அவுஸ்திரேலியாவில் தமிழர் விடுதலைக்கான தொடர் போராட்டம் ஆரம்பம்!!

அவுஸ்திரேலியாவில் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக தமிழ் ஏதிலிகள் கழகம் அறிவித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:

ஆஸ்திரேலியாவில் காலவறையின்றி தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் ஈழ தமிழர்களை உடனடியாக விடுதலை செய்

ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களே!

நீண்ட காலமாக எந்த காலவரையும் இல்லாமல் தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் இலங்கை அகதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க ஒன்று கூடுங்கள்.

2009 போருக்கு பின்னான இந்த பத்தாண்டு கால சூழலில், ஆஸ்திரேலியா அரசால் சுமார் ஐந்திற்க்கும் மேற்ப்பட்ட இலங்கை அகதிகள் நிரந்தர தடுப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். கொடுமையின் உச்சமாக தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் ஒருவருக்கு இரத்த புற்றுநோய் என்றும் மற்ற ஒருவருக்கு கண் பார்வை திறன் இழந்துள்ளார் என்று அறிந்தும்; ஐ. நா மனித உரிமை ஆணையம் அவர்கள் விடுதலைக்கு வேண்டுகோள் விடுத்தும் ஆஸ்திரேலியா அரசு கருணை காட்டாமல் உள்ளது.

பல தரப்பட்ட முன்னெடுப்புகள் , நடவடிக்கைகள் எடுத்தும் ஆஸ்திரேலியா அரசு இந்த ஐந்து அகதிகளின் பிரச்சனையில் கேளா முகமாய் இருக்கின்றது. ஆகவே ஒன்றுபட்ட தமிழர்களின் அழுத்தம் தான் அந்த அப்பாவி ஐந்து அகதிகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை வாங்கித் தரும்.

விடயப் பின்னனி

2009 ஆண்டில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்தும், ஆயிரக்கணக்கானவர்களை காணாமல் ஆக்கியும் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை கடைசி வரை கோரிய தமிழீழ விடுதலை புலிகளை அழித்தும் சிங்கள பேரின வாத அரசு உலக நாடுகளின் துணையோடு ஆயுத போராட்டத்தை மௌனிக்கச் செய்தது. விடுதலை புலிகள் இல்லாத இலங்கையில் முக்கியமாக தமிழர்கள் பகுதியில் திட்டமிட்ட இனப்படுகொலை 2009 இற்கு பின்பும் தொடர்கிறது என்பதே நிதர்சனம். திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் பல கட்டங்களாக வடக்கில் நடக்கிறது என்பதை ஆஸ்ரேலியாவின் நெருக்கடி ஆய்வுக்குழு ஒன்றின் அறிக்கை அன்மையில் சுட்டிக்காட்டி உள்ளது. தமிழ் மக்கள் இருக்கும் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியமர்த்தல், தமிழக பகுதிகளுக்கு சிங்கள பெயர் மாற்றம்; தமிழ் மக்களின் அடையாள தளங்களை அழித்தல், பௌத்த அடையாள ஸ்தலங்களை உருவாக்குதல்; தமிழர் பகுதியில் சிங்கள உழைக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குதல் என்ற பெயரில் தமிழ் மக்களின் இருப்பை அழிக்க சிங்கள பேரினவாத அரசு தமிழ் மக்கள் விரோத போக்கை திட்டமிட்டு கையாண்டு வருகின்றது. தமிழ் மக்களை நிலவளத்தால், பொருளாதாரத்தால், வரலாற்று அடையாளங்களால் படிப்படியாக ஒடுக்கி மேலும் அவர்களை ஒடுக்கப்பட்ட இனமாக அடையாளப்படுத்த இலங்கை அரசு எல்லா வேலைகளையும் எல்லா தளங்களிலும் செய்கின்றது.

