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழர் தம் அடிப்படை அபிலாசைகளை இடித்து வலியுறுத்தியவர் அவர். திம்புக்கோட்பாடுகளையே தமிழர் தம் அடிப்படை அபிலாசைகளாக கொண்டிருந்தார். எந்த ஒரு சிங்கள தலைமையும் வடக்கு கிழக்கு எனும் தமிழர் தம் பூர்வீக நிலத்தையும் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையையும் ஏற்று கொள்வார்களானால் அரசியல் தீர்வைத்தர வல்லவர்களாவர் அன்றேல் இல்லை என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான சக வாழ்வு சாத்தியப்படுமென நம்பினார். அதுவே அவர் அடிப்படை அபிலாசைகளை என்று வலியுறுத்த காரணமானது.
இதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில் பார்ப்போம் ஆனால் இந்திய ஈடுபாடு குறித்த அவரது நிலைப்பாடானது திருமதி பண்டாரநாயக்க மற்றும் இடதுசாரிக் கம்யூனிஸ்ட்டுகள் என்போரின் நிலைப்பாடுகளுக்கு நெருங்கியதாக நகர்ந்தது. அபிலாசைகளை அடியொற்றிய DPA Manifesto எனும் அரசியல் உடன்பாடு ஊடாக 1988 ஜனாதிபதித் தேர்தலில் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை ஆதரிப்பதற்காக வடக்கின் இடதுசாரிக் கம்யூனிஸ்ட்கள் ஏனைய முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தபோது குமார் பெறுமதிமிக்க பங்களிப்பை ஆற்றினார். அது திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுடனான நட்புறவிற்குக் காரணமாயிற்று. சம்பிக்க ரணவக்கவும் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் சார்பாக இதில் கையொப்பமிட்டிருந்தார். அவரிடம் நேர்மையிருந்ததால் அரசியல் நேர்மையும் இருந்தது.
கடைசி வருடங்களின்போது அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவூட்டுவது சிலருக்குப் பிடிக்காது. அவரது கடைசி வருடங்களின்போது அவர் காட்டிய மன வலிமையானது அதீதமானது. எம் தலைவர் குமாரின் அரசியல் நிலைப்பாடானது ஏறுமாறானதாகவோ சந்தர்ப்பவாத போக்குடையதாகவோ இருக்கவில்லை. ஆனால் கொள்கை நிலையைத்தமிழர் தம் அபிலாசைகளை வலியுறுத்துவதாகவே இருந்தது. அவரது முயற்சிகள் நம்பிக்கையின் தோல்வியானது. குமாரின் மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட வழிகோலிற்று.
அவரிடமிருந்து நான் இன்றும் கைக்கொள்ளும் ஒரு பண்பு, கருத்து வேற்றுமைகள் வேறு, மனித அன்பும் மனித பண்பும் வேறு. இறுதிக்காலம் வரை அனைத்து இயக்கங்களையும் வரவேற்று தனது இல்லத்தில் விருந்தோம்பி ஒன்றுபடுத்தி பொது கருத்திற்காக சந்திப்புக்களை ஏற்படுத்தினார். இதன் விளைவுதான் அவரின் பின்னாளில் பத்து பதினொரு கட்சிகளின் கூட்டமைப்பாக நாம் ஒன்றுபட்டு செயற்பட, போராட்டம் நடத்த வழிவகுத்தது.
அதேவேளை தமிழ் மக்களின் அபிலாசைகளுக்குச் சார்பாக நின்ற ஒரேயொரு உண்மையான சக்தியாக விடுதலைப்புலிகள் என அவருக்குத் தென்பட்டது. அவர் இரத்தத்தையும் துன்பியலையும் பார்க்கமுடியாதவர். இந்நிலைப்பாட்டிற்கு ஒரு தமிழ்த் தேசியவாதி என்ற கோணத்திலிருந்து குரல் கொடுத்தார்.
பிரச்சினைக்கு நீதியானதும் நிலையானதுமான ஒரு தீர்வைக் காண்பது தொடர்பில் உள்ளொன்றும் புறமொன்றுமாக விளங்கும் குறுகிய எண்ணங்கொண்ட நாட்டுப் பற்றை வலியுறுத்தும் சக்திகளும் தேசிய அரசியல் கட்சிகளும் தான் சுயநிர்ணய கோரிக்கைக்குப் பாரிய அளவில் பாதகமேற்படுத்தியதாக கூறுவார்.
குமார் வாழ்ந்த காலம் மிகமிக கடினமான காலமாகும். இதுவரை ஆயுதம் ஏந்தாத எந்தவொரு தமிழ் அரசியல் வாதியைவிட அதிக பிரச்சினைக்கு தனது எதிர் நீச்சலை, ஆபத்தை ஏற்றுக்கொண்ட அவர், அவரது எந்தவொரு பாராளுமன்ற அரசியல் எதிரியைவிடவும் நேர்மையாக அதிகமாகச் சாதித்தார்.
சில்லறை அரசியல் வாதிகளைப்போலன்றி பாரிய சர்வதேச உறவுகளையும்,இவரை அவர்கள் நாடவேண்டிய தேவையையும் முற்றிலும் தமிழினத்திற்காகவே ஏற்படுத்தி செயற்பட்டார் என்பதை அவரின் மறைவின்பின்னான ஐ.நா. உள்ளிட்ட சர்வதேசத்தாரது பதிவுகள், இரங்கல்கள், பாராட்டுகளும் துயர்பகிர்வுப் பதிவுகளும் எடுத்துக்காட்டின.
இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின்அரசியல் நலன்களில் அவருக்கிருந்த அர்ப்பணிப்பு முக்கியத்துவம் கொண்டதாக விளங்கியது.அரசியல் சதுரங்கத்தில் தாக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. அவருடைய அரசியலுடன் பாரிய ஈடுபாட்டுடன் செயற்பட்டு இக்கட்டான நேரத்தில் அவருயிர் பறிக்கப்பட்டவுடன் அவர் தம் அரசியல் வழி தொடர பொதுச்செயலாளர் பணியை அன்று ஏற்றவன் இன்றும் என்றும் என் அரசியற் தலைவனாக கொண்டவன் எனும் வகையில் இன்றைய அவரது பிறந்த நாளில் இப்பதிவு காலத்தின் தேவை என உணர்கின்றேன்.
கலாநிதி நல்லையா குமரகுருபரன்
(தலைவர் தமிழ் தேசிய பணிக்குழு)