“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெல்லக்கூடிய முழுத் தகுதியும் சகல வல்லமையும் முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே உண்டு. எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சரத் பொன்சேகாவைக் களமிறக்கவேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் சிறிலங்கா பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர் அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவின் பெயரைத்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கவுள்ளார் என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அவ்வாறு கோத்தபாய களமிறக்கப்பட்டால் அவர் போர் வெற்றியை முன்னிலைப்படுத்தித்தான் தேர்தல் பிரசாரம் செய்வார்.
இதற்குப் பதிலடி கொடுக்கக்கூடிய முழுத் தகுதி சரத் பொன்சேகாவுக்கே உண்டு. ஏனெனில், போரை வழிநடத்திய தளபதி அவரே. அவரை மீறிப் போர் வெற்றிக்கு கோத்தபாய உரிமை கோர முடியாது.
அதேவேளை, சர்வதேச அரங்கில் பல குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியுள்ள கோத்தபாயவின் முகத்திரையைக் கிழிக்கக்கூடிய சகல வல்லமையும் பொன்சேகாவுக்கே உண்டு.
எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சரத் பொன்சேகாவைக் களமிறக்கவேண்டும். அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாயவைத் தவிர வேறொருவர் அறிவிக்கப்பட்டால் அவரை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க களமிறங்க வேண்டும்.
அதைவிடுத்து கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாஸவை வேட்பாளராகக் களமிறக்கினால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புண்டு” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இதன்போது மேலும் தெரிவித்துள்ளனர்.