முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்கள் அமீரலி, அப்துல்லாஹ் மஹ்றூப் ஆகியோர் ஜுலை 29ஆம் திகதி மீண்டும் அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள். ஆயினும், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பைசால் காசிம், ஹரிஸ், அலிசாஹிர் மௌலானா ஆகியோர் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்
களையும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பைசால் காசிம், ஹரிஸ், அலிசாஹிர் மௌலானா ஆகியோர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மாத்திரமே அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்கள். இவர்களின் இக்கூற்றின் மூலமாக முஸ்லிம் அமைச்சர்கள் முன் வைத்த கோரிக்கைளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று தெளிவாகின்றது. அதேவேளை, கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தின் பிரச்சினையை முறையாக தீர்க்கும் போதுதான் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆனால், கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தின் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டமையை கட்சியின் ஆதரவாளர்கள் விமர்சிக்கின்றார்கள். அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்முனை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ளாத நிலையில் அமைச்சர் பதவியைப் பெற்றிருக்கக் கூடாதென்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதேவேளை, தலைவர் ரவூப் ஹக்கீமை அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களே சொன்னோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் கல்முனை பிரச்சினையை தீர்வுக்கு கொண்டு வருவதற்
குரிய பத்திரத்தை அமைச்சரவையில் முன் வைப்பதற்கே ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டதாகவும் பைசால் காசிம் தெரிவித்துள்ளார். கட்சியின் உயர்பீடத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி வழங்க முடியுமாக இருந்தால் எதற்காக உயர்பீடத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஒரு சில உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஆகவே, அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டமையை நியாயப்படுத்துவதற்காகவே அறிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அதில் உண்மையில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்த போது முன் வைத்த கோரிக்கைகளில் பலவற்றை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. அதனால் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு முஸ்லிம் காங்கிரஸிற்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை போன்று அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்த முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும், அதன் பின்னர் கல்முனை பிரச்சினைக்கு தீர்வு வேண்டி அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டுமென்றும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முடிவு செய்யப்பட்டது. இதன் போது ஹரிஸ் கல்முனை வடக்கு உப
பிரதேச செயலகப் பிரச்சினைக்கு தீர்வு தரும் வரை தான் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று தெரிவித்தார். ஹரிஸின் இந்த அறிவிப்புத் தான் பைசால் காசிம், அலிசாஹிர் மௌலானா ஆகியோர் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ளாமைக்கான காரணமாகும். ஹரிஸ் அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ளாத நிலையில் ஏனையவர்கள் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் போது ரவூப் ஹக்கீம் மற்றும் ஏனையவர்களின் செல்வாக்கில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் அதேவேளை, ஹரிஸின் செல்வாக்கில் அதிகரிப்பு ஏற்படும். இந்நிலை பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால்தான்ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்ட போது பைசால் காசிம், அலிசாஹிர் மௌலானா ஆகியோர்கள் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளாமைக்குரிய காரணமாகும். இதில் அலிசாஹிர் மௌலானா மாட்டிவிடப்பட்டுள்ளார்.
கல்முனை பிரச்சினை அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ரவூப் ஹக்கீமுக்குமே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் அலிசாஹிர் மௌலானாவின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதனை மீறியும் அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ளாமைக்கு காரணம், அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்ளாதிருக்கின்ற அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை ஆசுவாசப்படுத்துவதற்கேயாகும்.
