மிக மூத்த இந்திய-ஆஸ்திரேலியர் 107 வயதில் காலமானார்!

சிட்னியில் வாழ்ந்துவந்த நாட்டின் மிக மூத்த இந்திய-ஆஸ்திரேலியரான Shankerlal Dalsukhram Trivedi அண்மையில் தனது 107வது வயதில் காலமானார்.

Shankerlal Dalsukhram Trivedi 28ம் திகதி டிசம்பர் மாதம் 1911ம் ஆண்டு இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள வஸ்னா என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவரது மனைவி 1993ம் காலமானதைத்தொடர்ந்து இந்தியாவிலிருந்து நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து அங்கு 8 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் 2001-இல் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு குடிபெயர்ந்து ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொண்டார்.

சிட்னியில் வாழ ஆரம்பித்த காலம்முதல் குஜராத் பின்னணி கொண்ட இந்தியர்களின் நன்மதிப்பை சம்பாதித்துக்கொண்ட Shankerlal Dalsukhram Trivedi தனது மரணம் வரை நண்பர்களின் விழாக்கள் பலவற்றுக்கு நேரில் சமுகமளிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.

105வது வயதில் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டைப் புதுப்பித்தபோது ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது அதிவயதுகூடிய ஆண் மற்றும் அதிவயது கூடிய இந்திய-ஆஸ்திரேலியர் என Shankerlal Dalsukhram Trivedi இனங்காணப்பட்டார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய வாக்காளர் பட்டியலில் உள்ள வயதுகூடிய நபர்களின் வரிசையிலும் இடம்பெற்றிருந்தார்.

இரண்டு உலகப்போர்கள், பல அதிபர்கள் மற்றும் பிரதமர்களை தனது வாழ்க்கையில் கடந்துவந்த Shankerlal Dalsukhram Trivedi தனது குடும்பத்தில் 6 பேரப்பிள்ளைகள், 11 பூட்டப்பிள்ளைகள் மற்றும் 5 கொள்ளுப்பிள்ளைகள் என 5 தலைமுறைகளைப் பார்த்திருக்கிறார்.

தனது 107வது வயதிலும் அதீத நினைவாற்றலுடன் திகழ்ந்த Shankerlal Dalsukhram Trivedi தான் சந்திக்கும் நபர்களுடனான பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு அவர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்குவது வழக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

இவரது மறைவையொட்டி சிட்னிவாழ் குஜராத் சமூகத்தினர் தமது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.