முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ அவரது இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து தவிர்க்கப்பட்ட கடவுச்சீட்டொன்றை கடந்த மே மாதம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து எவ்வாறு பெற்றார் என்பது தொடர்பில் கேள்விகள் கிளப்பப்பட்டிருக்கின்றன.
தான் இலங்கைச் சட்டத்தின் கீழ் இப்போது ஒரு இரட்டைப் பிரஜையல்ல என்பதற்கு இந்தக் கடவுச்சீட்டு சான்று என்று கடந்தவாரம் ராஜபக் ஷ செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
ஆனால் இரட்டைக் குடியுரிமையுள்ள நபர் கள் வழமையாக இலங்கைக் குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கு விரும்பினால் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் முறைப்படியான விண்ணப்பத்தைச் செய்ய வேண்டும் என்று குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் கூறுகின்றார்கள். ராஜபக்ஷ இந்த வழமையான செயன்முறையைப் பின்பற்றவில்லை என்றும், ஆனால் அவர் எவ்வாறோ கடவுச்சீட்டைப் பெற்றுவிட்டார். அதில் அவரது இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் அந்த அதிகாரிகள் கூறுகின்றார்கள்.
குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தில் புதிய விண்ணப்பங்களைப் பெறுவதற்கான முடிவு நேரம் தினமும் பிற்பகல் 3 மணியாகும். ஆனால் மே 7 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் பெறப்பட்ட ராஜபக் ஷவின் கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவம் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது என்பதைத் திணைக்களத்தின் பதிவுகள் காட்டுகின்றன.
விரல் அடையாளத்தைப் பதிவு செய்வதற்கு ராஜபக் ஷ குடிவரவு திணைக்களத்திற்கு நேரில் பிரசன்னமாகியும் இருக்கவில்லை. அவரது முன்னைய தேசிய அடையாள அட்டை அல்லது எல்லைக் கட்டுப்பாட்டுப் பதிவுகளுடன் எந்தத் தொடர்புமில்லாத புதியதொரு தேசிய அடையாள அட்டையின் கீழ் சில மணித்தியால நேரத்திற்குள் கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
புதிய தேசிய அடையாள அட்டையொன்று பயன்படுத்தப்பட்டிருப்பதால் குடிவரவுத் திணைக்கள கணனி முறைமையின் ஊடாக அவர் ஒரு இரட்டைப்பிரஜை என்ற பழைய பதிவைத் தன்னியல்பாக வெளிக்காட்டுவது தடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஏய்ப்பு நடவடிக்கை இனிமேலும் தாங்கள் இரட்டைப் பிரஜைகள் அல்ல என்று நிரூபிப்பதற்கு சாதாரண மக்களினால் பின்பற்றப்படுகின்ற சட்டச்செயன்முறைகளை கோத்தபாய தவிர்ப்பதற்கு வாய்ப்பைக் கொடுத்தது.
இரட்டைக் குடியுரிமை என்பது முன்னாள் இலங்கைப் பிரஜைகள், ஒரு இலங்கைப் பிரஜையின் உரிமைகள் அனைத்தையும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் அந்தஸ்து என்று அதிகாரிகள் கூறினர். ‘வழமையான குடியுரிமையைப் போலன்றி இது கண்டிப்பாக அரசியல் தீர்மானத்தின் அடிப்படையிலான ஒன்றாகும். அமைச்சர் தேசிய நலன்களை மனதில் கொண்டு இரட்டைக் குடியுரிமையை அங்கீகரிப்பதற்கு அல்லது நிராகரிப்பதற்கு அல்லது இரத்துச் செய்வதற்கு கேள்விக்கு இடமின்றிய அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார். குடியுரிமைச் சட்டத்தின் 19 ஆவது பிரிவின் பிரகாரம், இலங்கையின் நலன்களுக்கு சகல சூழ்நிலைகளிலும் சிறந்தது என்று அமைச்சர் திருப்திப்பட்டால் மாத்திரமே இரட்டை குடியுரிமையை ஒருவருக்குக் கொடுக்கலாம்’.
வழமையான பிரஜைகளைப் போலன்றி இரட்டைப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை அமைச்சர் இரத்துச் செய்வதற்கு குடியுரிமைச் சட்டம் அனுமதிக்கிறது. இரட்டைப் பிரஜையொருவர் இலங்கைப் பிரஜையாகத் தொடர்ந்து இருப்பதால் இலங்கைக்கு எவ்வித பயனுமில்லை என்று அமைச்சர் கருதும் பட்சத்தில் எந்த நேரத்திலும் அவரது இலங்கைக் குடியுரிமையை இரத்துச்செய்யலாம் என்று பிரிவு 19(7) கூறுகிறது.
இரட்டைப் பிரஜையொருவர் இலங்கையின் ஒரு சாதாரண பிரஜையாக மாறுவதற்கு விரும்புவாரேயானால் (அவரது அந்தஸ்து இரத்துச் செய்யப்படுவதற்கு ஆட்படாத பட்சத்தில்) அவர் மீண்டும் முழுமையாக இலங்கைப் பிரஜை என்று பிரகடனம் செய்யுமாறுகோரி குடியுரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். இதுவிடயத்தில் தீர்மானமெடுக்கும் பொறுப்பு குடியுரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சருக்கே உரியது.
