இந்தியாவின் 2005 தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு திருத்தம் ஒன்றை கடந்தவாரம் பாராளுமன்றம் நிறைவேற்றியிருக்கிறது. அந்த திருத்தம் மத்தியிலும் மாநில மட்டங்களிலும் தகவல் ஆணையாளர்களின் சுயாதீனத்தை பலவீனப்படுத்தியிருப்பதுடன் மத்தியில் சகல அதிகாரங்களையும் குவித்ததன் மூலம் மாநிலங்களின் உரிமைகளை அரித்திருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியும் அதன் நேசக்கட்சிகளும் பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் வலிமையான பெரும்பான்மையின் விளைவாக நிறைவேற்றப்பட்ட திருத்தத்தை காங்கிரஸ், திரிநாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை கடுமையாக எதிர்த்தன.
திருத்தம் தகவல் ஆணையாளர்களின் நிர்ணயிக்கப்பட்ட ஐந்து வருட பதவிக்காலத்தை நீக்குகிறது ; தற்போது நடைமுறையில் இருக்கும் ஆணையாளர்களின் சம்பளங்கள் தொடர்பான ஏற்பாடுகளையும் நீக்குகிறது ; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாநிலங்கள் அனுபவிக்கின்ற தன்னுரிமையையயும் பறிக்கிறது. இனிமேல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற விடயத்தில் சகலதையும் மத்திய அரசாங்கமே தீர்மானிக்கும்.இதன் மூலமாக இந்திய அரசியலமைப்பின் சமஷ்டிக் கட்டமைப்பு மேலும் தளர்வுறுகிறது.
2005 ஆம்ஆண்டில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமுதல் ஏற்பாடுகளின் பிரகாரம் மத்தியிலும் மாநிலங்களிலும் மத்திய தகவல் ஆணையாளர்களும் தகவல் ஆணையாளர்களும் நிர்ணயிக்கப்பட்ட ஐந்து வருடங்களுக்கு பதவி வகிக்கவேண்டியவர்களாவர். மத்திய தகவல் ஆணையாளரினதும் தகவல் ஆணையாளர்களினதும் சம்பளங்கள் பிரதம தேர்தல் ஆணையாளரினதும் தேர்தல் ஆணையாளர்களினதும் சம்பளங்களுக்கு சமமானவையாக இருந்தன.மாநிலங்களில் தகவல் ஆணையாளர்களின் சம்பளங்கள் மாநில பிரதம செயலாளரின் சம்பளத்துக்கு இணையானதாக இருந்தது.
இப்போது 2019 தகவல் அறியும் உரிமை திருத்தச் சட்டத்தின் ஊடாக மோடி அரசாங்கம் மத்தியிலும் மாநிலங்களிலும் பிரதம தகவல் ஆணையாளர்களினதும் தகவல் ஆணையாளர்களினதும் நிர்ணயிக்கப்பட்ட ஐந்து வருட பதவிக்காலத்தை இல்லாமல் செய்திருக்கிறது. இனிமேல் சகல அம்சங்களும் மத்திய அரசாங்கத்தினாலேயே தீர்மானிக்கப்படும். மாநிலங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
திருத்தத்தை முழுமூச்சுடன் எதிர்த்த எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் தகவல் ஆணையாளர்களின் பதவிக்காலத்தையும் சம்பளத்தையும் மாற்றியமைப்பதன் மூலம் மத்திய அரசாங்கம் அவர்களை அடிபணிய நிர்ப்பந்திக்கிறது ; அல்லது பதவிக்காலத்தை நீடிப்பதன் மூலமும் சம்பளத்தையும் வேறு கொடுப்பனவுகளையும் அதிகரிப்பதன் மூலம் அவர்களுக்கு ஆசைகாட்டமுடியும் என்று கூறினார்கள்.
