இருப்புக்கான போராட்டம்!

தமிழர் தரப்பு அர­சி­ய­லுக்கு வெளி­யிலும் முட்­டுக்­கட்­டைகள். உள்­ளேயும் பல முட்­டுக்­கட்­டைகள். இந்த முட்­டுக்­கட்­டை­களைக் கடந்து நாட­ளா­விய அர­சியல் வெளியில் உறு­தி­யா­கவும் வலு­வா­கவும் அது காலடி எடுத்து வைக்க வேண்­டி­யது அவ­சியம். இது காலத்தின் தேவை­யும்­கூட.

ஏழு தசாப்­தங்­க­ளாக மறுக்­கப்­பட்டு வந்­துள்ள தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் உரி­மை­களை, அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக உறு­திப்­ப­டுத்தி, அவற்றைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஆட்­சி­யா­ளர்கள் மறுத்து வரு­கின்­றனர். தொடர்ச்­சி­யாக அதனை அவர்கள் உதா­சீனம் செய்­வதே வர­லா­றாக உள்­ளது.

தமிழ் மக்­களும் இந்த நாட்டின் குடி­மக்கள், அவர்கள் சகல உரி­மை­க­ளுக்கும் உரித்­து­டை­ய­வர்கள், அவர்கள் சிறு­பான்­மை­யாக இருந்த போதிலும், இந்த நாட்டின் தேசிய இனம் என்­பதை ஆட்­சி­யா­ளர்கள் அங்­கீ­க­ரிக்கத் தயா­ராக இல்லை.

நாடு அந்­நி­ய­ரி­ட­மி­ருந்து சுதந்­திரம் பெற்ற காலத்தில் இருந்து சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய தமிழ் மக்­க­ளு­டைய உரி­மை­களைக் கப­ளீ­கரம் செய்து அவர்­களை அடக்கி ஒடுக்கி இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக வைத்­தி­ருப்­ப­தி­லேயே ஆட்­சி­யா­ளர்கள் குறி­யாக இருந்து செயற்­பட்டு வந்­துள்­ளார்கள். அந்த நிலை­மை தொடர்­கின்­றதே அல்­லாமல், இன்னும் மாற்றம் ஏற்­ப­ட­வில்லை.

தமிழ் மக்கள் சிங்­கள மக்­க­ளுடன் சம உரிமை உடை­ய­வர்க­ளாக இந்த நாட்டின் சக குடி­மக்­க­ளாக வாழ வேண்டும். அதற்­கு­ரிய அர­சியல் வச­திகள் செய்­யப்­பட வேண்டும் என்ற உரி­மைக்­குரல் தொடர்ந்து ஒலித்து வரு­கின்­றது.

உரி­மை­க­ளுக்­காகக் குரல் கொடுப்­ப­துடன் நின்­று­வி­டாமல் அந்த உரி­மை­களை நிலை­நாட்­டு­வ­தற்­காகப் பல்­வேறு வழி முறை­களில் அந்த உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. அதற்­கான போராட்­டங்­களும் சாத்­வீக வழி­க­ளிலும், இறு­தி­யாக ஆயுதப் போராட்ட வழி­யிலும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

திசை­மா­றிய நிலைமை ஆனால் தந்­தி­ரோ­பாய ரீதி­யிலும், சர்­வ­தே சத்தை வ ைளத்துப் போட்ட நரித்­த­ன­மான செயற்­பா­டு­களின் ஊடா­கவும் அந்தப் போராட்­டங்கள் அனைத்­தையும் தோற்­க­டித்த ஆட்­சி­யா­ளர்கள், தமிழ்­மக்­களை தோல்­வியைத் தழு­விய ஒரு தரப்­பாக்­கி­யுள்­ளார்கள்.

