செலவீனங்களை வரி ஊடாக பெற விநோதமான விண்ணப்பங்கள்!

திருமணச்செலவு, குழந்தை பராமரிப்பு, பல்வைத்தியம் போன்ற – வரியில் மீளப்பெறமுடியாத செலவினங்களையெல்லாம் tax return ஊடாக மீளப்பெற்றுக்கொள்வதற்கு சுமார் ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று  ATO-ஆஸ்திரேலிய வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தரவுகள் குறித்து வரித்திணைக்கள துணை ஆணையர் Karen Foat குறிப்பிடும்போது இந்த தகவலை கூறினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017 ஆம் ஆண்டு இவ்வாறு முறையற்ற கோரிக்கைகள் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

Tax return விண்ணப்பங்களில் தமக்கு கிடைத்த விநோதமான சில சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டும்போது – ஒருவர் தனது திருமண வரவேற்பிற்குச் செலவான 58 ஆயிரம் டொலர்களை வெளிநாட்டில் இடம்பெற்ற மாநாட்டு செலவு என்று பதிவு செய்து அந்த தொகையை மீளப்பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பத்தில் சேர்த்திருந்தார்.கணவனும் மனைவியுமாக இணைந்து இந்த செலவை கோரியிருந்தபோது, அது கண்டுபிடிக்கப்பட்டு குறிப்பிட்ட நபர் மீது வரித்திணைக்களத்திடம் மோசடி செய்ய முற்பட்டதாக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதேபோன்று  வேலை ஒன்றைப்பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அழகான புன்னகை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பற்சிகிச்சைக்கான செலவுகளை வரி விண்ணப்பத்தில் சிலர் சேர்த்திருந்ததாகவும் மற்றுமொருவர் தனது பிள்ளைக்கு பரிசளித்த Lego set செலவினத்தை வரி ஊடாக பெற முயன்றதாகவும் Karen Foat தெரிவித்தார்.

தாங்கள் செலுத்திய வரியிலிருந்து மீளப்பெறும் தொகை குறித்து ஆஸ்திரேலியர்கள் அனைவருமே மிகுந்த ஆர்வமுடையவர்களாக உள்ளார்கள் என்பது உண்மைதான். ஆனால், அந்த படிமுறையை அனைவரும் சரியாக நிறைவேற்றவேண்டும். சட்ட ரீதியாக பெற்றுக்கொள்ளவேண்டும். மீறுபவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அனுப்பப்படும் – என்று Karen Foat கூறினார்.