தமிழர்களுக்கான வலுவான குரலாக இருந்த தமிழீழ விடுதலை புலிகள் இல்லாத வெற்றிடம் ஒருபுறம், தமிழ் மக்களுக்கு வலுவான ஆதரவு நிலையை எடுக்காத அரசியல் கட்கள் மருபுறம் மேலும் தமிழ் மக்களை தனிமைப்படுத்தி ஒடுக்குதலுக்கு இலகுவான சூழலை 2009 இற்கு பின்னான இலங்கையில் உருவாகி உள்ளது. இவை எல்லாவற்றையும் உறுதி படுத்தும் விதமாக போருக்கு பின்னும் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்குமுறைக்கும், சித்திரவதைகளுக்கும், பல கட்ட உளவியல் தாக்குதல்களுக்கும் ஆளாகி உள்ளனர் என்று 2017 ல் ஐநா தூதுவர் பென் எமர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அரசின் இருமுகத் தன்மை

2000 ஆண்டின் காலப்பகுதியில் சமாதான பேச்சுவார்த்தைக்கான சூழல் இருந்தும் அமெரிக்காவின் துணையோடு ஆஸ்திரேலியா அரசு அந்த சூழலை தகர்த்தெறிந்தது. அத்தோடு மட்டுமில்லாமல் நேரடியாகவே இலங்கை அரசிற்கு யுத்த காலத்தில் ஆஸ்திரேலியா அரசு உதவிகள் பல புரிந்து கொண்டும் மறுபக்கம் தமிழர்களின் போராட்டங்கள், தமிழர்களுக்கான போராட்ட சக்திகள் போன்றவற்றை ஒடுக்கியும் என்று பல கட்ட வேலைகளை செய்தது நாம் எல்லோரும் அறிந்ததே.

யுத்தத்தின் முடிவிற்கு முன்பான சில ஆண்டுகள் தொடங்கி புலம்பெயர் தேசங்களில் இருந்து விடுதலைப்புலிகளின் நிர்வாகத்திற்கு சென்று கொண்டிருந்த பொருளாதார உதவிகளை இந்த நாட்டின் அரசு முடக்கியது. ஈழப்போராட்டம், விடுதலைப்புலி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த தமிழர்கள் பலரை இந்நாட்டின் அரசாங்கம் கைது செய்தது. ஆகவே தமிழ் மக்களின் போராட்டங்கள் இலங்கைக்குள்ளும் புலம்பெயர் தேசங்களிலும் முடக்க இலங்கைக்கு துணையாக ஆஸ்திரேலியா போன்ற உலக நாடுகள் துணை நின்றது என்பது யாருமே மறுக்க முடியாத உண்மை. இந்நாடுகளின் துணை அவர்கள் தந்த பலம் 2009 ம் ஆண்டு இலங்கை சிங்கள பேரின வாத அரசு இந்நூற்றாண்டின் மிக கோரமான இனப்படுகொலை ஒன்றை செய்து முடிக்க உதவியாய் இருந்தது.

இலங்கையில் நடந்த யுத்தத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிகள் பல புரிந்த ஆஸ்திரேலியா போன்ற அரசு இன்று அந்த போரின் பாதிப்பால் அகதி தஞ்சம் கோரும் தமிழர்களை மனிதாபிமானமற்று நடத்துகின்றது. இலங்கை அகதிகள் கடல் வழியாகவும் விமானம் வழியாகவும் வருவதை தடுக்க மற்ற எல்லா நாடுகளையும் விட ஆஸ்திரேலியா அரசு மிக மோசமான சட்டங்களை வகுத்துள்ளது. இலங்கைக்குள்ளேயே தங்களின் காவல் பிரிவினரை வைத்து தமிழ் அகதிகளின் வருகையை கட்டுப்படுத்தும் அளவிற்கு துரிதமாக இந்த அரசாங்கம் வேலை செய்கிறது.

இலங்கை என்றால் மற்ற நாடுகளை விட ஆஸ்திரேலியாவிற்க்கு தனி பாசம் என்பதை 2013 ம் ஆண்டு CHOGM கலந்தாய்வில் கலந்துகொள்ளும்போதே உணரப்பட்டது ( இங்கிலாந்து , கனடா போன்ற நாடுகள் இந்நிகழ்வை புரக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது). அந்நிகழ்வின் போது இலங்கையில் நடக்கும் ஒடுக்குமுறைகள், போர்குற்றங்களைப் பற்றி கேள்வி கேட்ட போது அன்றைய ஆஸ்திரேலியா பிரதமர் “சில நேரங்களில் சில தவறுகள் நிகழத்தான் செய்யும்” என்று கூறி இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டிற்கு முலாம் பூசினார்.