மேலும், அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்ளாதிருக்கும் நாடகம் கூட ஒரு வாரத்திற்குதான் என்பது பலருக்கு தெரியாத விடயமல்ல. கல்முனை பிரச்சினையை தீர்ப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழர் தரப்பினரும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட முன்வந்துள்ளார்கள். எல்லைகளை வரையறை செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வார்கள். ஆயினும், ஹரிஸ் அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ளமாட்டார். கல்முனை பிரச்சினை முடியும் வரை அமைச்சர் பதவியை ஏற்கமாட்டேன் என்ற அறிவிப்புத் தான் அவரின் அரசியலுக்கு அச்சாணியாக இருக்கின்றது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் பலருக்கு சந்தேகங்கள் உள்ளன. அவர் கட்சியின் தலைமைக்கு எதிரானவர், கிழக்கில்
கட்சியின் தலைவர் இருக்க வேண்டுமென்ற கொள்கையை கொண்டவர். ரிஷாத் பதியுதீனுடன் நெருக்கமான உறவைக் கொண்டவர், தலைவர் பதவியை இலக்கு வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்று பல சந்தேகங்கள் உள்ளன. இதனால், கல்முனை விவகாரத்தில் ஹரிஸ் தனித்து அரசியல் இலாபம் அடைய முடியாதென்பதில் ரவூப் ஹக்கீம் உறுதியாக இருக்கின்றார்.
இதேவேளை, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக கல்முனை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இதற்கு தமிழ், முஸ்லிம் தரப்பினர் ஒரு இணக்கப் பாட்டிற்கு வர வேண்டுமென்று ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இன்றைய சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்குவதற்கு கல்முனை எல்லைப் பிரச்சினையே காரணமாகும். ஆதலால், இரு தரப்பினரும் சேதாரமில்லாத விட்டுக் கொடுப்பை செய்து இரண்டொரு நாட்களில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். சேதாரமில்லாத விட்டுக் கொடுப்பு என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கல்முனை பிரச்சினை நீடித்துக் கொண்டு செல்வதற்கு காரணம் இரு தரப்பினரும் விட்டுக் கொடுப்புடன் செயற்படுவதற்கு தயாரில்லாது இருப்பதுதான். இதேவேளை, தமிழர் தரப்பினர் விட்டுக் கொடுப்புடன் செயற்பட முன்வர வேண்டுமென்று ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையை நீதியின் அடிப்படையில் தீர்த்துக் கொள்வதா அல்லது விட்டுக் கொடுப்பின் அடிப்படையில் தீர்த்துக் கொள்வதா என்பதே முக்கிய பிரச்சினையாகும். விட்டுக் கொடுப்புடன் என்று சொல்லும் போது ஒரு தரப்புக்கு அநியாயம் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. ஆயினும், இப்பிரச்சினையை இன்னும் நீடித்துக் கொண்டு செல்ல முடியாது.
இதேவேளை, கல்முனை பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக எவ்வாறு கையாண்டால் அரசியல் இலாபம் அடையலாமென்றே தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட்டு வந்துள்ளார்கள். இதனால், கல்முனை பிரச்சினை முழுமையாக அரசியலில் சிக்கியுள்ளது. அரசியல்வாதிகள் கல்முனையை நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று தெரிவித்து மக்களின் உணர்வுகளில் குளிர் காய்ந்து வாக்குகளைப் பெற்றுக் கொண்டு வந்துள்ளார்கள். ஆனால், தற்போது தீர்வினை கொடுக்க வேண்டிய நிலைக்கு தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதேவேளை, கல்முனை பிரச்சினை முஸ்லிம் காங்கிரஸினதும், ஹரிஸினதும் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இதேவேளை, அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதனாலோ அல்லது ஹரிஸ் அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ளாதிருப்பதனாலோ கல்முனை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மையினரின் வாக்குகளிலேயே தங்கியுள்ளது. இதனால், தமிழர்களையும், முஸ்லிம்களையும் பகைத்துக் கொள்ளாத தொரு நிலைப்பாட்டையே ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்றிக் கொண்டிருக்கும். அதனால், கல்முனை பிரச்சினையை இன்னும் நீடித்துக் கொண்டு செல்வதற்கே அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும்.
