சஹ்ரான் குறித்து பல இடங்களில் தேடி அவரை நெருங்கினோம். ஆனால் அவர் சூட்சுமமாக எம்மிடம் இருந்து தப்பித்துக்கொண்டார் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் குற்றப்புலனாய்வு பிரிவின் பதில் பணிப்பாளர் ஜகத் விசாந்த நேற்று சாட்சியமளித்தார்.
நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று நடைபெற்ற அமர்விலேயே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,
கேள்வி :- உங்களின் பதவி என்ன ?
பதில் :- எஸ்.எஸ்.பி
கேள்வி:- ரி.ஐ.ரி யினால் முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்து முதலில் எப்போது விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டது?
பதில் :- 2017 ஆம் ஆண்டு. இதில் சிங்கள பெளத்த, முஸ்லிம் மற்றும் விடுதலைப்புலிகள் குறித்து ஆராயப்பட ஆரம்பிக்கப்பட்டது. நாலக சில்வா மூலமாக இதில் பிரிவொன்று உருவாக்கப்பட்டது. பங்களாதேஷ் நாட்டில் ஹோட்டல் ஒன்றில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது. இதனை அடுத்து நாமும் கவனம் செலுத்தி இவை குறித்து ஆராய ஆரம்பித்தோம்.
கேள்வி :- நீங்கள் செய்த விசாரணை பிரிவு எப்போது உருவாகியது? அதில் என்.டி.ஜே அமைப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டதா?
பதில் :- ஆம், ஐ.எஸ் கொள்கைகள் இலங்கையில் இருந்த கொள்கைகள் என்ன என்பது குறித்தெல்லாம் ஆராய்வோம். பொலிஸ்மா அதிபருக்கு தெரிவிப்போம்.
கேள்வி :- என்ன தொழில்நுட்ப வசதிகளை பெற்றுக்கொண்டீர்கள் ?
பதில் :- கணினிகள் மற்றும் டொங்கல் போன்றவற்றை பெற்றுக்கொண்டோம்.
கேள்வி:- ஏன் இங்கு அவ்வாறான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நினைத்தீர்கள் ?
பதில் :- பங்களாதேஷ் நகரில் ஒரு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது. அதன் பின்னர் எமக்கும் இவ்வாறான நிலைமைகள் உருவாகலாம் என்ற நோக்கத்தில் அவற்றை தடுக்க இவ்வாறு தயாரானோம். பங்களாதேஷ் போன்று இலங்கையில் தாக்குதல் நடத்தினால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள். தடுக்க என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என ஜப்பான் அதிகாரி ஒருவர் கேட்டார்.
இந்த கேள்வியை நான் நாலக சில்வாவிடம் கொண்டு சென்றேன். பின்னர் இது குறித்து ஆராய்ந்தோம். பின்னர் இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும், உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டும் என்ற கோரிக்கைகளை கேட்டனர். அதன்போது வாகனங்கள், கமராக்கள், மென்பொருள் உள்ளிட்ட பல விடயங்களை நாம் கூறினோம். அதற்கமைய தான் கண்காணிப்பு வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டது. ஜப்பான் நாட்டின் வாகனம் அதுவாகும். அது மிகவும் உயரிய தொழில்நுட்ப வசதியை கொண்ட கமரா பொருத்தப்பட்டது.
கேள்வி :- சஹரானின் அராஜகங்கள் திகன சம்பவத்துடன் அதிகரித்ததா ?
பதில் :- ஆம், அதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டனர். ஆதரவும் கூடியது.
கேள்வி :- இவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் தகவல் இருந்தும் சஹரானை ஏன் கைதுசெய்யவில்லை ?
பதில் :- பல வழிகளில் நடவடிக்கை எடுத்தோம். சஹரான் குறித்து அகவல்களை பல்வேறு இடங்களில் தேடினோம். முஸ்லிம் அதிகாரிகளை நியமித்தும் தேடினோம் ஆனால் கிடைக்கவில்லை
கேள்வி :- என்ன பலவீனமாக இருந்தது? உங்களின் தொழில்நுட்பம் கைகொடுக்கவில்லையா ?
பதில்:- அதனை பயன்படுத்த முடியாது போய்விட்டது
கேள்வி :- ஏன் ?
பதில் :- நாலக சில்வா இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இல்லாது சில நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது போனது. சில விசாரணைகளில் இருந்த காரணத்தினால் எம்மால் வாகனத்தை பயன்படுத்த முடியாது போய்விட்டது
கேள்வி :- ஏன் வாகனத்தை பயன்படுத்தவில்லை?
பதில் :- நாலக சில்வாவிற்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட காரணத்தினால்
கேள்வி :- அதற்கும் வாகனத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது?