2005 தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி அசௌகரியமான சில கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணமாகவே மோடி அரசாங்கம் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு விரும்பியது என்று கூறப்படுகிறது.2017 ஜனவரியில் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஒருவரின் விண்ணப்பம் தொடர்பாக நடவடிக்கை எடுத்த தகவல் ஆணையாளர் ஸ்ரீதர் ஆச்சார்யுலு, 1978 ஆம் ஆண்டு இளம் கலைமாணி ( பி.ஏ.) கற்கை நெறியில் சித்தியடைந்த மாணவர்கள் தொடர்பான பதிவு ஆவணங்களை சோதனை செய்ய அனுமதிக்குமாறு டில்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி அந்த ஆண்டில்தான் இளம் கலைமாணி பரீட்சையில் சித்தியெய்தியதாகக் கூறியிருந்தார். மோடி டில்லி பல்கலைக்கழகத்தின் ஒரு பட்டதாரியா என்று சந்தேகங்கள் கிளப்பப்பட்ட நேரத்திலேயே இது நடந்தது.
அடுத்த சில தினங்களில் ஸ்ரீதர் ஆச்சார்யுலூ தகவல் ஆணையாளர் என்ற வகையில் அவர் கையாண்ட மனிதவள அபிவிருத்த அமைச்சைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டார்.
இன்னொரு சம்பவத்தில், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழான விண்ணப்பமொன்றை அடுத்து இந்திய மத்திய வங்கியிடம் (Reserve Bank of India) அரச வங்கிகளுக்கு மீளச்செலுத்தப்படாமல் இருக்கும் ( மிகப்பெரிய கடன் மோசடிக்காரர்களின் விபரங்கள் உட்பட ) கடன் விபரங்களை தருமாறு பணிக்கப்பட்டது.ஆனால், அந்தரங்கத்தன்மையைக் காரணம் காட்டி விபரங்களை வெளியிட மத்திய வங்கி மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் 2015 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்துக்குப் போனது. கோரப்பட்ட விபரங்களை தெரியப்படுத்துமாறு நீதிமன்றம் மத்திய வங்கிக்கு உத்தரவிட்டது. மீண்டும் வங்கி விபரங்களை வெளியிடாததை அடுத்து 2019 ஏப்ரிலில் முன்னைய உத்தரவை உச்சநீதிமன்றம் புதுப்பித்தது.
தகவல் அறியும் உரிமை திருத்தச் சட்டத்தை நியாயப்படுத்திய பிரதமர் அலுவலக அமைச்சரான ஜிதேந்திர சிங், ” 2005 சட்டத்தில் விதிமுறை மீறலுக்கு வாய்ப்பாக அமையக்கூடிய குறைபாடுகளும் இடைவெளிகளும் இருந்ததாலேயே திருத்தங்கள் அவசியமாகின.உதாரணமாக, மத்திய தகவல் ஆணையாளருக்கு உயர்நீதிமன்ற நீதிபதியின் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது.ஆனால், ஆனால், அவரின் உத்தரவுகளுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தைக் கூட நாடமுடியும்.அதை எவ்வாறு அனுமதிக்கமுடியும்? ” என்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
ஆனால், அதுவல்ல பிரச்சினை என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பொன்றுக்கு எதிராகக்கூட முறையீடு செய்யமுடியும் ; ஜனாதிபதியினதும் பிரதமரினதும் தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றங்களை நாடமுடியும் என்பதால் ஜிதேந்திர சிங்கின் வாதம் பொருத்தமற்றது என்று கூறிய எதிர்க்கட்சிகள் தகவல் ஆணையாளர்களை அடிமைப்படுத்தக்கூடியதாக மத்திய அரசாங்கம் அடாத்தான முறையில் தலையீடு செய்வதற்கு சட்டத்திருத்தம் வழி வகுக்கிறது என்பதே உண்மையான பிரச்சினையாகும் என்று வாதிட்டன.
மத்திய தகவல் ஆணைக்குழுவில் நான்கு தகவல் ஆணையாளர் பதவிகளை நிரப்புவதற்கு மோடி அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது போலத் தெரிகிறது என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.மத்திய தகவல் ஆணைக்குழு பத்து தகவல் ஆணையாளர்களைக் கொண்டிருக்கவேண்டும்.ஆனால், அதில் இப்போது 6 ஆணையாளர்களே இருக்கிறார்கள்.மத்திய ஆணைக்குழுவைப் பலவீனப்படுத்துவதற்காகவே வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
பாராளுமன்றக் குழுவொன்றின் விதப்புரையின் பேரிலேயே பிரதம தகவல் ஆணையாளரினதும் தகவல் ஆணையாளர்களினதும் பதவி நிலையும் சம்பளங்களும் நிர்ணயிக்கப்பட்டன.அந்த பாராளுமன்றக் குழுவில் ( தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ) ராம் நாத் கோவிந்தும் பிரபல சட்டமேதை ராம் ஜெத்மலானியும் ( இப்போது அவர் பாரதிய ஜனதாவில் இல்லை ) பலவந்த் ஆப்தேயும் பாரதிய ஜனதாவைப் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தார்கள்.உண்மையிலேயே, அமைச்சர் ஜிதேந்திர சிங்ககின் வாதங்களுக்கு மாறாக, அந்தப் பாராளுமன்றக் குழு 2005 சட்டமூலத்தை பெரிதும் விரும்பியது.
தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் திருத்தம் மத்திய தகவல் ஆணையாளர்களினதும் மாநில தகவல் ஆணையாளர்களினதும் அதிகாரத்தை மலினப்படுத்தி அவர்களை ‘ பல் இல்லாத புலிகளாக ‘ மாற்றுவதை நோக்கமாகக் கொண்டவையாகும் என்று காங்கிரஸ் எம்.பி.சஷி தரூர் கூறினார்.சுயாதீனமான ஆணையாளர்களை பணிக்கு அமர்த்தவும் பணியில் இருந்து நீக்கவும் மத்திய அரசாங்கம் கையில் எடுத்திருக்கும் ஆயுதமே இந்த திருத்தமாகும்.இது திருத்தச்சட்டம் அல்ல, அழித்தல் சட்டமயோகும் என்றும் அவர் குறிப்பிட்டார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசாங்கத்தின் அதிகாரக் குழுவினருக்கு சவாலாக அமைந்ததால் அது நாட்டின் ஒரு மகத்தான ஜனநாயகச் சாதனையாகும் பொதுமக்கள் மத்தியில் கலந்துரையாடல் எதுவுமின்றி திருத்தச் சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது என்றும் தரூர் கேள்வியெழுப்பினார்.
” தகவல் ஆணையாளர்களின் சேவைகள் தொடர்பான நிபந்தனைகளை மத்திய அரசாங்கம் அதன் விருப்பு வெறுப்புகளுக்கு இசைவாக மாற்றுகின்ற நிலை உருவாகியிருப்பதால், ஆணையாளர்களின் தலைக்கு மேலாக எப்போதுமே கத்தியொன்று அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கப்போகிறது.சுயாதீ்னமான ஆணைக்குழுவும் ஆணையாளர்களும் இறுதியில் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படுபவர்களாக மாறப்போகிறார்கள்.ஆணையாளர்கள் அரசாங்கத்தினால் விரும்பப்படுபவர்களாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது ” என்று காங்கிரஸ் எம்.பி.யான அபிஷேக் மனு சிங்வி கூறினார்.
மத்திய தகவல் ஆணைக்குழுவின் முன்னாள் தகவல் ஆணையாளர்கள் எழுவர் திருத்தச் சட்டத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறார்கள். திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு பூராவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
இவ்வாறாக கிளம்பிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராஜ்ய சபா கடந்த வாரம் (18 /7) திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றியது. சபைக்குள் குழப்பம் விளைவித்துக்கொண்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தார்கள்.திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றின் பரிசீலனைக்கு அனுப்புமாறு எதிர்க்கட்சிகள் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.இப்போது சட்டம் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சம்மதக் கையெழுத்துக்காக காத்திருக்கிறது.
குறைபாடுகள்
எவவாறெனினும், 2005 தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைப்படுத்தல் மிகவும் பயனுறுதியுடைய முறையில் அமைந்திருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது.அதிகாரிகளினால் பதிவு ஆவணங்கள் முறையாகப்பேணப்படவில்லை ; தகவல் ஆணைக்குழுக்களின் அலுவலகங்களை நிருவகிப்பதற்கு போதுமான ஊழியர்களோ, உட்கட்டமைப்பு வசதிகளோ இருக்கவில்லை என்று 2015 ஆய்வு ஒன்றின் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.
அரசாங்க அலுவலகங்களில் காணாமல்போகும் கோப்புகள் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றன. பதிவுகள் ஒழுங்கான முறையில் பேணப்பட்டால் மாத்திரமே மக்கள் கோருகின்ற தகவல்களை வழங்கக்கூடியதாக இருக்கும் என்று மத்திய தகவல் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.
பி.கே.பாலச்சந்திரன்
( நியூஸ் இன் ஏசியா )