விக்னேஷ் மரணத்திற்கு பிறகாவது காவிரி தாய் எங்கள் பூமியை நனைக்கட்டும் என பாரதி ராஜா கூறியுள்ளார்.
கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் நடந்த கண்டன பேரணியில் மன்னார்குடியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்தார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விக்னேஷ் இறப்பிற்கு இயக்குநர் பாரதி ராஜா இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதன் சுருக்கம்:தமிழ் ஈழப் பிரச்னையில் தீக்குளித்த முத்துகுமார் தொடங்கி காஞ்சிபுரத்தில் தீக்குளித்த செங்கொடி, தற்போது காவிரி நிதி நீர் பிரச்னையில் தீக்குளித்த விக்னேஷ் வரை, இவர்களை நினைத்து பார்க்கவே முடியவில்லை. வேதனையில் நெஞ்சு வலிக்கிறது.
உன் போராட்டத்தின் முடிவை, தீர்வை, அதன் விளைவை, அதன் பலனை நீ உயிருடன் இருந்து பார்க்க வேண்டாமா? உன் கோரிக்கையின் வெற்றி இலக்கை அடைந்து, நீ உயிருடன் இருந்து பெருமிதம் கொள்ள வேண்டாமா? உன்னை நீயே அழித்துக் கொள்வதால் போராட்டங்கள் வெற்றி அடைவதில்லை. உனக்கு பின்னால் அது ஒரு செய்தி ஆகி விடுகிறது. பலருக்கு அது ஒரு நிகழ்வு. அவ்வளவு தான்.
தமிழர்களுக்காக இன்னும் எவ்வளவோ போராட்டங்களில் ஈடுபட்டு தமிழர் இயக்கத்திற்காக பாடுபடுகிற வாய்ப்பை, உன் உணர்ச்சிப்பூர்வமான மரணத்தின் மூலம் நீ அதை இழந்து விட்டாய். மரணம் தீர்வாகாது.
அது ஒரு தற்கொலைக்கு சமம். தமிழுக்குகாக போராடுவோர் நாட்டின் சரித்தரங்களை படியுங்கள், வீர வரலாறுகளை படியுங்கள், கூடவே விவேகத்தையும் சேர்த்து படியுங்கள். எத்தயை போராட்டங்களிலும் உயிரை வீணாக்கி கொள்ளாதீர்கள் வன்முறை என்பது நமது பண்பாடும் அல்ல.
நாகரீகமும் அல்ல. தமிழனின் வரலாறு ஒரு வீர வரலாறு. தமிழன் தன்மானம் மிக்கவன். ஆனால், தடம் புரளாதவன். எதையும் இழந்து போராட வேண்டாம். இன்னொரு ஜென்மம் இல்லை. இன்னொரு முறை பூமியை தரிசிக்கிறோமோ இல்லையோ, ஆனால் இருக்கும் போதே இந்த பூமியின் அழகை, தமிழ் மொழியை, தமிழ் இனத்தை,ஒழுங்காக தரிசிப்போம். அறவழியில் போராடுவோம்.
நாம் நம் பூமியில் விதைக்கப்பட்டது எழுவே… வீழ்வதற்காக அல்ல. இந்த தீக்குளிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்.
விக்னேஷின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். அவரின் குடும்பதாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வோம். இவருடைய மரணத்திற்கு பிறகாவது காவிரித் தாய் கண்ணீர் சிந்தி எங்கள் பூமியை நனைக்கட்டும். தீக்குளிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal