மனித கடத்தல் தடுப்பு விவகாரத்தில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் வகையில், பத்தாண்டு திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் 50 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
தென்கிழக்காசிய நாடுகள் எதிர்கொள்ளும் மனித கடத்தல் அச்சுறுத்தலை சமாளிக்க கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா உதவி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குற்ற வலைப்பின்னலை விசாரிப்பதற்காக காவல்துறை மற்றும் நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான கூட்டமைப்பு சந்திப்பில் இதனை வெளிப்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மேரிஸ் பயனி, “கூட்டு சர்வதேச விசாரணைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், கடத்தல்காரர்கள் தண்டிக்கப்படவும் இம்முன்னெடுப்பு துணைப்புரியும்,” எனக் கூறியுள்ளார்.
மலேசியா உள்ளிட்ட நாடுகளில் மீன்பிடி மற்றும் கட்டுமானத்துறையில் அதிகரித்திருக்கும் குறைந்த சம்பளத்துக்கான ஆட்களை தேவை தென்கிழக்காசியாவில் மனித கடத்தல் நெருக்கடியை அதிகரித்துள்ளது.
அதே சமயம், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு தொடர்ந்து வரும் அச்சுறுத்தல் கடல் வழி கடத்தல் சம்பவங்களுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது. மியான்மர், லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு செல்ல நினைக்கும் ஏழைத்தொழிலாளர்கள் தாய்லாந்து வழியாக கடத்தப்படும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
இவ்வாறான சூழலில், ஆஸ்திரேலியா அறிவித்துள்ள மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கைக்கான பத்தாண்டு திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
படம்: பாங்காக்கில் ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்த பொழுது