2009 யுத்தம் முடிந்த அடுத்த ஆண்டு முதலே ஆஸ்திரேலியா அரசு இலங்கை அகதிகளின் தஞ்ச கோரிக்கை மனுக்களை நிலுவையில் வைக்கத் துடங்கியது ( ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கும் அதே நிலைப்பாடு இருந்தது). போர் முடிந்து விட்டது இனி இலங்கை அகதிகள் தஞ்ச கோரிக்கையின் நிலைப்பாடுகளில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் ( UNHCR) மாற்றங்களை கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் பல அகதி கோரிக்கைகளை நிராகரிக்கலாம் என்ற எண்ணத்தில் முடிவுகள் வழங்காமல் நிலுவையில் வைத்து இருந்தது.

அத்தோடு 2012 ம் ஆண்டு பிரத்தியேகமாக சட்ட மாற்றங்களை இலங்கை அகதிகளுக்கு என்று மட்டும் உருவாக்கி வைத்திருந்தது இந்த அரசாங்கம். இதன்
மூலம் ஆஸ்திரேலியாவிற்க்குள் வரும் தமிழ் அகதிகள் எந்தவித அடிப்படை அகதி கோரிக்கை முகமைக்குள் உட்படுத்தாமல் நேரடியாக இனப்படுகொலை அரசிடமே ஒப்படைக்கப்பட்டனர். 2013 ம் ஆண்டு ஆஸ்ரேலியா கடல் எல்லைக்குள் அகதிகளுடன் வந்த எல்லா படகுகளும் மனிதாபிமானம் இன்றி திருப்பி அனுப்பப்பட்டது.

ஆஸ்திரேலிய புலனாய்வுத்துறையின் நெருக்கடி

இவை எல்லாவற்றிக்கும் மேலாக மிக மோசமான ஒன்றாக பார்க்கப்பட்டது அகதிகளுக்கு எதிரான ஆஸ்திரேலியா அரசால் கொண்டுவரப்பட்ட “அகதிகள் எதிர்மறை மதிப்பீட்டு “ முறைதான். இலங்கை அரசின் புலனாய்வுதுறை என்பது அச்சம் ஊட்டும் சித்திரவதை செய்யும் படைப்பிரிவாக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா என்ற முன்னேற்றகரமான நாடு ஒன்றில் அதன் புலனாய்வுத்துறையின் மதிப்பீடு என்ற மறைமுகமான சித்திரவதையால் பாதிக்கப்பட்ட 55 அகதிகளில் 50 க்கும் மேற்பட்டோர் ஈழத்தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அகதிகளுக்கு எதிரான மதிப்பீட்டு முறை பல அகதிகளை பத்து ஆண்டுகளுக்கு மேலாக தடுப்புல் இருக்க வேண்டிய நிலைக்கும், நிரந்தர குடியுரிமை பெற முடியாத அவலத்திற்க்கும்; தங்களுக்கு என்று வாழ்க்கையோ, குடும்பமோ ஏற்படுத்திக்கொள்ள முடியாத இயலாமைக்கும்; இருக்கும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து இணைந்து வாழ முடியாத துர்பாக்கிய நிலைக்கும் தள்ளியது. நியாயமாக அகதி என்ற வரையறைக்குள் வருபவர் என்று எல்லாவிதத்திலும் நிரூபிக்கப்பட்டு இருந்தாலும் இந்த மனிதாபிமானமற்ற சட்ட மாற்றம் சொல்லொணா அவலத்திற்க்குள் பலரை தள்ளி உள்ளது! இதன் மத்தியில் தற்காலிக விசா முறை என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி அகதி தஞ்சம் கோரும் ஒருவருக்கு அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் நிரந்தரமாக இந்நாட்டில் வாழ்வதறக்கான உரிமை மறுப்பதாக அமைக்கப்பட்டது. இப்படி உயிராபத்தில் வரும் மக்களை முக்கியமாக தமிழ் மக்களை மனிதாபனமின்றி எல்லா காலங்களிலும் இந்த அரசாங்கம் வஞ்சித்தே உள்ளது!