இந்நிலை நீடிக்குமாயின் முஸ்லிம் காங்கிரஸில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளாதிருக்கின்றவர்களில் ஹரிஸை தவிர பைசால் காசிம், அலிசாஹிர் மௌலானா ஆகியோர் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்வார்கள் என்றே தெரியவருகின்றன. இப் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய ஆதரவாளர்கள் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் கொள்கை ரீதியான அரசியலை மறந்து நீண்ட காலமாகிவிட்டது. அபிவிருத்தி அரசியலையே செய்து கொண்டு வருகின்றார்கள். முஸ்லிம்களின் உரிமைகள் பறிபோனாலும் வீதிகளை அமைக்க வேண்டும். கமிஷன் வாங்க வேண்டுமென்றே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், அமைச்சர் பதவி இல்லாமல் கொள்கை ரீதியான அரசியலை செய்வதற்கு முடியாத நிலையிலேயே முஸ்லிம் கட்சிகள் உள்ளன.
இதேவேளை, ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டமைக்கு இனவாத பிக்குகளும், அரசியல்வாதிகளும் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீண்டும் கொண்டு வருவதற்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.திஸாநாயக்க, அத்துரலியே ரத்ன தேரர், உதயன்கம்பன்பில ஆகியோர் தெரிவித்துள்ளார்கள். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்கள் மறைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆதலால், இனிவரும் நாட்களில் இனவாத பிக்குகளும், இனவாத அரசியல்வாதிகளும் மீண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக போர்க் கொடி தூக்கவுள்ளார்கள் என்று தெரிகின்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனை குற்றவாளியாகக் காட்டி சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு நினைக்கின்றார்கள்.
ஆனால், இவர்களின் இனவாத கருத்துக்கள் முன்பு போல் தாக்கத்தை கொண்டு வரும் என்று சொல்ல முடியாது. இனவாத பிக்குகளினதும், அரசியல்வாதிகளினதும் திருகுதாளங்களை பெரும்பான்மையான மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள். இதனால், இனவாதிகளின் கூட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் பொது மக்கள் சேரும் வீதம் குறைவடைந்து கொண்டு வருகின்றது. ஆயினும், ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தால் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு மற்றுமொரு சவாலாக அமையும்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலுக்கு வெற்றியை கொடுக்கும். அதே வேளை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டு எதிரணியினர் கொண்டு வருவார்களாயின் அது பொது முன்னணிக்கு முஸ்லிம்களின் வாக்குகளில் இன்னும் வீழ்ச்சியைக் கொண்டு வருவதாகவே இருக்கும்.
இவ்வாறு முஸ்லிம்களின் அரசியலும், தலைவர்களும் இனவாத பிரசாரத்திற்கும், இனவாத பிக்குகளின் நெருக்குதல்களுக்குள்ளும் சிக்கிக் கொண்டுள்ளனர். தேசியக் கட்சிகளும், அரசாங்கமும் மேற்படி இனவாதிகளை சமாளித்துக் கொண்டு செல்வதற்கே திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் சட்டம், ஒழுங்கு, உண்மை, நியாயம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு பதிலாக இனவாத பிக்குகளின் நடவடிக்கைகளுக்கு சட்டம், ஒழுங்கு, உண்மை, நியாயம் ஆகியவற்றை குழியிட்டு புதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதேவேளை, முஸ்லிம் அமைச்சர்களினதும், ஆளுநர்களினதும் இராஜினாமாக்கள் பெரியதொரு அரசியல் இராஜதந்திரமாக அமைந்திருந்தது. இதனால், இனவாத பிக்குகளினதும், அரசியல்வாதிகளினதும் திட்டங்கள் தவிடுபொடியாகியது. பதவிகளை இராஜினாமாச் செய்தவர்களை முஸ்லிம்கள் தியாகிகள் போன்று பார்த்தார்கள். தற்போது மூன்று பேரைத் தவிர 06 பேர் அமைச்சர் பதவிகளை மீண்டும் பெற்றுள்ளார்கள். இதனால், விமர்சனங்கள் எழுந்துள்ளன.
– சஹாப்தீன் –