அனைத்து வளங்­க­ளு­டனும், அதி­கார பலத்­து­டனும் இருந்த அர­சாங்­கங்­களை ஆட்­டிப்­ப­டைத்த விடு­த­லைப்­பு­லி­களின் ஆயுத பலத்தை 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் இழந்­தார்கள். அதன் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் மீண்டும் அவர்கள் சாத்­வீகப் போராட்ட வழி­களில் தமது உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காகப் போராடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

எதிர்ப்பு அர­சியல் வழி­மு­றையைக் கையாண்­டி­ருந்த தமிழ் அர­சியல் தலை­மைகள், யுத்தம் முடி­வுக்கு வந்து 6 வரு­டங்கள் கழிந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு இணக்க அர­சியல் வழியில் அல்­லது விட்டுக் கொடுத்துச் செல்லும் அர­சியல் வழித்­த­டத்தில் காலடி எடுத்து வைத்­தி­ருந்­தன.

ஆனால் நிபந்­த­னை­யற்ற வகையில் அர­சுக்கு ஆத­ர­வ­ளி­வத்து, அதன் ஊடாக உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்கும், பிரச்­சி­னை­களை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கும், ஓர் அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கு­மாக மேற்­கொண்ட இந்த முயற்­சியும் கடந்த நான்கு வரு­டங்­க­ளாகத் தோல்­வி­யையே தழு­வி­யி­ருக்­கின்­றது.

தமி­ழர்­களின் அர­சியல் உரிமை நிலை­மைகள் நாளுக்கு நாள் மோச­ம­டை­கின்­ற­னவே தவிர, அவர்­க­ளுக்கு விமோ­சனம் கிட்­டு­வ­தற்­கான அறி­கு­றி­களைக் காண முடி­ய­வில்லை. மாறாக அர­சியல் உரி­மைக்­கான போராட்டம் மழுங்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது.

யுத்த காலத்தில் இடம்­பெற்ற உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கு நீதி கேட்­ப­தற்­கான போராட்­ட­மாக அது பரி­ண­மித்­துள்­ளது. அப்­பா­விகள் கொல்­லப்­பட்­ட­மைக்கும், அவர்­களின் வாழ்­வு­ரிமை சார்ந்த விட­யங்­களில் இடம்­பெற்று வரு­கின்ற உரிமை மறுப்­பு­க­ளுக்கும், ஆட்­க­ ைள வலிந்து காணாமல் ஆக்­கி­ய­மைக்கு நியாயம் கேட்டும், இரா­ணுவம் வலிந்து அப­க­ரித்­துள்ள இடம்­பெ­யர்ந்­துள்ள மக்­ளுக்குச் சொந்­த­மான காணி­களை மீட்­ப­தற்கும் நீண்ட கால­மாக சிறை வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கு­மாகப் போராட வேண்­டி­ய­வர்­க­ளாக தமிழ் மக்கள் அவர்­களின் அர­சியல் உரிமைப் போராட்­டத்தில் இருந்து திசை திருப்­பப்­பட்­டுள்­ளார்கள்.

அர­சியல் வரட்சித் தளம் 

அர­சியல் உரி­மைக்­கான போராட்டம் திசை­மாற்­றப்­பட்டு, தங்­க­ளு­டைய இருப்­புக்­காகப் போராட வேண்­டிய அவல நிலை­மைக்குத் தமிழ் மக்கள் தள்­ளப்­பட்­டுள்­ளார்கள். வடக்கும் கிழக்கும் வர­லாற்றுப் பாரம்­ப­ரிய முறையில் தமிழ் மக்­களின் தாயகப் பிர­தேசம் என்­பதே அவர்­க­ளது அர­சியல் உரி­மைக்­கான போராட்­டத்தின் அடி­நா­த­மாகும்.

ஆனால் வடக்­கையும் கிழக்­கையும் துண்­டாடி, அவை இரு வேறு மாகா­ணங்­க­ளாக்­கப்­பட்­டுள்­ளன. இரு மாகா­ணங்­களும் இரு­வேறு மாகாண சபை­களின் கீழ் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றன. இந்த மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்­களில் வரிந்து கட்­டிக்­கொண்டு போட்­டி­யி­டு­கின்ற நிலை­மைக்கு தமிழ் அர­சியல் கட்­சி­களும், அர­சியல் தலை­மை­களும் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன.

அதே­வேளை, அர­சியல் வாடை­யற்­றி­ருந்த உள்­ளூராட்சி மன்­றங்­க­ளையும் அர­சியல் மயப்­ப­டுத்­தி­ய­மையும் தமிழ் மக்­களின் அர­சி­யலில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.  பிர­தேச சபை­க­ளுக்கும், நக­ர­ச­பைகள், மாந­க­ர­ச­பை­க­ளுக்கும் கட்சி ரீதி­யான போட்டி நிலை­மை­களின் கீழ் தேர்­தல்­களை நடத்­து­கின்ற புதிய நடை­முறை கார­ண­மாக உள்ளூர் மட்­டத்­தி­லேயே தமிழர் தரப்பு கட்­சிகள் ரீதி­யாகப் போட்­டி­யி­டவும், ஒன்­றுடன் ஒன்று அர­சியல் ரீதி­யாக அடி­ப­டவும் நேர்ந்­துள்­ளது.

இரா­ணு­வத்தின் பிடியில் உள்ள காணி மீட்பு, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க

ளுக்கு அரசு பொறுப்பு கூற வேண்­டி­யது, அர­சியல் கைதி­களின் விடு­தலை என்­பன அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளாக  எரியும் பிரச்­சி­னை­க­ளாக வளர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இவற்றை உள்­ள­டக்­கி­ய­தாக போர்க்­குற்றச் செயல்­க­ளுக்குப் பொறுப்பு கூறி, நிலை­மா­று­கால நீதியை நிலை­நி­றுத்த வேண்டும் என்ற கோரிக்­கை­யும்­கூட ஓர் அர­சியல் பிரச்­சி­னை­யாக முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. இதில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை ஒழிக்க வேண்டும் என்ற அம்­சமும் முக்­கிய இடத்தைப் பிடித்­துள்­ளது.

இவ்­வாறு பிரச்­சி­னை­களை அதி­க­ரிக்கச் செய்து, தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான போராட்டம் மழுங்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கும் கிழக்கும் இணைந்த தாயகக் கோட்­பாட்டின் அடிப்­ப­டையில் இறை­மை­யுள்ள அதி­காரப் பகிர்­வுக்­கான அர­சியல் தீர்வு என்ற தமிழ் மக்­களின் பிர­தான அர­சியல் உரிமைப் போராட்டம் இவற்றின் ஊடாகப் பல்­வேறு வழி­மு­றை­களில் சித

ற­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதனால், அர­சியல் உரி­மைக்­கான போராட்­டத்­திற்கு காணப்­பட வேண்­டிய அர­சியல் தீர்வு என்­பது பின் தள்­ளப்­பட்ட ஒரு விட­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில், தமிழ்த்­த­ரப்பு அர­சியல் அதன் உண்­மை­யான அடிப்­படை அர­சியல் உரி­மைக்­கா­கவும், எதிர்­கால சந்­த­தியின் சுபிட்­ச­மான வாழ்க்­கைக்­கு­மான விட­யங்­களில் கவனம் செலுத்த முடி­யா­ததோர் அர­சியல் வரட்சி தளத்­திற்குள் வலிந்து தள்­ளப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், தமது தாயகப் பிர­தே­சங்­க­ளி­லேயே இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக்­கப்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் பவ­வற்றை திட்­ட­மிட்ட வகையில் அர­சாங்கம் மிகவும் சாது­ரி­ய­மாக முன்­னெ­டுப்­ப­தற்­கான தளத்தை உரு­வாக்கிக் கொடுத்­துள்­ளது என்றே குறிப்­பிட வேண்டும்.

பகி­ரங்கத் துணை புரியும் படை­யி­னரும் பொலிஸாரும்

பொது­மக்­களின் சட்­ட­ரீ­தி­யான குடி­யி­ருப்புக் காணி­க­ளையும், அவர்­களின் வயல் நிலங்கள், விவ­சாய நிலங்­க­ளையும் ஆக்­கி­ர­மித்­துள்ள அரச படை­க­ளி­னதும், சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வதைத் தமது தலை­யாய பொறுப்­பாகக் கொண்­டுள்ள பொலி­ஸா­ரி­னதும், உத­வி­யோடும் பாது­காப்­போடும் தமிழ்ப் பிர­தே­சங்­களை பௌத்த மய­மாக்கும் நட­வ­டிக்­கைகள் பகி­ரங்­க­மா­கவே அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

பௌத்த மதத்தைச் சேர்ந்­த­வர்­களோ அல்­லது சிவி­லி­யன்­க­ளா­கிய சிங்­கள மக்­களோ இல்­லாத இடங்­களில் இந்­துக்­க­ளுக்குச் சொந்­த­மான ஆலய வள­வுகள், காணி­க­ளிலும், இந்து மதம் சார்ந்த தொன்­மை­யான இடங்­க­ளிலும் புத்தர் சிலை­களை வைப்­ப­திலும், பௌத்த விகா­ரை­களை நிர்­மா­ணிப்­ப­திலும் பௌத்த பிக்­குகள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

தனி­ம­னி­த­னாக பௌத்த மத குரு என்ற போர்­வையின் கீழ் இன­வாத, மத­வாத வெறி­யூட்­டப்­பட்­ட­வர்­களைப் பயன்­ப­டுத்தி இந்தக் காரி­யங்­களை அரசு முன்­னெ­டுத்­துள்­ளது. இவர்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்­கவும், இவர்­களின் செயற்­பா­டு­களைத் தடங்­க­லின்றி முன்­னெ­டுப்­ப­தற்கும் பாது­காப்புப் படை­களும் பொலி­ஸாரும் பகி­ரங்­க­மா­கவே துணை புரி­கின்­றனர்.

இதனால் அர­சியல் ரீதி­யாக மட்­டு­மல்­லாமல், இன ரீதி­யா­கவும், மத ரீதி­யா­க­வும்­கூட தமிழ் மக்கள் தங்­க­ளு­டைய சொந்தப் பிர­தே­ச­மா­கிய தாயகப் பிர­தே­சத்­திற்­குள்­ளேயே அடக்கி ஒடுக்­கப்­ப­டு­கின்­றார்கள். இந்த நட­வ­டிக்­கைகள் அனைத்தும் தமிழர் தரப்பு அர­சி­ய­லுக்கு வெளிப்­பக்க நெருக்­கீ­டு­க­ளா­கவும் முட்­டுக்­கட்­டை­க­ளா­கவும் முகிழ்த்து வளர்ந்­தோங்கிக் கொண்­டி­ருக்­கின்­றன.

தமிழர் பிர­தே­சங்­களை ஆக்­கி­ர­மிக்­கின்ற புத்தர் சிலை­க­ளையும் பௌத்த விகா­ரை­க­ளையும் தடுத்து நிறுத்­து­வ­தற்கு அர­சியல் ரீதி­யான செயற்­பா­டுகள் எத­னையும் காண முடி­ய­வில்லை. இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்­டிய தமிழர் அர­சியல் தரப்­புக்கள் மௌனம் காக்­கின்ற போக்­கையே காண முடி­கின்­றது. அவர்கள் இது விட­யத்தில் பின்­ன­டிக்­கின்ற ஒரு நிலைப்­பாட்டைக் கடைப்­பி­டிக்­கின்­றார்­களோ என்று ஐயுறும் வகையில் நிலை­மைகள் அமைந்­தி­ருக்­கின்­றன.

முல்­லைத்­தீவு நீரா­வி­யடிப் பிள்­ளையார் ஆல­யத்தில் புத்தர் சிலை வைக்­கப்­பட்டு விகா­ரை­ அ­மைக்கும் செயற்­பாடு தொடர்பில் ஊர் மக்­களே போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள். அதனைத் தொடர்ந்து அங்கு பொங்­க­லி­டு­வ­தற்­காக பெரும் எண்­ணிக்­கை­யி­லான மக்கள் ஒன்று கூடி­னார்கள். அந்த ஒன்­று­கூ­ட­லின்­போது, அந்த இடத்தை ஆக்­கி­ர­மித்­துள்ள பௌத்த பிக்கு அத்­து­மீறி நடந்து கொண்­டதைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு மாற்று நட­வ­டிக்­கைகள் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

திற­மை­சா­லிகள், செயல்­வல்­லமை உடை­ய­வர்­களின் ஒன்­றி­ணைவு ஏற்­க­னவே இந்த விவ­காரம் முல்­லைத்­தீவு நீதி­மன்ற நட­வ­டிக்­கைக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்ள போதிலும், நீதி­மன்ற உத்­த­ர­வையும் உதா­சீனம் செய்­கின்ற போக்­கையே அந்த பிக்­குவும் அங்கு நிலை­கொண்­டுள்ள படை­யினர் மற்றும் பொலி­ஸாரும் கடைப்­பி­டித்­தனர்.

அது மட்­டு­மல்­லாமல் நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வள­வுக்குள் மேற்­கொள்­கின்ற நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முல்­லைத்­தீவு நீதி­மன்றம் விடுத்­துள்ள உத்­த­ர­வுக்கு எதி­ராக வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் எதிர் மனு ஒன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. அந்த ஆல­யத்தை ஆக்­கி­ர­மித்­துள்ள பௌத்த பிக்கு தரப்­பினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள இந்த நகர்வு இது ஒரு பார­தூ­ர­மான விட­ய­மாகும்.  ஆனால் ஆக்­கி­ர­மிப்பு அர­சியல் ரீதி­யான இந்த விவ­கா­ரத்தில்  தமிழர் தரப்பில் தீவிர கவனம் செலுத்­தப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

இந்த விட­யத்தில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மட்­டத்­தி­லான ஒரு சட்­டத்­த­ரணி உட­ன­டி­யாக ஏற்­பாடு செய்­யப்­பட்டு, அவர் அங்கு முன்­னி­லை­யா­கி­யி­ருக்க வேண்டும். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை.

ஒரு சிரேஸ்ட சட்­டத்­த­ரணி அங்கு முன்­னி­லை­யா­கி­யி­ருந்த போதிலும், மனு­தாரர் தரப்­புக்கு சம­மான முறையில் இந்­துக்கள் தரப்­பி­லான நியா­யத்தை எடுத்­து­ரைக்க வல்ல ஒருவர் என்ற நம்­பிக்­கையை

ஏற்­ப­டுத்தும் வகையில் சட்­டத்­த­ர­ணிகள் ஒழுங்கு செய்­யப்­ப­ட­வில்லை என்ற குறை­பாடு இந்த விவ­கா­ரத்தில் ஆர்­வ­முள்­ள­வர்­க­ளினால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

தமிழர் தரப்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்குக் குறை­வில்லை. தமிழ் அர­சியல் தரப்­பிலும் தாரா­ள­மான அளவில் சட்­டத்­த­ர­ணிகள் இருக்­கின்­றனர். ஆனால், தமிழ்த்­த­ரப்­புக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற அர­சியல் ரீதி­யான ஆக்­கி­ர­மிப்புச் செயற்­பா­டு­களை சட்­ட­ரீ­தி­யான முறையில் எதிர்­கொள்­ளவும், அவற்றை முறி­ய­டித்து நியா­யத்தை நிலை­நாட்­டவும் அவ­சி­ய­மான நட­வ­டிக்­கைகள் ஒரு குழு சார்ந்த நிலையில் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.

அர­சியல் பின்­பு­லத்தில் அந்தச் செயற்­பா­டு­களை எதிர்­கொள்­வ­தற்­கான முயற்­சி­களும் காணப்­ப­ட­வில்லை. தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான கெடு­பி­டிகள், அடக்­கு­மு­றைகள் என்­பன பல்­வேறு வடி­வங்­களில் பல்­வேறு வழி­மு­றை­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அவைகள் பல மட்­டங்­க­ளிலும் பல்­வேறு வழி­க­ளிலும் எதிர்­கொள்­ளப்­பட வேண்டும். அர­சியல் ரீதி­யாக மட்­டு­மல்­லாமல் சட்ட ரீதி­யா­கவும், சமூக ரீதி­யா­கவும், பொது அமைப்­புக்கள் என்ற பொதுத் தளத்­திலும் இந்த எதிர்ச் செயற்­பா­டுகள் அல்­லது நியா­யத்­திற்­காகப் போரா­டு­கின்ற நட­வ­டிக்­கைகள் பர­வ­லாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