பதில் :- விசாரணை குழு இந்த வாகனத்தை பயன்படுத்த முடியாது என கூறினார்கள்.
கேள்வி :- ஏன்?
பதில் :- அதனை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்
கேள்வி :- யார் அவ்வாறு கூறியது?
பதில் :- குற்றப் புலனாய்வு பிரிவு.
கேள்வி :- நீங்கள் ஏன் சாட்சியங்களை ஆராய முயற்சிக்கவில்லை.
பதில் :- முயற்சிகள் எடுத்தோம். குறிப்பாக முதல் முறைப்பாடு செய்தவரின் வாக்குமூலம் பெற முயற்சித்தோம்.
கேள்வி :- யார் முதல் முறைப்பாடு செய்தது?
பதில் :- காத்தான்குடி மௌலவி ஒருவர்.
கேள்வி :- யார் அவர் ?
பதில் :- மௌலவி கே.ஆர்.எம் சஹலான்
கேள்வி :- அவரது வாக்குமூலத்தை பதிவு செயதீர்களா ?
பதில் :- அவர் எழுத்து மூலம் நாளக சில்வாவிடம் கொடுத்தார்
கேள்வி :- அவராக கொடுத்தாரா ?
பதில் :- ஆம்
கேள்வி :- வாக்குமூலம் பெறவில்லையா?
பதில் :- இல்லை, முறைப்பாட்டை எழுத்துமூலம் கொடுத்த காரணத்தினால்
கேள்வி :- பின்னர் ஒன்றும் செய்யவில்லையா?
பதில் :- சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு 6.7.2017 மற்றும் சிறிது காலம் கடந்தும் இரண்டு கடிதங்கள் அனுப்பினோம்
கேள்வி :- என்ன எதிர்பார்த்தீர்கள் ?
பதில் :- தவ்ஹித் ஜமாத் அமைப்பை தடுக்கவும் சஹரானை கைது செய்யவும் கோரிக்கை விடுத்தோம். இந்த காலங்களில் பல விசாரணைகளை நடத்தினோம். அதில் ஒன்றுதான் சஹரான் குறித்த விசாரணையாகும்.
கேள்வி :- நீங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிய கோப்பில் குறைபாடுகள் இருப்பது தெரியுமா ?
பதில் :- இருந்திருக்கும் ஆனால் எனக்கு தெரியவில்லை, எமக்கு இருக்கும், கிடைக்கும் தகவல்களை கொண்டே அனுப்பினோம்.
கேள்வி :- சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் கூறும்போதும் தகவல்கள் போதாது என்றே கூறினார்கள் ?
பதில் :- எமக்கு கிடைத்த எம்மிடம் இருந்த தகவல்களை கொண்டே நாம் அனுப்பினோம்
கேள்வி :- சஹரான் முன்வைத்த கதைகள் குறித்து நீங்கள் பார்த்தீர்கள் தானே ?
பதில் :- ஆம்
கேள்வி :- அப்போதும் அது குறித்து சாட்சியங்களை தேடவில்லையா ?
பதில் :- ஆதாரங்கள கிடைக்கவில்லை. இணைய கருத்துக்களை கொண்டே நாம் ஆதாரங்களை தேடினோம்.
கேள்வி :- என்.டி .ஜே அமைப்பை தடுத்திருந்தால் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றிருக்காது என்று தெரியுமா?
பதில் :- ஆம்
கேள்வி :- அப்படியென்றால் நீங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் நெருக்கமான தொடர்பை கையாண்டிருக்க வேண்டும்தானே ?
பதில் :- எமக்கு அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளுக்கு அமையவே நாம் அவர்களுடன் நெருங்குவோம் எத்தனையோ கோப்புகள் அனுப்புவோம் பதில் வருவதற்கு நீண்டகாலம் எடுக்கும் .
கேள்வி :- காரணம் என்ன ?
பதில் :- வேலைப்பளு அவர்களுக்கும் உள்ளது,
கேள்வி:- ஆனால் விளைவு மக்களின் மரணம் ?
பதில் :- சஹரான் குறித்து நாம் பல காரணிகளை தேடி அவரை நெருங்கினோம் ஆனால் எம்மை விட்டு சூட்சமமாக அவர் தப்பித்துகொண்டார்.
கேள்வி :- இராணுவ தளதியின் சாட்சியில் அவர் கூற முயற்சித்தபோது இராணுவ புலனாய்வு அதிகாரிகளை கைதுசெய்யும் விடயத்தில் பொலிசாருடன் முரண்பாடுகள் ஏற்பட்டதாக கூறினார்.
பதில் :- இராணுவ புலனாய்வுடன் நாம் நெருக்கமாக இருந்தோம் இன்றும் அவ்வாறே இருக்கின்றோம்.