தமது அன்புக்குரியவர்களை தொலைத்துவிட்டு அவர்களை மீட்டுத்தருமாறு கோரி போராடிக்கொண்டிருக்கும் காணாமல்போனவர்களின் உறவுகள் தற்போது பாரிய விரக்திநிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். தமது காணாமல்போன உறவுகளை மீண்டும் காணவே முடியாதா, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாதா, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இந்த மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.
யுத்தகாலத்திலும் அதன் முடிவிலும் இவ்வாறு பலர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் இவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பில் சுமார் 19ஆயிரம் முறைப்பாடுகள் எழுத்துமூலம் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் இவ்வாறு காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைப்புக்களுக்கு எழுத்துமூலம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே 19ஆயிரம் என்ற எண்ணிக்கை வெளிக்காட்டப்படுகின்றது.
தமது உறவுகளை தொலைத்துவிட்டு பாரிய வேதனையுடனும் துயரத்துடனும் வாழ்க்கையை கொண்டு நடத்தும் காணாமல்போனோரின் உறவுகள் சமூக ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். பொருளாதாரப் பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினை, சமூக பாதுகாப்பு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தப் பாதிக்கப்பட்ட மக்கள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர். கண்ணீரே நிரந்தர பதிலாக இந்த மக்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் காணாமல்போனவர்களின் உறவுகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து அது தொடர்பில் சரியான அணுகுமுறைகள் முன்னெடுக்கப்படவேண்டிய அவசரத் தேவைகள் காணப்படுகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையக்கூடிய வகையிலான செயற்பாடுகள் இதுவரை இல்லாமலேயே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தமது உறவுகளை காணாமல் ஆக்கிவிட்டு இன்று நடுவீதியில் தவித்துக்கொண்டிருக்கின்றனர். உறவுகளைத் தேடித்தருமாறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனாலும் அந்த மக்களின் போராட்டங்களுக்கு இதுவரை வலுவான பதில்களோ திருப்திகரமான விடிவோ கிடைக்கவில்லை. காணாமல்போனவர்கள் காணாமல் போனவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களைத் தேடி அலையும் உறவுகள் தொடர்ந்து அலைந்துகொண்டே இருக்கின்றார்கள். இந்த மக்களின் ஏக்கத்திற்கு இதுவரை பதில் வழங்கப்படாத சூழலில் நாடோ அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிவருகின்றது. பிள்ளைகளை தொலைத்துவிட்டு தவிக்கும் பெற்றோர், கணவனை தொலைத்துவிட்டு கஷ்டப்படும் பெண், சகோதரர்களைத் தொலைத்துவிட்டு துயருருகின்றவர்கள் என மக்கள் சொல்லொணா துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஐக்கியநாடுகள் சபை, சர்வதேச சமூகம், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் என்பன இந்தக் காணாமல்போனோர் விவகாரத்தில் பாரிய அழுத்தங்களை பிரயோகித்து வருகின்ற போதிலும் இதுவரை இது தொடர்பில் சரியான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை. யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவடைந்ததும் விரைவாக இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பத்துவருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் காணாமல்போனோர் பிரச்சினை இன்னும் பெரும் பிரச்சினையாகவே இருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களினால் தமது வாழ்க்கையில் எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க முடியாத சூழல் நிலவுகின்றது. இந்த மக்கள் ஆதரவற்ற தன்மையையே தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர். 2009ஆம் ஆண்டு பல்வேறு அழிவுகளுக்கு மத்தியில் யுத்தம் முடிவுக்கு வந்தது. அப்போது அந்தக் காணாமல்போனோர் விவகாரம் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக காணப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக கதறி அழுதுகொண்டிருந்தனர். தாம் தமது உறவுகளை பல்வேறு தரப்பினரிடம் ஒப்படைத்ததாக மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
தமது உறவுகளை தேடித்தருமாறு ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்தனர். இந்தப் பின்னணியில் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளவில் இலங்கை அரசாங்கமானது ஜெனிவா மனித உரிமை பேரவையில் ஒரு பிரேரணையை கொண்டுவந்தது. அந்தப் பிரேரணை வெற்றிபெற்றது. எனினும் அதன்பின்னரும் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் சரியான தீர்வு கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு அப்போதைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டது. அந்த நல்லிணக்க ஆணைக்குழு வடக்கு, கிழக்கு முழுவதும் விசாரணை அமர்வுகளை நடத்தியது. அவற்றில் சாட்சியமளித்த பொதுமக்கள் காணாமல்போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கதறி அழுதனர்.