இதற்கு தமிழர் தரப்பில் ஒன்­றி­ணைந்த சட்­டத்­த­ர­ணிகள் குழு அல்­லது அமைப்பு, ஏனைய துறை­சார்ந்­த­வர்­களின் ஒன்­றி­ணைந்த அமைப்பு, பெண்கள் அமைப்பு, இளைஞர் அமைப்பு போன்ற அமைப்­புக்கள் அர­சியல் கட்சி பேதங்­க­ளையும் அர­சியல் கட்சி சார்ந்த நிலைப்­பா­டு­களைக் கடந்த நிலை­யிலும் உரு­வாக்­கப்­பட வேண்டும். அத்­த­கைய அமைப்­புக்கள் இல்­லா­விட்­டா­லும்­கூட சம­ய­சந்­தர்ப்­பங்­க­ளுக்கு ஏற்ற வகையில் இவ்­வாறு துறை­சார்ந்த நிலையில் திற­மை­சா­லி­களும், செயல் வல்­லமை உடை­ய­வர்­களும் ஒன்­றி­ணைந்து நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட வேண்­டி­யது அவ­சியம்.

மாற்றுத் தலை­மைக்­கான தடைகள்

இத்­த­கைய செயற்­பா­டுகள் தமிழ் மக்­களின் சமய, சமூக, கலா­சார உரி­மைகள் மற்றும் அர­சியல் உரி­மைகள் சார்ந்த விட­யங்­களில் அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை. அர­சியல் ரீதி­யாக மட்­டுமே இவற்­றுக்­கான எதிர் நட­வ­டிக்­கை­களும் போராட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்ற கட்­டாய நிலைமை அல்­லது அத்­த­கைய நியதிப் போக்கில் மாற்­றங்கள் நிகழ வேண்டும்.

மொத்­தத்தில் அர­சியல் கட்­சி­களின் நிலைப்­பா­டுகள், கட்சி அர­சியல் சார்ந்த நிலைப்­பா­டு­களைக் கடந்து தமிழ் மக்­களின் நலன்கள் மற்றும் உரி­மைகள் சார்ந்த அக்­க­றை­யாகப் பரி­ண­மிக்க வேண்டும். பொது­நிலை சார்ந்த ஒரு போக்கு கடைப்­பி­டிக்­காத வரையில் சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு எதி­ரான பேரி­ன­வா­திகள் மற்றும் பேரின அர­சி­யல்­வா­திகள், ஆட்­சி­யா­ளர்­களின் ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­களில் இருந்து தமிழ் மக்கள் மீட்சி பெற முடி­யாத நிலை­மையே உரு­வாகும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஏனெனில் தமிழர் தரப்பு அர­சியல் வெளிச்­சக்­தி­களின் முட்­டுக்­கட்­டைகள் நெருக்­கீ­டு­க­ளுடன், உள்­ளக முட்­டுக்­கட்­டை­க­ளுக்கும் ஆளாகி அவற்றில் இருந்து விடு­பட முடி­யாமல் தடு­மா­றுகின்றது.

பெரும்­பான்­மை­யான தமிழ் மக்­களின் ஆத­ரவைப் பெற்­றுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தமி­ழர்­களின் வலு­வா­னதோர் அர­சியல் அமைப்­பாக, சாத்­வீக வழி­மு­றைகள் பல­வற்றைக் கையாளும் ஆற்றல் கொண்­ட­தாக மிளி­ர­வில்லை. சந்­தர்ப்­பங்கள் கிடைக்­கும்­போது ஆட்­சி­யா­ளர்­க­ளு­டனும், ஏனைய சக்­தி­க­ளு­டனும் உறு­தி­யான நிலையில் பேரம் பேசி பிரச்­சி­னை­களைக் கையாள்­கின்ற ஆளு­மை­யையும் கொண்­டி­ருக்­க­வில்லை.

இதனால் தமிழ்­மக்­களும், கூட்­ட­மைப்பில் இருந்து பிரிந்து சென்­றுள்ள அர­சியல் கட்­சி­களும், ஏனைய அர­சியல் கட்­சிகள், அமைப்­புக்­க­ளும்­கூட தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைக் கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்­றன. அதன் நட­வ­டிக்­கை­களைக் கண்­டித்து அறிக்கை அர­சியல் நடத்­து­வதில் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றன.

