சிறிலங்கா விமானபடையினரின் விமான தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் நினைவு தூபி ஒன்று வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது.இந்த நினைவுத் தூபியில் கொல்லப்பட்ட மாணவிகளின் படங்களை பதிப்பதற்கு தடை விதித்துள்ள புதுக்குடியிருப்பு காவல் துறை குறித்த பணிகளை முன்னெடுத்த சிலரை இன்று (11)காலை புதுக்குடியிருப்பு காவல் துறை நிலையம் வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் விமானப்படையின் விமானங்கள் நடத்திய குண்டு தாக்குதலில் 54 பாடசாலை மாணவிகள் உயிரிழந்தனர்.
அவர்களுடைய 13 ஆவது ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில் வள்ளிபுனம் செஞ்சோலை செல்கின்ற வீதியில் அவர்களுக்காக பாரிய நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டது.
உரிய அனைத்து திணைக்களங்களின் அனுமதி பெறப்பட்டு குறித்த வீதியில் நினைவு தூபி அமைக்கப்பட்ட போதும் நினைவுத் தூபியில் மாணவர்களின் படங்களை பதிப்பதற்கு காவல் துறை தடை விதித்திருக்கிறார்கள். அத்தோடு குறித்த பணிகளை முன்னெடுத்த மேஷன் உள்ளிட்ட சிலரை இன்று காலை புதுக்குடியிருப்பு காவல் துறை நிலையத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Eelamurasu Australia Online News Portal