எங்கள் பிள்ளைகளை எங்களிடம் காட்டுங்கள் என நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணையாளரிடம் உருக்கமாகவும் மன்றாட்டமாகவும் கோரி நின்றனர். அதேபோன்று 2013ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தினால் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம தலைமையில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவும் விசாரணைகளை நடத்திவந்த போதிலும் தீர்வுகள் கிடைக்கவில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வந்ததும் அந்த ஆணைக்குழுவின் செயற்பாடும் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமை பேரவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன. அந்தப் பிரேரணைகளிலும் இந்தக்காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் முக்கிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
எப்படியிருப்பினும் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த விடயத்தில் ஒரு விடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் காணப்பட்டது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப்பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது.
அந்த பிரேரணையில் காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பன நிறுவப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த பிரேரணை 2017ஆம், 2019ஆம் ஆண்டுகளில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நீடிக்கப்பட்டன. தற்போது 40/1 என்ற பேரில் குறித்த ஜெனிவா பிரேரணை 2021 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கிறது. அதன்படி காணாமல் போனோர் அலுவலகம் நியமிக்கப்பட்டு அதற்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டு அதன் தொழிற்பாடு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று இழப்பீட்டு அலுவலகமும் நியமிக்கப்பட்டிருக்கின்றது.
காணாமல்போனோர் அலுவலக நியமனம் தொடர்பில் நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வந்தன. இதன்மூலமாக ஏதாவது ஒரு தீர்வை அடையலாம் என்ற நிலைப்பாடும் இதில் எந்தப் பயனும் இல்லை என்ற நிலைப்பாடும் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு வந்தன. எனினும் இதில் மக்கள் முழுமையாக நம்பிக்கை வைத்ததாக தெரியவில்லை.
ஒரு சந்தர்ப்பத்தில் இந்த காணாமல்போனோர் அலுவலகம் குறித்து எம்முடன் தகவல் பகிர்ந்துகொண்ட அதன் ஆணையாளர் நிமல்கா பெர்னாண்டோ, காணாமல்போனோர் பிரச்சினைகளைத் தீர்க்கவே எமது அலுவலகம் நியமிக்கப்பட்டுள்ளது. எனவே எம்மைப் பயன்படுத்தி எம்மீது நம்பிக்கை வைத்து உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேபோன்று முன்னைய அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகமவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சுமார் 5 இலட்சம் ரூபாவரை இழப்பீடு வழங்கப்படவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையிலேயே தற்போது பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த பத்து வருடங்களாக இவ்வாறான பல்வேறு படிமுறைகள் கடந்துசென்றுள்ளபோதிலும் காணாமல்போனோரின் உறவுகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. தொலைந்துபோன தமது உறவுகளைத் தேடி அலையும் பலர் அண்மைக்காலமாக உயிரிழந்து வருவதையும் காண முடிகின்றது. கடந்தவாரம் கூட தாயொருவர் காலமாகியிருந்தார். இந்நிலையில் இந்தப் பிரச்சினையைத் தீர்வுகள் இன்றி இழுத்தடித்
துக்கொண்டு செல்வதற்கு இடமளிப்பதா அல்லது இந்தப் பிரச்சினை தொடர்பில் விரைவாக தீர்மானங்களை எடுப்பதா என்பது குறித்து அரசாங்கம் சிந்திக்கவேண்டும். காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காணாமல்போனோரின் உறவுகள் அமையத்தின் பிரதிநிதி ஒருவர் முல்லைத்தீவில் கடந்த சனிக்கிழமை காணாமல்போன தனது மகனைத் தேடி தொடர்ச்சியாகப் போராடிவந்த தாயொருவர் மரணமடைந்துவிட்டார். எமது அமையத்தின் பதிவுகளின்படி இவ்வாறு போராடி வந்தவர்களில் மரணித்த 31 ஆவது நபர் அவராவார். நாம் காணாமல்போன எமது உறவுகளைத்தேடிப் போராடிவரும் நிலையிலும், இதுவரையில் எவ்வித தீர்வுகளும் கிட்டவில்லை. ஆனால் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வயது முதிர்ந்து, நோய்வாய்ப்பட்டு, தமது உறவுகளைத் தொலைத்த ஏக்கத்துடன் மரணமடைகிறார்கள் என்று கூறியுள்ளார்.
