காஸ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்- ஐநா ஆழ்ந்த கவலை

காஸ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐநா இதன் காரணமாக மனித உரிமை நிலை மோசமடையலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஓளிநாடாவில் ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

காஸ்மீரில் சில நாட்களிற்கு முன்னர் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மனித உரிமை மீறல்களை அதிகரிக்கலாம் என நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

உடன்படுவதற்கு மறுப்பவர்களை அடக்குவதற்காக  இந்திய அதிகாரிகள்  தொலைத்தொடர்பு வலையமைப்புகளை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முடக்கிவந்தமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியில் உடன்பட மறுப்பவர்களை ஒடுக்குவதற்காக கடந்த காலங்களில் கண்மூடித்தனமான தடுத்துவைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றன எனவும் ஐநா அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களை கையாளும் போது கடந்த காலங்களில் இந்திய அதிகாரிகள் அளவுக்கதிகமான படைபலத்தை பயன்படுத்தியதும் அதன் காரணமாக மரணங்கள்  ஏற்பட்டுள்ளதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும புதிய கட்டுப்பாடுகள் நிலைமையை வேறு அளவிற்கு  கொண்டு சென்றுள்ளன என தெரிவித்துள்ள ஐநா அதிகாரி தற்போது முழுமையான தொலைதொடர்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இது முன்னர் நாங்கள் பார்த்ததை விட தீவிரமானது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த தடைகள் மக்கள் தங்கள் மாநிலத்தின் எதிர்காலம் குறித்த ஜனநாயக கருத்துப்பரிமாற்றங்களில் ஈடுபடுவதை தடுப்பதாக அமையும் எனவும் ஐநா அதிகாரி தெரிவித்துள்ளார்.