சகோதரரின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்கு உதவும் முகமாக 2005 ஆம் ஆண்டில் இலங்கைக்குத் திரும்பியதாக கோத்தபாய ராஜபக் ஷ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சத்தியக்கடதாசி மூலம் தெரியவருகிறது. அந்த நேரத்தில் அவர் ஒரு அமெரிக்கப் பிரஜையே அன்றி இலங்கைப் பிரஜை அல்ல. மஹிந்த ராஜபக்ஷவிற்காகப் பிரசாரம் செய்யும் முகமாக கோத்தபாய ராஜபக் ஷ தனது அமெரிக்கக் கடவுச்சீட்டுடன், நாட்டில் பிரவேசித்தவுடன் பெற்ற உல்லாசப் பிரயாண விசாவுடனேயே வந்ததாகக் குடிவரவுத் திணைக்களப் பதிவுகள் காட்டுகின்றன. அவரது சகோதரர் இலங்கை ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்த தினமான 2005 நவம்பர் 18 வெள்ளிக்கிழமை கோத்தபாய ராஜபக்ஷ இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார்.
கோத்தபாய ராஜபக் ஷ இலங்கைப் பிரஜையாக இல்லாத நிலையில் அல்லது தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதியில்லாத நிலையிலும் கூட, 2005 ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் இடாப்பில் அவர் தன்னை ஒரு வாக்காளர் எனப் பதிவு செய்திருந்ததாகத் தேர்தல் திணைக்களத்தின் பதிவுகள் காட்டுகின்றன. ராஜபக் ஷ நந்திமித்ர கோத்தபாய 114 ஆம் இலக்க வீட்டின் 130 ஆம் இலக்க வாக்காளர் என்று வீரகட்டியவிலுள்ள மெதமுலானவிற்கான தேர்தல் இடாப்பில் நிரற்படுத்தப்பட்டிருக்கிறார். ராஜபக்ஷ பேர்ஸி மகேந்திர, அவரது மனைவி ராஜபக் ஷ சிராந்தி, கோத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்கப் பிரஜை மனைவி ராஜபக்ஷ அயோமா, ராஜபக்ஷ சமல் ஆகியோரும் அந்த 114 ஆம் இலக்க இல்லத்திலிருந்து வாக்களிப்பதற்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ராஜபக் ஷவின் இரட்டைக் குடியுரிமையுடன் தொடர்புடைய எந்தவொரு கோவையையும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. 2005 நவம்பர் 18 (சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட தினம்) அவர் இரட்டைக் குடியுரிமை விண்ணப்பத்துடன் தொடர்புடையதாகச் சமர்ப்பித்த ஆவணங்கள் மாத்திரமே கிடைக்கக்கூடியதாக உள்ளது.
அவர் விண்ணப்பித்த தினத்திற்குப் பின்னரான அடுத்த வேலைநாளான 2005 நவம்பர் 21 திங்கட்கிழமை அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகப் பதிவுகள் காண்பிக்கின்றன. அவ்வாறு அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்ட அத்தருணத்தில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பாக அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பல மாதங்களாகப் பெருவாரியான விண்ணப்பப்படிவங்கள் பரிசீலிக்கப்படாமல் தேங்கிக்கிடந்த போதிலும்கூட கோத்தபாயவின் விண்ணப்பம் முன்னுரிமை கொடுத்துக் கவனிக்கப்பட்டது.
இரட்டைக் குடியுரிமை 2005 நவம்பரில் வழங்கப்பட்ட போதிலும் கூட ராஜபக்ஷ தொடர்பான தரவுகள் 2014 ஜனவரி 13 ஆம் திகதி மாத்திரமே பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக குடிவரவுத் திணைக்கள கணனி முறைமை மூலம் தெரியவருகிறது. அத்தகைய சூழ்நிலையில் உண்மையான நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு மூலமுதல் கடதாசிப் பதிவுகளை அல்லது டிஜிட்டல் பதிவுகளையே பார்ப்பார்கள்.
ஆனால் அதிகாரிகள் விண்ணப்பத்தினதோ, கொடுப்பனவு செய்யப்பட்டமைக்கான பற்றுச்சீட்டினதோ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு இரட்டைக் குடியுரிமை சான்றுப்பத்திரம் வழங்கப்பட்ட கோவையையோ திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரட் டைப் பிரஜைகள் புதிய கடவுச்சீட்டைப் பெறும் போது தங்களது இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழை வழமையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் கோத்தபாய ராஜபக் ஷ கடவுச்சீட்டொன்றைப் பெறும் போது இரட்டைக் குடியுரிமைச் சான்றி தழை சமர்ப்பித்திருக்கிறார் என்பதற்கான எந்தவொரு பதிவும் குடியகல்வுத் திணைக் களத்தில் இல்லை.
கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்ட விவகாரத்தில், இரட்டைக் குடியுரிமை பற்றிய முக்கிய பதிவுகள் மாற்றம் செய்யப்பட்டதாகத் தோன்றுகிற அல்லது காணாமல் போயிருப்பதாகத் தோன்றும் சூழ்நிலைகளில் முறைகேடுகள் இடம்பெற் றிருப்பதாக சந்தேகிக்கப்பட்டார் மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு விசாரணை யாளர்கள் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வ முறைப்பாடொன்றை அனுப்புவதே வழமையாகக் கடைப்பிடிக்கப்படும் நடவடிக்கையாகும். ஆனால் இந்த விவகாரத்தில் குடிவரவு அதிகாரிகள் தகவல் களை குற்றவியல் விசாரணைத் திணைக்களத் திற்கு அனுப்பியிருக்கவில்லை என்று தெரியவருகிறது.
(பைனான்சியல் டைம்ஸ்)