எழுத்து துறைக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய ‘புலிட்சர்’ பரிசை மூன்றுமுறை பெற்ற ஆங்கில நாடக ஆசிரியரான எட்வர்ட் எல்பி தனது 88-வது வயதில் அமெரிக்காவின் நியூயர்க் நகரில் காலமானார்.
சிறுவயது முதல் கற்பனை வளம்மிக்கவராக இருந்த எட்வர்ட் எல்பி நாவல் மற்றும் கவிதை துறையில் தன்னால் பெரிதாக ஜொலிக்க இயலாது என்று சுயமதிப்பீடு செய்து பின்னர் 1950-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்க மேடை நாடகத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார்.
’ஹூ இஸ் அப்ரெய்ட் ஆப் விர்ஜினியா உல்ப்’ (Who’s Afraid of Virginia Woolf?) என்ற அவரது பிரபல நாடகம் பிராட்வே அரங்கில் 644 காட்சிகள் நடந்து சாதனை படைத்தது. இந்த நாடகம் அந்நாள் ஹாலிவுட் பிரபலங்களான ரிச்சர்ட் பர்ட்டன், எலிசபெத் டெய்லரின் நடிப்பில் திரைப்படமாகவும் பின்னர் வெளியாகி பிரபலம் அடைந்தது.
1963-ம் ஆண்டு எழுத்து துறைக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய ‘புலிட்சர்’ பரிசுக்கு இந்த நாடகம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், கதையின் கருவில் உள்ள அரசியல் நைய்யாண்டி நெடி காரணமாக இந்த நாடகத்துக்கு பரிசு அளிக்கப்படவில்லை.
பின்னாளில், பல்வேறு சிறப்புக்குரிய நாடகங்களை இயற்றியதற்காக 1967, 1975 மற்றும் 1981-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து மூன்று ‘புலிட்சர்’ பரிசுகள் இவரை கவுரவித்தன. 2005-ம் ஆண்டுவரை அமெரிக்க நாடக உலகில் தனது அழுத்தமான முத்திரையை பதித்த எட்வர்ட் எல்பி, நியூயர்க் நகரின் மாண்டவுக் பகுதியில் உள்ள வீட்டில் வயதுமூப்பு சார்ந்த பிரச்சனைகளால் தனது 88-வது வயதில் நேற்று காலமானார்.