அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனையை எதிர்நோக்கும் கணேசமூர்த்தி தியாகராஜா!!

அவுஸ்திரேலியாவில் தனது நண்பர் ஒருவரை படுகொலை செய்த இலங்கைத்தமிழர் ஒருவர் சிறைத்தண்டனையை எதிர்நோக்கின்றார் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் அகதியாக தஞ்சமடைந்த கணேசமூர்த்தி தியாகராஜா என்பவரிற்கே சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அடிலெய்டில் உள்ள பென்பீல்ட் கார்டன் வீட்டில்  தனது நண்பரான முகமட் மன்சூரை இவர் படுகொலை செய்தார் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இம்மாத இறுதியில் நீதிமன்றம் இவரிற்கான தண்டனையை அறிவிக்கவுள்ளது. மன்சூர் தனது நண்பராக விளங்கவேண்டிய ஒருவரால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார் என அரசதரப்பு வழக்கு தொடுநர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

தான் குற்றம் செய்ததை ஒப்புக்கொள்ளாத தியாகராஜா இந்த குற்றத்தை வேறு யாரே செய்தது போன்ற தோற்றத்தை உருவாக்க முயன்றார் மேலும் மன்சூர் தன்னை ஐஎஸ் அமைப்பில் இணையும் படி கோரினார் என தெரிவித்தார் என  குற்றம்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கொல்லப்பட்ட நபர் தனது மனைவி குறித்து தெரிவித்த கருத்துக்களினால் சீற்றமடைந்த நிலையிலேயே தியாகராஜா இந்த கொலையை செய்தார் என அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்ததையும் நீதிபதி நிராகரித்துள்ளார்.

இதேவேளை கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தவர்கள் தாங்கள் இறக்கும் வரை இந்த துயரம் தங்களை தாக்கும் என தெரிவித்துள்ளனர்.