பிரபல நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. சினிமா துறையை சேர்ந்த இவர் விலங்குகள் நல வாரிய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரிய துணைத் தலைவர் எஸ்.சின்னி கிருஷ்ணா கூறும்போது, “நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவை விலங்குகள் நல வாரிய உறுப்பினராக சேர்க்க பிற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். இதன்படி, அவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டு, விலங்குகள் துணை குழுவில் உறுப்பினராக செயல்படுவார். இவரை விலங்குகள் நல வாரிய தூதராகவும் நாங்கள் நியமித்துள்ளோம். இவர் சினிமா துறையில் தீவிரமாக பணியாற்றி வருபவர். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். இவரது வருகையினால் விலங்குகள் நல வாரியத்துக்கு சிறப்பு ஏற்படும்” என்றார்.
கடந்த வாரம் சென்னை திருவான்மியூரில் உள்ள விலங்குகள் நல வாரியம் சென்ற சவுந்தர்யா ரஜினிகாந்த், அங்குள்ளவர்களிடம் அவருடைய அனுபவம் மற்றும் உண்மையான விலங்குகள் அல்லாமல் கிராபிக்ஸ் காட்சியில் எப்படி விலங்குகள் காண்பிக்கப்படுகிறது என்பதை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal