விஞ்ஞானிக்கு கிடைத்தது ரூ.3.34 கோடி பரிசு!

அமெரிக்காவில் வாழும் இந்திய விஞ்ஞானியான ரமேஷ் ரஸ்காருக்கு, மதிப்புமிக்க, ‘லெமெல்சன்- எம்.ஐ.டி.,’ பரிசு கிடைத்திருக்கிறது. இந்த பரிசுடன், 3.34 கோடி ரூபாய் ரொக்கமும் அவருக்கு வழங்கப்படும்.

மஹாராஷ்டிராவிலுள்ள நாசிக் நகரை பூர்வீகமாகக் கொண்ட, 46 வயது ரமேஷுக்கு, ‘மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல கண்டுபிடிப்புகளை’ செய்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.அமெரிக்காவில், இன்று அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊற்றுக் கண்ணாக கருதப்படும், கல்வி மையமான மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தில் இவர் பேராசிரியராக இருக்கிறார்.

அதி தீவிர ஆராய்ச்சியாளரான ரமேஷ், புகைப்படக் கருவி, ஒளி, ஊடக சாதனங்கள் என்று பல பிரிவுகளில் புதுமைகளை படைத்திருப்பதோடு, 75 காப்புரிமைகளை பெற்றுள்ளார். இதுவரை, 120 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

‘பெம்டோ புகைப்பட கருவி’ என்ற புரட்சிகரமான கருவி இவர் உருவாக்கியது தான். மற்றவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவுவது, ஆலோசனை சொல்வது, ரமேஷுக்கு மிகவும் பிடித்தமானது. எனவே தான், தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில், ஒரு பகுதியை, உலகெங்கும் உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்கள் கூட்டாக சேர்ந்து இயங்கும் ஒரு அமைப்பை உருவாக்க பயன்படுத்தப் போவதாக ரமேஷ் அறிவித்திருக்கிறார்.