ஆஷஸ் என்றால் என்ன?

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1882 ஆம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 7 ஓட்டத்தினால் தோற்கடித்தது.

இப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 85 ஓட்டங்களை  கூட எடுக்க முடியாத இங்கிலாந்து அணி 77 ஓட்டத்துக்குள் சுருண்டு 7 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. இங்கிலாந்து மண்ணில் அவுஸ்திரேலியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

இங்கிலாந்தின் மோசமான ஆட்டத்தை கண்டு வெறுப்படைந்த ‘தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்’ என்ற பத்திரிகை வித்தியாசமான இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டது.

அதில், ‘ஓவலில் 1882 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி இங்கிலாந்து கிரிக்கெட் செத்து விட்டது. அதன் உடலை எரித்து சாம்பலை (ஆ‌ஷஸ்) அவுஸ்திரேலியா எடுத்து செல்கிறது’ என்று எழுதப்பட்டிருந்தது.

அத்துடன் சில வாரங்கள் கழித்து இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா சென்ற போது இழந்த ஆ‌ஷஸை இங்கிலாந்து மீண்டும் கொண்டு வருமா? என்றும் அந்த பத்திரிகை கேள்வி எழுப்பியது.

அப்போதைய இங்கிலாந்து அணித் தவைர் இவோ பிலிக், இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை திரும்ப கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார். அதுபோலவே இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.

இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை திரும்ப வழங்குகிறோம் என்பதை குறிப்பிடும் வகையில் ஸ்டம்பின் மீது வைக்கப்படும் பெய்ல்சை எரித்து அதன் சாம்பலை ஜாடிக்குள் வைத்திருந்தனர். இதன் பின்னணியில் தான் ஆ‌ஷஸ் பெயர் உதயமானது.

இவோ பிலிக் மறைந்த பிறகு அந்த சிறிய ஜாடி 1927 ஆம் ஆண்டு மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

இப்போது அது லண்டன் லார்ட்சில் உள்ள எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மாதிரி கிண்ணம் தான் ஆ‌ஷஸ் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு பரிசாக வழங்கப்படுகிறது.

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடரின் முதலவாது டெஸ்ட் போட்டி இன்றைய தினம் இங்கிலாந்தின் பேர்மிங்கமில் இலங்கை நேரப்படி 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் இத் தொடரானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணிக் குழாமில் ரோரி பெர்ன்ஸ், ஜோசன் ரோய், ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென்ஸ்டோக்ஸ், ஜோனி பெயர்ஸ்டோ, மொய்ன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிரோட், ஜேம்ஸ் அண்டர்சன், சாம் கர்ரன், ஒலி ஸ்டோன் மற்றும் ஜோப்ர ஆர்ச்சர்

டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக் குழாமில் டேவிட் வோர்னர், பான்கிராப்ட், உஷ்மன் கவாஜா, ஸ்டீபன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், மார்னஸ் லாபுசாக்னே, ஜேம்ஸ் பேட்டின்சன், பேட் கம்மின்ஸ், நெதன் லியோன், மிட்செல் ஸ்டாக், பீட்டர் சிடில், ஜோஸ் ஹேசில்வுட், மார்க்கஸ் ஹரிஸ், மிட்செல் மார்ஸ் மற்றும் மைக்கேல் நேசர் ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஆ‌ஷஸ் தொடர் என்பது இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். ஆ‌ஷஸ் கெளரவத்துக்காக களத்தில் உணர்வுபூர்வமாக தனி அடையாளத்துக்காக மோதும் போட்டியாகும்.

குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆ‌ஷஸ் தொடரை 33 முறை அவுஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 5 தொடர் சமநிலையில் முடிந்துள்ளது.

இறுதியாக 2017, 2018 ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த ஆ‌ஷஸ் போட்டித் தொடரை 4–0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா சொந்தமாக்கியது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆ‌ஷஸ் தொடரை அவுஸ்திரேலியா வெற்றிபெற்றதில்லை.

இது இவ்வாறிருக்க பேர்மிங்காமில் 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு 15 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் கூட வெற்றிபெற்றதில்லை.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 346 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் அவுஸ்திரேலிய அணி 144 முறையும், இங்கிலாந்து அணி 108 முறையும் வெற்றிபெற்றுள்ளதுடன் 94 போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.