இலங்கை, இரண்டு தேர்தல்களை எதிர்நோக்கி நிற்கிறது. அதில், இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முதன்மையானது.
இந்தத் தேர்தலில், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி, அரசியல் நிபுணர்கள் ஒவ்வொருவராகச் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.
இலங்கையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல், தமிழ் மக்களின் தெரிவுகள் அறம் சார்ந்ததாகவோ, மக்கள் நலன் சார்ந்ததாகவோ இருந்ததில்லை. இம்முறையும், அறம் சார்ந்தும் வேலைத்திட்டம் சார்ந்தும் வாக்களிக்கும் வாய்ப்புக் குறைவாகவே உள்ளது.
தமிழர்களின் தேர்தல் அரசியல், எப்போதும் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது, உணர்வுபூர்வமான அரசியல் கோஷங்களால் கட்டியெழுப்பப்பட்டு, வழி நடத்தப்பட்டு வந்துள்ளது. அதன் மோசமான விளைவுகளைத் தமிழர்களே அனுபவித்துள்ளார்கள்.
‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற சூத்திரம், அரசியலில் பொருந்தி வருவது இல்லை என்ற உண்மையை, இத்தனை ஆண்டுகளின் பின்னரும், தமிழ் மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அடுத்த தேர்தலிலும், இதே நிலை தொடரலாம் என்று, எதிர்பார்க்க நியாயம் உண்டு.
‘பேரம் பேசும் அரசியல் சக்தி’ என்ற வார்த்தை ஜாலம், குறிப்பாகப் போரின் பின்னர் ஒலித்து வந்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக, ஓர் இன அழிப்புப் போரை மேற்கொண்ட இராணுவத் தளபதிக்கு, ஜனாதிபதித் தேர்தலில் கொடுக்கப்பட்ட முழுமையான ஆதரவு தொட்டு, கடந்த முறை சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட ஆதரவு வரை, அனைத்தும், பேரம் பேசும் அரசியல் என்ற சாக்கடைக்குள் விழுந்து புரண்டதன் விளைவுகள்தான்.
இந்தப் பேரம் பேசும் அரசியல், காணாமல் போன ஒருவரையோ, அரசியல் கைதிகளையோ விடுவிக்க, வக்கற்ற நிலையில் தொடர்ந்திருக்கிறது என்பது, மறுக்க இயலாத உண்மை.
இவற்றைச் சுயவிமர்சன அடிப்படையில் உள்வாங்கிச் செரித்து, அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து, தமிழ் மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது. இலங்கையின் பிரதானமான கட்சிகள், பேரினவாதத்தின் செல்லப் பிள்ளைகள் என்பதை மறக்கலாகாது.
ஜனநாயகத்தையும் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வையும் பொருளாதாரத்தின் சீரழிவுப் போக்கைத் தடுக்கவும் கூடிய வல்லமை இக்கட்சிகளுக்கு இல்லை.
இலங்கையில் வலுவடைந்து இருக்கின்ற பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் நிழலிலேயே, இந்தத் தேர்தல் நடைபெறுகிறது என்பதை, மறக்கலாகாது. இத்தேர்தலில், யார் வென்றாலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை என்பது, ஒழியப் போவதில்லை.
இது ஜனநாயக மறுப்பையும் ஊழலையும் இராணுவச் செல்வாக்கையும் தொடர்ந்தும் நிறுவனமயப்படுத்தி, நிலைகொள்ளச் செய்யும் பணியைச் செவ்வனே ஆற்றும்.
ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்தத் தடையாக, அரச நிறுவன ஆதரவும் அந்நிய ஆதரவுமுடைய சிங்கள பௌத்த பாசிஸம், அன்றாட வாழ்வில் அதிகரித்துவரும் இராணுவச் செயற்பாடுகள், ஊழல்கள் மூலமும் குற்றச் செயல்கள் மூலமும் வன்முறை மூலமும் தன்னை வளப்படுத்திக் கொண்ட, ஒரு வர்க்கத்தின் குண்டர் படைகள் உட்பட்ட, ஜனநாயக விரோத சக்திகள் முளைத்து வலுத்துள்ளன.
அதேவேளை, ஜனநாயகத்தின் பெயராலும் தேசியத்தின் பெயராலும், தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படாமல் இருப்பதும் அவசியமானது.
குறுந்தேசியம், ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் முழு நாட்டுக்கும் தவறிழைத்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிந்திய, அரச விரோத எழுச்சிகள் யாவும், அரசியல் தலைமைகள் மீதான, அவநம்பிக்கையின் விளைவுகள் என்பது நோக்கத்தக்கது.
எந்த நாடாளுமன்ற அரசியல் கட்சியும், மக்களின் குறைகளைப் பேசாது, தனக்கு வாக்குத் திரட்டும் பிரச்சினைகளையே நோக்கும். அங்கும், வெறுப்பு அரசியலை வளர்த்துத் தன்னைத் தக்கவைப்பதே நோக்கமாயிருக்கும்.
முஸ்லிம் விரோத உணர்வு, சிங்களத் தேசியவாதத்தின் ஒரு பகுதி. சிங்கள பௌத்த தேசியமாகிய பின், அது முஸ்லிம்களுக்குச் சமூகத்தில் இடத்தை மறுத்தது.
தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் இணைக்கத் தவறிய தமிழ்த் தேசியம், தனது தேர்தல் கணக்குகளின் அடிப்படையில், முஸ்லிம் விரோத அரசியலை முன்னெடுத்தது. முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில், அவர்களுடைய நலன்களை, முஸ்லிம் கட்சிகள் முன்னெடுத்ததில்லை.
முஸ்லிம் சமூகத்துக்குள் உருவாகிவந்த நெருக்கடிகளைத் தலைமைகள் கவனியாமைக்கு, முஸ்லிம்கள் கொடுத்துள்ள விலை பெரிது. இவை, நாம் கற்றதும் மறந்ததுமான பாடங்கள்.
இந்தப் பின்புலத்தில், மக்கள் நலன் நோக்கிய தெரிவு, இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. தமிழ் மக்கள், இந்தத் தேர்தலில் சொல்ல விரும்புகிற வலுவான செய்தி என்ன என்பதை, மக்களே தீர்மானித்தாக வேண்டும்.
அதை, அரசியல்வாதிகளின் கைகளில் ஒப்படைத்துவிட்டு, வேடிக்கை பார்த்தால் அதன் தீய விளைவுகளை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அனுபவிக்க வேண்டி இருக்கும்.
-
ஏகலைன்