அத்துடன் இவ்விடயத்தில் தமிழ்த் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்தால் நிச்சயமாக அரசாங்கத்தின் மீது ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும். அவர்களின் ஒற்றுமையும், பதவியும் தான் அரசுக்கு எதிரான ஆயுதம் என்பதை உணரவேண்டும். உரிமைகள் என்றும், அதிகாரங்கள் என்றும் மேடைகளிலே பேசுகின்ற தமிழ் அரசியல்வாதிகளால் ஏன் ஒன்றிணைந்து செயற்பட முடியாமல் இருக்கின்றது? இந்த அரசாங்கத்திடமிருந்து சர்வதேசத்தினால் பெற்றுக்கொடுக்க முடியாத நீதியை பிளவுபட்ட தமிழ் அரசியல்வாதிகளால் பெற்றுக்கொடுக்க முடியுமா? எனவே அவர்கள் ஒருமித்து, ஒற்றுமையுடன் எமது பிரச்சினைகளைக் கேட்டறிந்து அரசாங்கத்திடம் பேரம் பேசவேண்டும் என்றும் காணாமல்போனோரின் உறவுகள் அமைப்பகத்தின் பிரதிநிதி குறிப்பிட்டிருக்கின்றார்.
அந்தவகையில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடத்தில் தமக்கான நீதியைப் பெறுவதில் ஒற்றுமை குறைவாக இருக்கின்றது என்று காணாமல்போனோரின் உறவுகள் கருதுவதை அவதானிக்க முடிகின்றது. இந்த விடயத்தில் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் இருந்து அணுகுமுறையை முன்னெடுப்பது அவசியமாக உள்ளது. தற்போது நாடு அடுத்த ஜனாதிபதி தேர்தலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பில் விவாதங்களும் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. எனவே இந்தக் காணாமல்போனோர் விவகாரத்தில் தலையிட நிச்சயம் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தயங்கும் என்பதை மறுக்க முடியாது. காரணம் தற்போதைய சூழலில் எந்தப் பிரச்சினையில் தலையிட்டு தென்னிலங்கையில் தமது வாக்கு வங்கிகளை வீழ்ச்சிக்குட்படுத்த தென்னிலங்கை கட்சிகள் விரும்பப்போவதில்லை. எனவே காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் பிரதான கட்சிகளின் தலையீடுகளும் அணுகுமுறைகளும் எந்தளவுதூரம் சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியாகும். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் அதாவது காணாமல்போனோரின் உறவுகளின் துயரம் மட்டும் நீடித்துக்கொண்டிருக்கின்றது. அவர்களுக்கு விடிவு கிட்டாத நிலைமை தொடர்கிறது.
இந்த மக்களுக்கு தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை அறிந்துகொள்வதற்கான முழுமையான உரிமை காணப்படுகின்றது. அந்த உரிமையை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது. அது ஒரு சர்வதேச உரிமையாகும். எனவே அவர்களின் உணர்வைப் புரிந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். அரசாங்கம் பல்வேறு சர்வதேச சாசனங்களில் கைச்சாத்திட்டிருக்கின்றது. எனவே தமது பிரஜைகள் தொடர்பான பாதுகாப்புசார் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அதனை தட்டிக்கழித்து யாரும் செயற்பட முடியாது. தென்னிலங்கையில் அரசியல் இருப்புக்கு நெருக்கடி ஏற்படும் என்ற காரணத்தை முன்வைத்து காணாமல்போனாரின் பிரச்சினையை ஆராயாமல் இருக்கக்கூடாது. எனவே இந்த விடயம் தொடர்பில் ஒரு சரியான அணுகுமுறை அவசியமாகும். தற்போது தொழில்பட்டு வருகின்ற காணாமல்போனோர் அலுவலகம் மக்கள் மத்தியில் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தமது பணிகளை முன்னெடுக்கவேண்டும். யுத்தம் முடிவடைந்து பத்துவருடங்கள் பறந்துவிட்டன. ஆனால் மக்களின் பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. காணாமல்போனோர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படாமல் இருக்கின்றது. எனவே தொடர்ந்தும் தாமதம் வேண்டாம். காணாமல்போனோரின் உறவுகள் தனிநாட்டைக் கோரவில்லை. யாரையும் தண்டிக்கவேண்டும் என்றும் கோரவில்லை, மாறாக தொலைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை தருமாறு கோருகின்றனர். அதனை செய்துகொடுக்கவேண்டியது அதிகாரத்தில் இருப்போரின் முக்கிய கடமையாகும். குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமே அழுத்தங்களை பிரயோகித்து தமது பிரச்சினைக்கு
விடிவை பெறலாம் என பாதிக்கப்பட்ட மக்கள் கருதுகின்றனர். எனவே அந்த மக்களின் உணர்வுகளை புரிந்து விரைவாக அவர்களுக்கு ஒரு விடிவைப் பெற்றுக்கொடுத்து அந்த மக்களின் வாழ்க்கையில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கவேண்டியது அவசியம் என்பதே அனைவரதும் நோக்கமாகும்.
ரொபட் அன்டனி