2019 ஐபோன்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யும் அப்பிள்

அப்பிள் நிறுவனம் 2019 ஐபோன் மாடல்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்பிள் நிறுவனம் புதிதாக 10.2 இன்ச் அளவில் ஐபேட் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீப காலங்களில் தகவல்கள் வெளியாகின. புதிய ஐபேட் அந்நிறுவனத்தின் 9.7 இன்ச் ஐபேட் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
புதிய 10.2 இன்ச் ஐபேட் மாடல் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் 2019 ஐபோன்களுடன் புதிய ஐபேட் மாடலும் அரிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் இந்நிகழ்வில் ஐபோன் 11 சீரிஸ் அறிமுகம் செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை 10.2 இன்ச் ஐபேட் முந்தைய மாடலை விட பெரியதாகவும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐபேட் சார்ந்த விவரங்களை பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்டிருந்தார். பின் இதுபற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகின.
ஐபேட் ரென்டர்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான விவரங்களின் படி ஆப்பிள் நிறுவனம் ஐபேட் மினி 5 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐந்தாம் தலைமுறை ஐபேட் மினி மாடலை அறிமுகம் செய்தது.
இதுதவிர ஆப்பிள் நிறுவனம் 5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சாதனம் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டது.
லண்டனை சேர்ந்த ஆய்வாளரான ஜெஃப் லின் இத்தகவலை வழங்கியிருந்தார். இவர் சர்வதேச அளவில் தகவல் வழங்கும் ஐ.ஹெச்.எஸ். மார்கிட் நிறுவனத்தில் ஆய்வாளராக இருக்கிறார். புதிய சாதனத்தில் மேக்புக் அளவிலான ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.