சிறிலங்கா விமானநிலையத்தில் கைதி போல நடத்தப்பட்டேன்!

பாக்கிஸ்தானை சேர்ந்த சுற்றுலாப்பயணியொருவர் உரிய ஆவணங்களை வைத்திருந்த போதிலும் சிறிலங்கா  அதிகாரிகள் தன்னை நாடு கடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானை சேர்ந்த சுற்றுப்பயண காணொளி புளொக்கரான ஹஸ்னைன் மன்சூர் என்பவரே முகநூலில் சிறிலங்காவில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தினை பதிவு செய்துள்ளார்.

பாக்கிஸ்தானை சேர்ந்த 2000ற்கும் அதிகமானவர்கள் சுற்றுலாப்பயண விசாவில் இலங்கை வந்து அடைக்கலம் கோரியுள்ளனர் என தெரிவித்த சிறிலங்கா அதிகாரிகள் தன்னை திருப்பியனுப்பினர் என தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் தன்னை மலேசியா செல்லும் விமானத்தில் அனுப்பபோவதாக தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் தங்கியிருப்பதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தபோதிலும் அதிகாரிகள் தங்களது முடிவை மாற்றுவதற்கு தயாராகயிருக்கவில்லை என மன்சூர் தெரிவித்துள்ளார்

தன்னுடன் வேறு இரு குடும்பத்தையும் அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர் அந்த குடும்பங்களில் குழந்தைகள் சிறுவர்கள் காணப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் மலேசியாவிலிருந்து சிறிலங்கா விமான நிலையம் சென்றடைந்தேன்  அங்கு குடிவரவு திணைக்கள அதிகாரியின் பகுதிக்கு சென்று எனது ஆவணங்களை சமர்ப்பித்தேன் அதன் பின்னர் குடிவரவு திணைக்களத்தின் பொறுப்பதிகாரியின் அறைக்கு வருமாறு என்னை அழைத்தனர் நான் அங்கு சென்றவேளை மேலும் இரு குடும்பங்கள் அங்கு காணப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

ஏன் என்னை அழைத்தீர்கள் என நான் கேட்டதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை நான் இரண்டு மணித்தியாலங்களாக அங்கு இருந்தேன் மற்றைய இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்களும் என்னுடன் இரண்டு மணித்தியாலங்கள் அங்கிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்

தன்னை நாடு கடத்துவதற்கான காரணத்தை கேட்டவேளை அதிகாரிகள் உறுதியான பதிலை வழங்கவில்லை என மன்சூர் தெரிவித்துள்ளார்.

என்னை பற்றி அவர்களிற்கு சந்தேகமுள்ளதாக குடிவரவு திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போலியான காரணம் என குறிப்பிட்டுள்ள அவர் தனது விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு உதவக்கூடிய தொலைக்காட்சியுடன் தன்னை தொடர்புபடுத்தி விடுமாறு மன்சூர் முகநூலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசிக்கும் ஒவ்வொரு பாக்கிஸ்தான் பிரஜையும் இந்த செய்தியை வேகமாக  பரப்பவேண்டும்,என தெரிவித்துள்ள ஹஸ்னைன் மன்சூர் பாக்கிஸ்தான் பிரதமரும் ஏனைய அதிகாரிகளும் இந்த விடயத்தில் உதவவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அங்கு காணப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் நான் மடிக்கணிணியில் என்ன செய்கின்றேன் என்பதை அடிக்கடி வந்து பார்த்துச்சென்றார் எங்களை சிறைக்கைதிகள் போல நடத்தினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தங்கியிருப்பதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தபோதிலும் அதிகாரிகள் தங்களது முடிவை மாற்றுவதற்கு தயாராகயிருக்கவில்லை என மன்சூர் தெரிவித்துள்ளார்.