கூட்­ட­மைப்­புக்குப் பதி­லாக ஒரு மாற்று அர­சியல் தலை­மையை உரு­வாக்க வேண்டும் என்ற எண்­ணக்­க­ருவை உரு­வாக்கி அதற்­கான முயற்­சி­களில், கூட்­ட­மைப்­புக்கு வெளியில் உள்ள அர­சியல் கட்­சி­களும் அமைப்­புக்­களும் ஈடு­பட்­டி­ருக்­கின்­றன. ஆனால் அவற்றின் கட்சி அர­சியல் நலன் சார்ந்த போக்கும், தமிழ் மக்­களின் ஒட்­டு­மொத்த அர­சியல் தலை­மையை இலக்­காகக் கொண்ட அர­சியல் நிலைப்­பாடும் இந்த முயற்­சி­களை வெற்­றி­பெறச் செய்­வ­தற்குப் பெரும் தடை­யாக அமைந்­தி­ருக்­கின்­றன.

தலை­மைக்­கான தேவையும் போராட்­டமும்

இதனால் மாற்றுத் தலை­மையை உரு­வாக்க வேண்டும் என்ற முயற்சி முளை­யி­லேயே கரு­கிய நிலை­மையைக் கடக்க முடி­யாமல் தடு­மா­று­கின்ற நிலை­மைக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றது. இருக்­கின்ற கட்­சி­க­ளுடன் ஒன்­றி­ணை­வதில் எழுந்­துள்ள முரண்­பா­டு­களும், ஒன்­றி­ணை­கின்ற கட்சிகளின் தலைமையை அல்லது அதன் உரித்தைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணப்பாங்கும் தமிழர் அரசியலின் உள்ளக முரண்பாடுகளாக முட்டுக்கட்டைகளாகக் காணப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். தமது உரிமை கள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற் காக வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றார்கள். காணி மீட்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறு ப்பு கூறுதல், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரச்சினைகளில் இந்தப் போரா ட்டம் தொடர்கின்றது.

தொல்பொருள் திணைக்களத்தின் உதவி யோடு புராதன இந்துமதச் சின்னங்கள், ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களை பௌத்த மயமாக்குகின்ற ஆக்கிர மிப்பு நடவடிக்கைகளுக்கு எதி ரான போராட்டமும்கூட பாதிக்கப்பட்ட வர்களினாலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டங்களுக்கு அரசியல் தலைமையும், துறைசார்ந்த வல்லவர்கள், நிபுணர்களினது தலைமையும் தேவைப்படுகின்றது. ஆனால் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு எவரும் உரிய முறையில் முன்வருவதாகத் தெரியவில்லை.

ஆனால் அரசியல் தலைமைக்கான போராட்டங்கள் மாற்றுத் தலைமையை உருவாக்குகின்ற அரசியல் போக்கில் ஆடம்பரமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன என்றே கூற வேண்டும்.

ஒரு பக்கம் அரசியல் தலைமை அல்லது தலைமைக்கான தேவை காணப்படுகின்றது. மறுபக்கத்தில் வேறு எங்கோ ஓர் அரசியல் வெளியில் அரசியல் தலைமைக்காகப் போராடுகின்ற போக்கு தென்படுகின்றது. இந்த முரண்பாடான போக்கும் நிலைமையும் தமிழர் தரப்பு அரசியலின் ஆளுமை மிக்க செயற்பாட்டுக்கு உள்ளக முட்டுக்கட்டைகளாக, உள்ளக நெருக்கீடுகளாகக் காணப்படுகின்றன.

எனவே, வெளிப்பக்க முட்டுக்கட்டைகள் மற்றும் உள்ளக முட்டுக்கட்டைகள் என்பவற்றைக் கடந்து தமிழர் அரசியலை வலுவானதோர் அரசியல் சக்தியாக உருவாக்கி முன் நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டியது, அவசியம். குறிப்பாக நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகின்ற தேர்தல்களை எதிர் நோக்கியுள்ள தருணத்தில் இது மிகவும் அவசியம். அவசரமானதும்கூட.

பி.மாணிக்­க­வா­சகம்