இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க பெண்மணி டோனி மொரிசன் தனது 88 ஆவது வயதில் காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக நியூயோர்க்கில் உள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு காலமாகியுள்ளதாக அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1931 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி பிறந்த டோனி மொரிசன் 1993 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
அத்துடன் புனைகதை இலக்கியத்துக்காக 1988 ஆம் ஆண்டு புலிட்சர் பரிசும் பெற்றவர் ஆவார். தனது மகனுடன் இணைந்து சிறுவர்களுக்கான பல நூல்களையும் பதிப்பித்துள்ளார்.
நாவல்களில், டோனி மோரிசன் கறுப்பு அமெரிக்கர்களின் அனுபவத்தை மையமாகக் கொண்டு எழுதினார். குறிப்பாக கறுப்பின மக்களைப் பற்றியும், கறுப்பு இனப் பெண்களின் அனுபவங்கள், சந்திக்கும் கொடுமைகள், அவர்கள் மீதான சுரண்டல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியெல்லாம் எழுதி உலகுக்குத் தெரிவித்தார்!
கறுப்பினப் பெண்களுக்குச் சம உரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதற்காகப் போராடவும் வேண்டும் என அமெரிக்காவின் ‘டொனி மோரிசன்’ அறைகூவல் விடுக்கவும் செய்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal