பிலிப்பைன்ஸ் நாட்டில் கடல் பயணத்தின்போது சூறாவளி காற்றுடன் பெய்த பெருமழையில் சிக்கிய இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.
நிலநடுக்கங்களால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டும் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20 முறை கடற்புயல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் பெருமழையும் பெய்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும். எனவே, யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடல் மார்க்கமாக படகுகளில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தது.
ஆனால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குய்மாரஸ் மற்றும் ஈவோய்லோ மாகாணங்களுக்கு இடையில் கடல்வழியாக பயணிகளை ஏற்றிச்சென்ற இரு படகுகள் நேற்று பிற்பகல் சூறைக்காற்றுடன் அடித்த கனமழையில் சிக்கிஅடுத்தடுத்து கவிழ்ந்தன.
தகவல் கிடைத்து விரைந்துவந்த கடலோரக் காவல் படையினர் 62 பயணிகளை பத்திரமாக மீட்டதுடன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 31 பிரேதங்களையும் கண்டெடுத்தனர்.