செய்திகளைத் தெரிந்துகொள்ள மேலும் ஒரு புதிய வழியாக ‘தி ஹாஷ் டுடே’ இணையதளம் அறிமுகமாகியுள்ளது. இந்தத் தளத்தில் இப்போதைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் வழக்கமான செய்தித் தளங்கள் போல் அல்லாமல் புதுமையான முறையில், தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை முன்வைக்கிறது.
‘ஹாஷ் டேப்’ எனும் பெயரில் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘குரோம் பிரவுசர்’ நீட்டிப்புச் சேவையைத் தரவிறக்கம் செய்துகொண்டால் அதன் பிறகு ஒவ்வொரு முறை பிரவுசரில் புதிய ‘டேப்’ஐத் திறக்கும்போது, ஒரு தலைப்புச் செய்தி தோன்றும். ஆர்வம் இருந்தால் அதை கிளிக் செய்து படித்து மேலும் விவரங்களை அறியலாம்.
டிவிட்டரில் குறும்பதிவுகளாக அதிகம் பகிர்ந்துகொள்ளப்படும் செய்திகளின் அடிப்படையில், புதிய செய்திகளைத் தேர்வு செய்து, பிரவுசர் டேபில் தோன்றச்செய்கிறது இந்தச் சேவை. எனவே பிரவுசர் டேப்பை கிளிக் செய்தாலே உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ளலாம். பிரவுசர் நீட்டிப்பு தவிர, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் செயலி வடிவிலும் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.
இணையதள முகவரி:https://thehash.today/