குறிப்பாக இத்தனை வருட காலங்கள் ஆகியும் தமிழ் அகதிகளின் இத்தனை ஆண்டுகால நிரந்தர தடுப்பு காவலுக்கு ஆஸ்திரேலியா அரசால் தரப்படும் காரணம் அகதிகளுக்கு தமிழீழ விடுதலை புலிகளோடு இருந்த தொடர்பும் அவர்களது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடும் தான் என்கிறது. மூன்று சகாப்தகால போராட்ட வரலாற்றில் 75 சதவீத தமிழர்கள் பகுதிகள் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் ஏதோ விதத்தில் இருந்தது என்பதும் அத்தகைய நிலையில் அங்கு வாழ்ந்த அத்தனை தமிழர்களும் ஏதோ விதத்தில் அவர்களுடன் தொடர்பில் இருந்து இருக்க வேண்டிய வாழ்வியல் இருந்து இருக்கும் என்பதும் ஆஸ்ரேலியா போன்ற நாடுகள் உணர்ந்தும் வேண்டுமென்றே பாதிக்கப்பட்ட மக்களை அவலத்திற்குள் வைத்திருப்பது கவலையானது.

கடந்த காலங்களில் வருடக்கணக்கில் தடுப்புக்காவலில் இருந்த 55 க்கும் மேற்ப்பட்ட தமிழ் அகதிகள் விடுதலை செய்யப்பட்டாலும் கடந்த பத்தாண்டுகளாகியும் காலவரம்பின்றி தடுப்பில் இருக்கும் ஐந்து அகதிகளின் விடுதலை இன்னமும் நடைபெறவில்லை. பாதுகாப்புகோரி நம்பி வந்த நாட்டில் ஒரு யுகத்தை தொலைத்து மனதாலும் உடலாலும் துன்பப்பட்டு நிற்கும் அந்த ஐந்து அகதிகளுக்காக குரல் கொடுப்பது நமது ஒவ்வொருவரின் கடமை.

இனப்படுகொலையாளர்களுக்கு சிவப்பு கம்பளம்; அப்பாவி அகதிகளுக்கு அடக்குமுறைகள்

ஈழ தமிழர்களை நாட்டில் அனுமதிக்க விடாமல் தடுக்க பல தரப்பட்ட ஒடுக்குமுறை சட்டங்களை, நடவடிக்கைகளை செயல்படுத்தின இந்த அரசாங்கம். இலங்கையில் நடந்த கடைசி யுத்தத்தின் போது 70,000 அப்பாவி மக்களை கொன்று குவித்த போர் குற்றவாளிகளான மகிந்த இராஜபக்ஷே,கோத்தபாய இராஜபக்ஷே, ஜகத் ஜெயசூர்யா, திசாரா சமரசிங்கா போன்றோரை பூங்கொத்து கொடுத்து நாட்டினுள் வரவேற்றது.

2009 இனவழிப்பின் கடைசி காலகட்டங்களில் இலங்கையில் இருந்து வந்து தஞ்சம் கோரி குடியுரிமை பெற்ற ஆஸ்திரேலியா வாழ் தமிழர் இனப்படுகொலையாளன் மகிந்த இராஜபக்ஷேவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்குக் கூட எடுக்காமல் தள்ளுபடி செய்து இனப்படுகொலையாளன் மேலான விசுவாசத்தை நிலைநாட்டியது ஆஸ்திரேலியா அரசு. இனப்படுகொலை அரசின் அங்கம் வகித்த திசாரா சமரசிங்கே ஆஸ்திரேலியாவில் இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்புகளை, சட்டப்பூர்வ வழக்குகளை கூட தள்ளுபடி செய்தது ஆஸ்ரேலியா அரசு. ஆகவே இந்த அரசாங்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கோ , விளிம்பு நிலை மக்களுக்கானதோ இல்லை என்பது அம்பலம். அத்தகைய மக்களுக்காக நாம் தான் வலுவாக குரல் கொடுக்க வேண்டும்.

அப்பாவி தமிழ் அகதிகளின் விடுதலைக்கு உதவிடுங்கள்

நீண்ட காலமாக குற்றவாளிகள் போல் தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் அகதிகளின் உடனடி விடுதலைக்காக குரல் கொடுக்க தமிழர்களே முன் வாருங்கள். மேலும் இது தொடர்பான முன்னெடுப்புகளில் பங்கு கொள்ள கீழே தரப்பட்டுள்ள மின்னஞ்சலூடாக எங்களை தொடர்புகொள்ளலாம்.

contact@tamilrefugeecouncil.org.au